நாளை வருவான் நாயகன்! (5)
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவப் பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை, மும்பையில் சந்தித்ததை விவரித்தார் உறவினர் செல்வானந்தம். அடுத்தவாரம் தாயாரை அழைக்க வருவது பற்றி கூறினார். இது பற்றி, வீட்டு உரிமையாளரிடம் ஆலோசனை பெற்றார் லட்சுமி. இனி -சூரியராஜாவின் அப்பா முத்துமாணிக்கம் கூலித் தொழிலாளி!நிரந்தர வேலை இல்லை; அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து, அந்த வருமானத்தில் கவுரவமாக குடும்பத்தை நடத்தினார்.சிறப்பாக கற்று தேர்ந்தால் மட்டுமே, உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற உண்மையை, அனுபவ பாடமாக உணர்ந்திருந்தார். அது பற்றி தீவிரமாக சிந்தித்தார்.தனக்கு முறையாக கிடைக்காத கல்வியும், சமூக அந்தஸ்தும், தன் பிள்ளைக்கு கிடைத்தாக வேண்டும் என்பதில், தீவிரம் காட்டினார், முத்துமாணிக்கம். அதை சரியாக நிறைவேற்றும் தாகம், மனதில் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அதையே லட்சியமாக கொண்டு பாடுபட்டார்!மகன் சூரியராஜா, 7ம் வகுப்பு படித்தபோதே, நல்ல பண்புகளை வளர்க்க அன்பாக அறிவுரைக்க துவங்கினார். தேவைப்படும் இடத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி கண்டித்து, திருத்தினார்.ஆரம்பத்தில், தந்தை சொல்லை மந்திரமாக மதித்து, மறுபேச்சின்றி கடைபிடித்து வந்தான் சூரியராஜா. உயர்நிலை படிப்பை முடித்து, மேல்நிலை படிப்புக்கு பக்கத்து ஊர் பள்ளிக்கு சென்றான். புதிய பள்ளியில், பிஞ்சிலேயே பழுத்திருந்த சிலர், துரதிருஷ்டவசமாக நண்பர்களாக வாய்த்தனர். அப்போது, அவனிடம் சில மாற்றங்கள் தெரிந்தன. நட்பு கொண்டவர்களிடம் இருந்து தவறான பழக்கங்கள் வந்தன. இந்த பழக்கங்கள் அவன் பண்பை அடியோடு மாற்றியது.அப்பாவின் அறிவுரைகள் அவனுக்கு அர்த்தமற்றதாக தோன்றின; கட்டுப்பாடுகள் கசப்பூட்டின; தான்தோன்றியாக நடக்க துவங்கினான். மூத்தோர் ஆலோசனைகளை புறந்தள்ளினான்.மகனிடம் மாறுதல்களை கண்ட தந்தையால், முதலில் நம்ப முடியவில்லை.விளையாட்டு தனமாக நடந்து கொள்கிறான் என்று தான் எண்ணினார்.மாற்றத்தை முழுதும் அறிந்த உடன் மனமொடிந்தார்.இயன்றவரை அறிவுரை கூறியும், அடித்தும் கண்டித்தார்; ஆயினும் அவன் திருந்தவில்லை.லட்சுமியின் மனதில் இந்த காட்சிகள் விரிந்து மறைந்து கொண்டிருந்தன.அப்போது -''என்ன பாட்டி, 'லைட்' கூட போடாம இருட்டிலேயே உட்கார்ந்திருக்கீங்க...'' அன்பான குரல் கேட்டு, நிகழ்காலத்துக்கு திரும்பினார் லட்சுமி.''யாரு வேலுவா... வாப்பா... ஏதோ யோசனையில் உட்கார்ந்துட்டேன்; அந்த சுவிட்சை போடுப்பா...''எதிர் வீட்டு சிறுவன் வேலு, மின் ஒளியை ஏற்றி வெளிச்சம் உண்டாக்கினான். பின் நெகிழ்வுடன், ''அம்மா சொன்னாங்க... நீங்க இந்த ஊரை விட்டே ரொம்ப துாரத்துல போயிடுவீங்களாமே! இனிமே இந்த ஊர் பக்கமே வரவே மாட்டிங்களாம்! ஏன் பாட்டி அது மாதிரி போறீங்க... எனக்கு அழுகையா வருது...'' என்றான்.இந்த வார்த்தைகளை கேட்டதும், லட்சுமிக்கும் அழுகை வந்தது.இதற்குள், வேலுவின் அம்மா அழைக்கும் குரல் கேட்டது.''போயிட்டு உடனே வர்றேன் பாட்டி...'' என்றபடி ஓடினான் சிறுவன் வேலு.லட்சுமியின் மனதில் எண்ணங்கள் ஓடின.'ஆம்... இந்த வீட்டை விட்டு, ஊரை விட்டு, நீண்ட காலம் சுவாசித்த வங்க கடல் காற்றை விட்டு, நெடுந்துாரம் போய் விட போகிறேன்! என் மகன் வாழும் அரபி கடலோரம் சென்று விட போகிறேன்...'இனி, வாழ்வில் தனிமையும் விரக்தியும் இருக்க கூடாது. உறவுகள் தரும் அன்பு, பாசம் தான் உடனடி தேவை... அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை... தோப்பில் சேராமல் தனி மரமாகவே அழிந்து போய் விடுவேனோ என்ற அச்சம் இருந்தது. இப்போது அது மறைந்து போய் விட்டது...'இனி, நான் தனி மரமல்ல; பேரனும் பிறந்திருக்கிறான்; என் மாங்கல்ய நாயகன் தான், மறுபடியும் மண்ணுலகத்திற்கு பேரனாக திரும்பியுள்ளார்; தோப்பில் மரமாக இணைந்து விட்டேன்' என எண்ணங்களில் மிதந்தார் லட்சுமி.அக்கம் பக்கத்தில் வசித்த பலரும் பல்வேறு கருத்துகளை கூறியிருந்தனர். அதில், அச்சம் தரும் அபிப்பிராயங்களும் இருந்தன.அன்று ஞாயிற்றுக் கிழமை -அதிகாலையே எழுந்த லட்சுமி, பிரிந்து சென்ற மகன் வரவை எதிர்பார்த்து, அவனுக்கு விருப்பமான உணவுகளை சமைக்கும் பணியில் ஈடுபட்டார்.இடையிடையே அவரை தேடி வந்த அக்கம் பக்கத்து நட்புகளை, இன்முகம், உற்சாகத்துடன் வரவேற்று உரையாடினார்.''என்ன லட்சுமி... பாயாசம் வாசனை ஆளையே துாக்குது! வடையும் உண்டா...''சுவையாக கேட்டபடி வந்தார் தோழி பத்மா.''நல்ல நேரத்துக்கு தான் வந்திருக்க... இதோ... இந்த அடுப்பை கொஞ்சம் பார்த்துக்கயேன்! வடைக்கு மாவு அரைச்சிடுறேன்...'' என்றார் உரிமையாக!''வடை மாவு நான் அரைச்சு தர்றேன்... நீ அந்த பாயாசத்தை பக்குவம் பார்த்து இறக்கிட்டு, அடுப்புல அடுத்த வேலைய பாரு...'' என்றார் பத்மா.புன்னகையுடன் அதை ஏற்றார் லட்சுமி.தொடர்ந்து, ''அப்புறம், சூரியராஜா எத்தனை மணிக்கு வரானாம்...'' என்று கேட்டார் பத்மா.- தொடரும்...நெய்வேலி ராமன்ஜி