பிரதமரை நேரில் சந்தித்தோம்!
ஸ்ரீவில்லிபுத்தூர், செட்டியக்குடித் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பாரத பிரதமராக இருந்த நேரு மாமா, மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு காரில் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் பள்ளி இருந்த சாலை வழியாக கார் செல்வதாக பயண திட்டமிருந்தது. பாரத பிரதமராச்சே அவரை எங்களால் பார்க்க முடியுமா? பார்க்க வேண்டும் என்ற ஆவல் எங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் இருந்தது.காலை, பள்ளிக்கு முன்னுள்ள சாலையில் மாணவ, மாணவியர் அனைவரும் வரிசையாக நின்றோம். அதிகாரிகள், நேரு (பிரதமர்) வரும் கார் மெதுவாகச் செல்லும். ஆனால், நிற்காது. அப்போது அவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். ஆனால், நடந்ததே வேறு.எங்கள் தலைமையாசிரியர் அடைக்கலம், மாணவர்களிடம் ஆளுக்கொரு ரோஜா மலரைக் கொடுத்து நிற்க வைத்தார். தானும் ஒரு ரோஜா மாலையைக் கையில் வைத்துக் கொண்டார்.நேரு மாமா கார் எங்கள் பள்ளிக்கு அருகில் வந்தது. ரோஜா மலர்களுடன் நின்றிருந்த எங்களைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்னார். கீழே இறங்கி வந்து எங்களிடம் உள்ள பூக்களை வாங்கினார். தலைமையாசிரியரும் நேரு மாமாவிற்கு மாலையை அணிவித்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார் எங்கள் தலைமையாசிரியர்.பள்ளிக்கு முன் நேருவை வரவேற்பது, தம் கையால் அவருக்கு மாலை அணிவிப்பது. இரண்டும் நிறைவேறிவிட்டன. எங்களுக்கும் பேரானந்தம். ஒரு நாட்டின் பிரதமரைச் சந்திப்பது என்றால் சும்மாவா? அதுவும் எங்கள் கையால் அவருக்கு ரோஜாப் பூ கொடுப்பது என்றால் கேட்கவே வேண்டாம் தானே. நடக்கவே முடியாத விஷயம். ஆனால், அவை இரண்டும் அன்று நிறைவேறின.இந்நிகழ்ச்சியை என்றும் எங்களால் மறக்கவே முடியாது. இந்நிகழ்வு எங்கள் வாழ்க்கையில் பசுமை நிறைந்த நினைவாக இன்றும் உள்ளது.- ப.வெள்ளை, திருவில்லிபுத்தூர்.