மணநாள் பரிசு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, எஸ்.எம்.எஸ். உயர்நிலை பள்ளியில், 1953ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது தலைமை ஆசிரியராக இருந்தார் ஆராமுதய்யங்கார். பாடங்களை கற்க துாண்டுவார்.ஆண்டு பொதுதேர்வில், தேர்ச்சி பெற்றதும் சான்றிதழை தந்து, சிறப்பாக வாழ உரிய அறிவுரைகள் வழங்கினார்.பின், தனிப்பட்ட முறையில் என்னிடம், 'உன் அண்ணன், படிக்கும் போதே திருமணம் செய்து கொண்டான். அதனால், எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சையில் அவனால் தேர்ச்சி பெற முடியவில்லை. நீ கெட்டிக்காரன்; நன்றாக படித்து சிறப்பாக தேர்ச்சி அடைந்துள்ளாய். கல்லுாரி படிப்பை முடித்து, வேலைக்கு சென்ற பின், திருமணம் செய்து கொள்...' என ஆசி கூறினார்.அதை மனதில் பதித்தேன். கல்லுாரி படிப்பை சிறப்பாக முடித்து, தட்டச்சராக அரசு பணியில் சேர்ந்தேன். நிலையான வருமானம் ஈட்ட துவங்கிய பின், மே 13, 1959ல் திருமணம் செய்து கொண்டேன்.என் வயது, 88; வருவாய்த்துறையில் துணை வட்டாட்சியராக பணி உயர்வுடன் ஓய்வு பெற்றேன். அந்த தலைமை ஆசிரியர் ஆசியால், 64ம் திருமண நாளை, மனைவி புவனேஸ்வரியுடன் இன்று கொண்டாடி மகிழ்கிறேன்.- ஏ.ராமன், சென்னை.தொடர்புக்கு: 94444 87454