திக்... திக்... பங்களா! (15)
சென்றவாரம்: விடுமுறைக்கு, குற்றால மாளிகைக்கு வந்த வினுவும், மதுவும் மர்மங்களை துப்பறிய, போட்டோக்கள் எடுத்தனர். அவற்றை பிரிண்ட் போட்ட போது, வினோத எழுத்துக்கள் தென்பட, சாக்கடையில் வீசினர். சாக்கடை சிவப்பு குழம்பாய் மாறியது. இனி -சாக்கடை, சிவப்பு குழம்பாய் மாறியது கண்டு பீதி ஏற்பட்டது.பங்களாவிற்கு திரும்ப யோசித்தனர் மதுவும், வினுவும். இருள் சூழ்ந்திருந்தது.வினு வைத்திருந்த கேமரா, திடீர் என வெடித்து துாள் துாளாகி சிதறியது. கையில் ஒட்டியிருந்த துகள்களை, தெரு குழாயில் கழுவிய போது, சிவப்பு குழம்பாய் மாறி ஓடியது.'எனக்கு பயமாயிருக்கு வினு...'சோப் வாங்கி மீண்டும் கை கழுவினான். சிவப்பு நிறம் படர்ந்திருந்தது.'சற்று அமைதியாய் இரு...' 'வினு... அடுத்து செய்ய வேண்டியதை பேசுவோம்...''என்ன செய்யலாம்...''சென்னைக்கு திரும்பிடுவோம்; நடப்பது, கற்பனை செய்ததை விட பல மடங்கு விபரீதமா இருக்கு. நாம் தமிழ் சினிமா நடிகர்கள் அல்ல; நமக்கு ஏதாவது ஆச்சுன்னா, பெற்றோர் தாங்க மாட்டாங்க; கொளஞ்சியின் எச்சரிக்கையை இனியாவது மதிப்போம்...'யோசித்தான் வினு. கோயிலுக்கு சென்றனர். அங்குள்ள கிணற்றில் கை கழுவியதும் சிவப்பு கறை மறைந்தது. உள்ளங்கையில், ரோஜாப்பூ வாசனை வீசியது.அர்ச்சகரிடம், 'திருவுளச் சீட்டு போட்டு பார்க்க வேண்டும்...' என்றனர்.சிரித்தபடி இரண்டு பூக்களை எடுத்தார் அர்ச்சகர். ஒன்று: மல்லிகை; மற்றொன்று: செவ்வரளி. மனதிற்குள், 'செவ்வரளி வந்தால், உடனே சென்னைக்கு பயணம்; மல்லிகை வந்தால் கெட்ட ஆவிகளுடன் தொடர்ந்து போராடுவது' என முடிவு செய்தான் வினு.பூக்களை குலுக்கி போட்டதும், பரம்பொருள் புன்னகைத்தது. நொடியில், மல்லிகைப் பூவை எடுத்து, 'போதுமா செல்லங்களா...' என்றபடி புன்னகைத்தார் அர்ச்சகர்.திருப்தியுடன் வெளியே வந்தனர்.'அடுத்து என்ன வினு...''மேலும் சில வாரங்கள், பழைய குற்றாலத்தில் தங்க பெற்றோர் அனுமதி கேக்கப் போறேன்...'அப்பாவின் அலைபேசி எண்ணை சுழற்றினான். பலமுறை முயற்சித்த பின், எதிர்முனை உயிர்த்தது. இரைச்சலுடன், பலவகை பேச்சு குரல்கள் கேட்டன. எதிர்முனையில் பேசுவது அப்பா அல்ல என உணர்ந்து, தொடர்பை துண்டிக்க முயன்றான்.துண்டித்த பின்னும், உயிரோட்டமாய், 'கிர்' என உறுமிக் கொண்டிருந்தது தொலைபேசி. புரியாமல் நின்றான். 'ஏதோ கோளாறு தம்பி...' என்றார் டெலிபோன் பூத் கடைக்காரர்.அப்போது வந்த ஒரு ஆசாமி, 'திருச்சிக்கு போன் செய்யணும்...' என்றான்.'ரிப்பேரா இருக்கு ஐயா...'குறுக்கிட்ட வினு, 'எதுக்கும் அவரை முயற்சி செய்ய சொல்லுங்களேன்...' என்றான்.வந்த ஆசாமி அவநம்பிக்கையுடன், டயல் செய்தான். திரையில், சிவப்பு எண்கள் விழ, எதிர்முனை சரியாக இயங்கி தொடர்பு கிடைத்தது.பூத் உரிமையாளர் புரியாமல் வினுவை பார்த்தார். எதையும் கண்டுகொள்ளாமல் மதுவுடன் நடந்தான்.'அப்பாவுடன் பேச விட மாட்டேன்டியே...' என்று குறைப்பட்டாள் மது.'பேசியிருந்தா தலை கிறுகிறுத்துப் போயிருப்ப...''என்னடா நடந்தது...'விளக்கினான்.'அப்படின்னா துர் ஆவிகள், 24 மணிநேரமும் கண்காணிக்குதுன்னு சொல்லு...'உதடுகளை பிதுக்கி தலையாட்டினான்.'பசிக்கு... ஏதாவது சாப்பிடலாமா...''வேணாம்... பழைய குற்றாலம் பங்களா போயிடலாம்...'டவுன்பஸ்சில், மலை மாளிகையை அடைந்தனர். குதிரை லாயத்தில் இருந்தான் சுப்பையன். சமையல் கூடத்தில் இருந்தாள் செண்பா. ஏதோ செய்து கொண்டிருந்த தாத்தா, பாட்டியும் உணவு மேஜையில் வந்து அமர்ந்தனர்.உள்ளே வந்ததும் நள்ளிரவு பிரமை!'வாங்க குழந்தைகளா... ஏன் இவ்வளவு நேரம்...''லேட்டாயிருச்சு... அதனால் தான் லேட்...' என்றாள் குறும்பாக மது.'உங்களுக்காகத் தான் சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்கோம்...''இதோ வருகிறோம் தாத்தா...' என, கை கழுவி திரும்பினர்.'எங்கே போயிருந்தீங்க...''தென்காசி கோவிலுக்கு...'இருண்டார் தாத்தா. கண்களில் மிரட்சி தெரிந்தது.'ஆமாம்... நீ எடுத்து போன கேமரா எங்க...''காணாமல் போயிடுச்சு...''அப்படின்னா எடுத்த படங்கள் எல்லாம்...''காலி; கேமராவோட, பஸ் ஸ்டான்ட் பக்கம் வந்தபோது, ஒருத்தன் பிடுங்கிட்டு ஓடிட்டான்...''அப்படியா... வினோதமாயிருக்கே...''ஆமாம்...''சரி, சாப்பிடலாமா...' உணவு பரிமாறினாள் செண்பா. அவள் பார்வையில், 'குட்டி குரங்குகளா... தென்காசியில என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரியும்! எங்களுக்கே காது குத்தி பாக்குறீங்களா... எவ்வளவு துாரம் ஓடிப் பாப்பீங்க. உங்க கழுத்துக் கயிறு எங்க கிட்ட தான் இருக்கு. எப்ப சுண்டணும், எப்ப சுருக்கை இறுக்கணும்ன்னு தெரியும்' என்ற பாவனை தெரிந்தது.நள்ளிரவு வரை மதுவும், வினுவும், செஸ் விளையாடினர். பின் துாங்கி போயினர். கெட்ட கனவு வர பதறி எழுந்தான் வினு.சுவர் கடிகாரம் நள்ளிரவு, 12:00 மணியை காட்டியது. ஆனால், அறைக்குள் நண்பகல் போல் வெம்மையாக இருந்தது. குளிர் நீர் பருகினான் வினு. என்ன நினைத்துக்கொண்டானோ, வளர்ப்பு மிருகங்களை அடைத்து வைத்திருந்த, பெட்டியை மெதுவாக திறந்தான்.'மினி... என் சுண்டெலியே; ஸ்லோ... என் ஆமைக்குட்டியே, உங்களுக்கு ஆபத்து என்பது போல், கனவு கண்டேன்... வெளியே வாருங்கள்...'மெதுவாக தலையை நீட்டியது சுண்டெலி; அதன் வாயில் புதிதாய் இரண்டு பயங்கர பற்கள் முளைத்திருந்தன. சாம்பல் நிறத்திலிருந்து, அடர்த்தியான கறுப்பு நிறத்துக்கு மாறியிருந்தது. கண்கள் ரத்த சிவப்பு நிறத்தில் பிரகாசித்தன.'கீச் கீச்' என சத்தம் போடாமல், 'கிர்...' என உறுமியது.ரத்த சிவப்பு நிற ஓட்டுடன் காணப்பட்டது, ஆமைக்குட்டி. கால்களில், 'ட்ராகுலா' போல் நகங்கள் நீண்டிருந்தன. இரண்டும், கொலை வெறியுடன் வினுவை நோக்கி பாய்ந்தன!- தொடரும்...