உள்ளூர் செய்திகள்

9,999 சிவப்பு ரோஜாக்களில் உருவான கவுன்!

காதலின் மிகவும் பொன்னான நேரம் எது தெரியுமா? தங்கள் அன்புக்குரிய காதலியிடம், காதலர்கள், முதன் முதலில், காதலை வெளிப்படுத்தும் நேரம் தான். காதலை வெளிப்படுத்திய அந்த சுகமான நிமிடங்களை, வாழ்நாள் முழுவதும், நினைத்து நினைத்து இன்பம் காண்பதில், காதலர்களுக்கு அப்படி ஒரு இஷ்டம். அதற்காக, இன்றைய இளைஞர்கள், ரொம்பவே மெனக்கெடுகின்றனர். சீனாவைச் சேர்ந்த ஜியாவோ பாண்ட் என்ற இளைஞர், தன் காதலியிடம், காதலை தெரிவிப்பதற்காக, என்ன செய்திருக்கிறார் தெரியுமா?ஒன்பதாயிரத்து, 999 சிவப்பு ரோஜாக்களை வாங்கி, அவற்றை அழகிய கவுனாக தைத்து, தன் காதலிக்கு வழங்கி, காதலை தெரியப்படுத்தியிருக்கிறார். இதற்காக, இவர் பட்ட சிரமங்கள் ஏராளம். பல தையல் கலைஞர்களை வரவழைத்து, ரோஜா மலர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், அனைத்து ரோஜாக்களையும் இணைத்து, அழகிய உடையாக தைத்துள்ளார்.ஜியாவோ கூறுகையில், 'ஒரே ஒரு ரோஜாப் பூவை கையில் கொடுத்து, 'ஐ லவ் யூ' என கூறி விடலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், என் காதலி, புதுமையாக உடை அணிய வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர். அதனால், அவரை அசத்துவதற்காக, இந்த சிவப்பு ரோஜா கவுனை அவளுக்கு பரிசாக அளித்து, காதலை வெளிப்படுத்தினேன்...' என்றார். 'அதெல்லாம் சரி... இந்த புதுமையான உடையில், உங்கள் காதலியை பார்ப்பதற்கு எப்படி இருந்தது?' என, கேட்டபோது, 'சான்சே இல்ல சார், வானுலகில் இருந்து, சிவப்பு உடை அணிந்து, தேவதை இறங்கி வந்தது போல் இருந்தது...' என, உணர்ச்சிவசப்பட்டார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !