வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 42; பொறியியல் கல்லுாரியில், இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வமுடையவன்; சிறுவர்மலர் படிக்கும் போது, என் கதைகளுக்கான கருவை தேர்ந்தெடுக்கிறேன். என் மகன்கள், மத்திய பாடத்திட்ட பள்ளிகளில் படிப்பதால் தமிழ் மொழியில் வாசிக்க பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். கொரோனா தொற்று அதிகரித்திருந்த போது, சிறப்பு சலுகை விலையில் தினமலர் நாளிதழ் கிடைத்தது. வீட்டு வாசற்படிக்கு வந்து கொண்டிருக்கிறது.உரிய நேரம் கிடைத்ததால் சிறுவர்மலர் இதழை வாசித்து, நன்றாக பயிற்சி பெற்றனர் மகன்கள். இப்போது, சரளமாக வாசிக்கும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். தினமலர் நாளிதழில் பொது அறிவு களஞ்சியமாக வரும், 'பட்டம்' பகுதியையும் விரும்பி படிக்கின்றனர்.சிறுவர்மலர் இதழில் புள்ளிகளை இணைத்து, படம் வரைந்து, வண்ணம் தீட்டி மகிழ்கின்றனர். மேலும், 'உங்கள் பக்கம்!' பகுதியில், என் மூத்த மகன் வரைந்த ஓவியம் பிரசுரமாகி, 500 ரூபாய் பரிசு பெற்றது. அதில், 100 ரூபாயை, 'படிக்கட்டுகள்' என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்தான். அது, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.பள்ளிப்பாட நேரம் தவிர, ஆன்மிகமலர், வாரமலர் இதழ்களையும் விரும்பி வாசிக்கின்றனர். படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதில், சிறுவர்மலர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!- எஸ்.மலைச்சாமி, மதுரை.