வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 50; சென்னையில் அரசுப் பணியாளராக உள்ளேன். சனிக்கிழமை வந்தாலே, என் வயது, பத்தாக குறைந்து விடுகிறது. அன்று தானே, 'சிறுவர்மலர்' இதழ் மலர்கிறது. பக்கத்திற்கு பக்கம் பயனுள்ள தகவல்களை தருகிறது. ஒவ்வொரு வாரமும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி வாயிலாக பசுமை நிறைந்த பள்ளி நாட்களை அசைப்போட வைக்கிறது. புதிய தகவல்களை, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியில் தேடுவேன். பொது அறிவை வளர்க்கும் களமாக அது உள்ளது.கவலைகளை மறக்க செய்து, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி சிரிக்க வைக்கிறது. மனப் பிரச்னைகளுக்கு, 'இளஸ் மனஸ்!' பகுதி தீர்வு தருகிறது. அறிவுரை, நீதிக்கதைகள் கூற தாத்தா, பாட்டி இல்லாத குடும்பங்களுக்கு, நல்ல ஆசானாய் திகழ்கிறது, சிறுவர்மலர்.இந்த இதழை எனக்கு அறிமுகப்படுத்தினார், என் தந்தை. என் மகன், மகளுக்கு, நான் அறிமுகப்படுத்தினேன். குடும்பங்களில் வாழையடி வாழையாக, நிலைத்தும், நீடித்தும் நிற்கும் அறிவு மலராக விளங்குகிறது, சிறுவர்மலர்!- ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.