உள்ளூர் செய்திகள்

பேச்சு வர ஒரு கோவில்!

சிலருக்கு திறமை இருக்கும். நன்றாக படிப்பர், எழுதுவர். ஆனால், பேச்சுத்திறன் இல்லாததால், நேர்முகத்தேர்வில் தோற்று, தங்கள் வாழ்க்கையையே இழந்து விடுவர்.வாயுள்ள பிள்ளை பிழைக்கும். சிலருக்கு திறமை இருந்தாலும், பிறவியிலேயே திக்குவாயாக இருப்பர். இவர்கள் பேச்சுத்திறன் பெற, கடலுார் மாவட்டம், ராஜேந்திரபட்டினம், எருக்கத்தம்புலியூர், சுவேதாரண்யேஸ்வரரை தரிசித்து வரலாம்.ஒருமுறை, மனைவி பார்வதிக்கு, வேத ஆகமத்தின் உட்பொருளை உபதேசித்தார், சிவன். பார்வதிக்கு, பாடத்தில் கவனம் செல்லவில்லை. கோபமடைந்த சிவன், அவளை பூலோகத்தில் பிறக்க சபித்தார்.தாயை சபித்ததால், கோபமடைந்த முருகன், அதற்கு காரணமான ஆகம நுால்களை கடலில் வீசினார். இதுகண்ட சிவன், அவரை, பூலோகத்தில் பேசும் திறனற்ற குழந்தையாக பிறக்கும்படி சபித்தார்.அதன்படி, பரதவருக்கு மகளாக பிறந்தாள், பார்வதி. பாண்டிய நாட்டில் வசித்த ஒரு தம்பதிக்கு, உருத்திரசன்மர் என்ற பெயரில் மகனாக பிறந்தார், முருகன். அவருக்கு, பேச்சு வரவில்லை. பல இடங்களில் சிவலிங்கம் வடித்து, பேச்சு வர வேண்டினர். கடைசியாக, கடலுார் அருகிலுள்ள எருக்கத்தம்புலியூரில், சிவலிங்கம் அமைத்து வழிபட்டதும், பேசும் திறன் பெற்றார். முருகனுக்கு குமரன் என்ற பெயருண்டு. குமரன் வழிபட்ட சிவன் என்பதால், இங்குள்ள சிவன், குமாரசாமி என, பெயர் பெற்றார். எருக்கத்தம்புலியூரின் மகிமை அறிந்த தேவர்கள், பூலோகம் வந்தனர். மரங்கள் வடிவில், குமாரசாமியை நினைத்து, தவத்தில் ஈடுபட்டனர். காட்டிற்கு வந்த வேடர்கள், தேவர்கள் என அறியாமல், அந்த மரங்களை வெட்ட முயன்றனர். தாங்கள் வெட்டு படுவதை தடுக்க நினைத்த தேவர்கள், வேடர்களை, வெள்ளெருக்கு மரங்களாக மாற்றினர். எல்லாரும், மரங்கள் வடிவில், சிவனை வழிபட்டு, பேச்சுத்திறன் பெற்றனர். மரங்கள், தெய்வத்துக்கு சமமானவை. அவற்றை வெட்டினால், மழை வளம் குறையும் என்கிறது அறிவியல். இந்த அறிவியல் கருத்தை கடைப்பிடிக்கவே, இதுபோன்ற புராணக் கதைகளை முன்னோர் சொல்லியுள்ளனர். மூலவர் திருக்குமார சுவாமியை, சுவேதாரண்யேஸ்வரர் என்றும், அம்பிகையை, வீறாமுலையம்மன் என்றும் அழைக்கின்றனர். வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றிருக்கிறார்.தஞ்சை மன்னர் ராஜராஜசோழன், புத்திர பாக்கியம் வேண்டி, இந்த சிவனை வழிபட்டதன் பலனாக, ராஜேந்திர சோழன் பிறந்தார். இதனடிப்படையில், இத்தலத்திற்கு இருந்த எருக்கத்தம்புலியூர் என்ற பெயர் மாறி, ராஜேந்திரபட்டினம் என்றழைக்கப்பட்டது. விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில், 12 கி.மீ., துாரத்தில், ராஜேந்திரபட்டினம் உள்ளது.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !