கோடையை இதமாக்க!
துன்பம் தரும் கோடையை இதமாக்க எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சில...* கோடை காலத்தில், நன்னாரி சர்பத் பயன்படுத்தலாம். இது தவிர, பானை தண்ணீரில், கைப்பிடி அளவு நன்னாரி வேரை போட்டு வைத்தால், சுவையுடன், குளிர்ச்சியும் தரும்* கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க, வெள்ளரிக்காய் சாற்றுடன், பீட்ரூட் சாறு சேர்த்து பருகலாம். உடல் சூடு தணியும். பித்தப்பையில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்* மோரில், பச்சை மிளகாய்க்கு மாற்றாக, சிறிதளவு சுக்கு பொடி சேருங்கள். சுவை துாக்கலாகும். உடலுக்கும் நல்லது* கோடை காலத்தில், முட்டை விரைவில் கெட்டு விடும். வேப்பிலைக்குள் முட்டையை வைத்தால், சீக்கிரம் கெட்டுப் போகாது* வியர்வை நாற்றத்தால் அவதிப்படுவோர் தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து குளிக்கலாம்* வெங்காயத்தை நறுக்கி, பசு நெய்யில் வதக்கி, காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சூட்டால் ஏற்படும் மூல நோய் குணமாகும்* கோடை காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க, கறிவேப்பிலையை அரைத்து, மோரில் கலக்கி குடிக்கலாம்* வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் பருகி வர, உடல் உஷ்ணம் தணியும்; மலச்சிக்கல் நீங்கும்* சுட்டெரிக்கும் வெயிலில் வியர்க்குருவால் அவதிப்படுவோர், கோதுமை மாவை, புளித்த கஞ்சியில் கலந்து, உடலில் பூசிக் குளிக்கலாம்* தண்ணீரில், வெட்டிவேரை நறுக்கி போட்டு ஊறியதும் குளித்தால் உடலில், வியர்வை நாற்றம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.- சி.ஆர்.ஹரிஹரன்