75வது சுதந்திர தினம்! - சில நினைவுகள்!
இந்திய சுதந்திர தினமும், கோளறு பதிகமும்!இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த, ஆகஸ்ட் 15, 1947 தினத்தில், திருஞானசம்பந்தர் அருளிய, கோளறு பதிகம் முக்கிய பங்கு வகித்தது.'பிரிட்டிஷ் அரசிடமிருந்து, இந்தியருக்கு ஆட்சி மாற்றம் செய்வதை உறுதிப்படுத்த, தமிழ் மன்னர்கள் கையில் இருந்த செங்கோல் போன்று செய்து, ஆட்சி மாற்றம் செய்யலாம்...' என்றார், ராஜாஜி.அதற்காக சைவச் சின்னம் பொறித்த பொன்னாலான செங்கோல், சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் தயார் செய்யப்பட்டது.மவுண்ட்பேட்டன் பிரபுவிடமிருந்து செங்கோலைப் பெற்ற திருவாவடுதுறை இளைய தம்பிரான், செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, சுத்தி செய்தார்.திருவாவடுதுறை ஆதின மடத்தின் ஓதுவார்கள், கோளறு பதிகத்தின், 11ம் பாடலை பாடினர். 11ம் பாடலின் கடைசி வரியான, 'அரசாள்வர் ஆணை நமதே' என்பதைப் பாடி முடித்தவுடன் இறைநாமம் உச்சரித்து, செங்கோலை, ஜவஹர்லால் நேருவிடம் கொடுத்தார், இளைய தம்பிரான் சுவாமி.ஏழாம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட தேவாரப் பாடல், 13 நுாற்றாண்டுகள் கழித்து சுதந்திர தினத்தன்று பாடப்பட்டது தேவாரத்திற்கும், தமிழுக்கும் பெருமை.வரலாற்றுச் சிறப்பு கொண்ட இந்த விவரங்களை இனியாவது, பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும்.பாரத மாதா கோவில்!குஜராத் மாநிலம் போர்பந்தரில், பாரத மாதாவுக்கு கோவில் கட்டி, பெரிய இந்திய வரைப் படம் ஒன்றை தரையில் பதித்துள்ளனர். இந்தியாவின் மாநிலங்களையும், அவற்றின் சிறப்புகளையும் இதில் பொறித்து வைத்துள்ளனர். சுவர்கள் முழுவதும், சுதந்திர போராட்டக் காட்சிகளை ஓவியமாக வரைந்து வைத்துள்ளனர்.கொண்டாட்டம்!இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றவுடன், 14 பேர் கொண்ட அமைச்சரவை தான் முதலில் பதவியேற்றது. நேரு - பிரதமராகவும், படேல் - உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்* இந்திய பிரதமராக, செங்கோட்டையில், 17 முறை கொடியேற்றியுள்ளார், நேரு. அதிக முறை கொடியேற்றிய பெருமையும் இவருக்கு உண்டு* இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று, நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை. ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட, 'ஜன கண மண' பாடல், 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது* இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாமல், கோல்கட்டாவில் மத மோதல்களை எதிர்த்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார், காந்திஜிதீர்க்க தரிசனம்!கடந்த 1934ல், தமிழக சுற்றுப் பயணத்தின்போது, திறந்த காரில், காந்திஜி வருவதைப் பார்த்த, தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அவினாசிலிங்கம், 'இப்படி திறந்த காரில் வருகிறீர்களே, உங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது...' என்றார்.'எனக்கு, மரணம் எப்படி வரும் தெரியுமா... சுட்டுக் கொல்லப்படுவேன் அல்லது துாக்குத் தண்டனையைப் பெறுவேன்...' என்றார், காந்திஜி.தேசிய சின்னம்!மவுரிய பேரரசரான அசோகர், கலிங்க நாட்டு போருக்கு பின், இனி போர் செய்வதில்லை என்று உறுதி எடுத்து, புத்த மதத்தில் சேர்ந்தார்.புத்த மத கொள்கைகளை, நாட்டில் பல இடங்களில், கல் துாண்களிலும், பாறைகளிலும் செதுக்கச் செய்தார்.அப்படி அவர் செதுக்கிய கல் துாண் ஒன்று, உத்திரபிரதேசத்தில், சாரநாத் எனும் இடத்தில் உள்ளது. அந்த கல் துாணின் மேற்புற உச்சியில், தாமரை மலரை கவிழ்த்தது போல பீடம் இருக்கிறது. அந்த பீடத்தின் நான்கு புறமும் தர்ம சக்கரமும், அவைகளுக்கு நடுவே எருது, யானை, குதிரை மற்றும் சிங்கம் என, நான்கு விலங்குகளின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின் மேலே, நான்கு சிங்கங்கள், நான்கு திசைகளையும் மிகுந்த விழிப்புடன் கவனமாக பார்த்துக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது.நான்கு சிங்கங்களின் உடம்பும் ஒன்றாக இணைந்திருக்கின்றன. அதாவது, நாட்டின் நாலா திசையில் வாழும் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை, எல்லாரும் சம இருக்கை பெற தகுதியுள்ளவர்களே என்பது, இதன் உட்பொருள்.சாரநாத் துாணில், சிங்கங்கள் நிற்கிற இந்த பீடத்தில் உள்ள சக்கரம் தான், நம் தேசிய கொடியில் உள்ள சக்கரம். இதை, 'தர்ம சக்கரம்' என்பர். வேகத்தையும், இயக்கத்தையும் குறிக்கிறது.சக்கரத்தின் இரு புறமும் எருது, குதிரை, யானை, சிங்கம் உள்ளன.யானை - நம் கலாசாரத்தையும், நாகரிகத்தையும் குறிப்பது. குதிரை - வேகத்தையும், முன்னேற்றத்தையும் குறிப்பது. எருது - உழைப்பையும், சிங்கம் - வலிமையையும் எடுத்துக் காட்டுகிறது.தேசிய சின்னத்தில் வடமொழியில், 'சத்யமேவ ஜயதே' என்று பொறிக்கப்பட்டிருக்கும்; 'வாய்மையே வெல்லும்' என்று, அதற்கு பொருள். ஜனவரி 26, 1950ம் ஆண்டு, அதாவது, நம் முதல் குடியரசு தினத்தன்று, இந்தச் சின்னம் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.காந்திஜி, 1921ம் ஆண்டு செப்டம்பரில், மதுரை மேல மாசி வீதியில் தான், தன் முழு உடை கோலத்தை துறந்து, அரை ஆடை அணியத் துவங்கினார்.சுதந்திர போராட்ட மாவீரன் பகத்சிங், சிறையில் அடைக்கப் பட்டிருந்த போது, வெள்ளையர் அரசாங்கம், 'நண்பர்களை காட்டிக் கொடு. பணம், பரிசு தருகிறோம்...' என்று ஆசை வார்த்தை கூறியது. இதற்கு மசியவில்லை, பகத்சிங். இறுதியில், தன், 24வது வயதில், 1931ம் ஆண்டு துாக்கிலிடப்பட்டார்.கோவை சிறையில், வ.உ.சி., இழுத்த கருங்கல் செக்கின் எடை, 250 கிலோ.