உள்ளூர் செய்திகள்

மேலே மேலே...

தன் கைவசம் இருந்த நான்கு ரவிக்கைகளையும் தைத்து முடித்தாள், பரிமளா. தோள்பட்டைகள் வலித்தன. ஆனால், மனதுக்குள் ஒரு இதம் தோன்றியது.எல்லாமே தலைமைச்செயலக அதிகாரியம்மாவுடையது. அழகும், திறமையும், நல்ல மனதும் கொண்ட அதிகாரி. குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்தால், உடனே கூலியைக் கொடுத்து, வாய்விட்டுப் பாராட்டவும் செய்வாள்.இந்த வார இறுதிச் செலவுக்கு, 600 ரூபாய் போதும். பார்த்திபன் வரும்போது அவனுக்குப் பிடித்த முட்டை, மீன் உணவுகள் செய்ய முடியும்.பாவம், பார்த்திபன். பொறுப்பாகத்தான் படித்தான். வீட்டின் நிலைமை தெரியும் அவனுக்கு. தன் நான்காவது வயதிலேயே, நண்பர்களின் வீடுகள் போல் தன் வீடு இல்லை என்று உணர்ந்திருந்தான்.அப்பா, புகைப்படத்தில் மட்டுமே இருக்கிறார்; அம்மாவுக்கு நிறைய படிப்பெல்லாம் இல்லை. கடின உழைப்புடன் வீட்டை நிர்வகிக்கிறாள். ஆனால், கோபப்படாமல் சிரித்த முகமாக, தன் மேல் அன்பைக் கொட்டுகிறாள்.தன் முக்கியக் கடமை, மனம் ஒன்றிப் படிப்பதும், நன்கு சம்பாதித்து, அம்மாவின் துன்பங்களைக் களைவதும் தான் என்பதை, அந்த பிஞ்சு வயதிலேயே அவன் உணர்ந்திருந்தான்.அரசு பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், ஆசிரியைகளும் பார்த்திபன் மேல் தனி பிரியம் வைத்திருந்தனர். அவனுடைய பொறுமையான போக்கும், கவனிக்கும் திறனும், பாடங்கள் மேல் இருந்த ஆர்வமும், அவர்களை கவர்ந்தன. அவனிடம், தனியான பாசம் வைத்திருந்தார், பரமசிவம் வாத்தியார்.அவர் தான் அடிக்கடி, 'பரிமளாம்மா... உன் பையன், சாதாரணம் இல்லே... அவனுக்குள்ளே ஒரு சாதனையாளன் இருக்கான். அரசு வேலை, கிளார்க் உத்தியோகம், செகரெட்டேரியட் வேலை, ஐ.டி., கம்பெனி... இப்படி சம்பளத்துக்கு மூட்டை துாக்கறவன் இல்லே...'சரியான விதத்துல அவனை ஊக்கப்படுத்தணும். நல்ல உயரத்துக்குப் போவான்; ஊருக்கும் பயனுள்ளவனா இருப்பான். இந்த வயசுல, இவ்வளவு பொறுப்பாவும், கவனமாவும் இருக்கிறது ரொம்ப அபூர்வம். பத்திரமா பாத்துக்குங்கம்மா...' என்பார்.அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாது. மூன்று வேளை சோறு குறையாமல் பார்த்துக் கொள்வதே பெரிய பாடாக இருக்கிறது. புத்தகம், உடை, 'ஜாமென்டரி, நோட்டு, லேப் பீஸ்' என்று, அடிப்படை செலவுகளையே சமாளிக்க முடியவில்லை.தையல், வத்தல் போடுவது, சமையல் பொடி தயார் செய்வது, கல்யாண வேலை என்று, அவள் பம்பரமாகத்தான் சுழல்கிறாள். மூன்று சேலைகளுக்கு மேல் இல்லை. ஐந்து மணி நேரங்களுக்கு மேல் துாக்கம் இல்லை. இதில் அவனை எப்படி சாதனையாளன் ஆக்குவது?பார்த்திபன் மனதிலும், இந்தப் பொறியை விதைத்து விட்டார், பரமசிவம் சார்.இயல்பாகவே இருக்கிற மெக்கானிச அறிவு, இப்போது, பட்டை தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிட்டது. அவன் நண்பர்களது இரு சக்கர வாகனங்கள், டிரான்சிஸ்டர்கள், 'டிவி' பெட்டிகள், சைக்கிள்கள் என்று, பிரித்து மறுபடியும் அழகாகச் சேர்ப்பான். முன்பை விட அவை அற்புதமாக வேலை செய்யும்.மின்சார ஒயர்கள், பல்புகள், கேபிள் 'டிவி' பாக்ஸ்கள் என்று, பொறுமையாக ஆராய்ச்சி செய்து, ஒரு புதுமையைச் சேர்ப்பான். கடிகாரம், வாட்ச், மொபைல்போன்கள் என்றெல்லாம் அவன் பிரித்துச் சேர்த்தபோது, அவளுக்கு அதிசயமாகத்தான் இருந்தது. பள்ளியில் ஒரு பாராட்டு விழாவே நடத்தினர். வாழைக்கன்றுகளை பதியம் போட்டு, ஒரு புதிய மொந்தன் வாழைக் குடும்பத்தை உண்டாக்கியிருந்தான்.அரசு செலவிலேயே, 'ஸ்காலர்ஷிப்'பில் பட்டதாரி ஆகி, பல்கலைக்கழக முதல் மாணவனாகத் தேர்வானான். தொழில்பட்டம் பெற்று, பதக்கத்துடன் வீடு வந்தபோது, அம்மாவின் கைபற்றி, 'அம்மா... நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சா, வீட்டு நிலைமை மாறும் தான். ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லேம்மா...'தொழில் துவங்கணும்; நிறைய தேவைகள் இருக்கு. அண்டை நாடுகள்ல இருந்து இறக்குமதி பண்ணித்தான் நாம மொபைல்போன், டார்ச், பட்டாசு, கிரேன், உரம்னு, எல்லா ஏரியாலயும் பொருள் செய்யறோம். ஆனால், நம்மகிட்டயும் திறமை இருக்கு... மனித சக்தி இருக்கு...'வங்கி கடனுக்கு முயற்சி பண்ணி, சின்னதா, 'ஸ்டார்ட் - அப்' கம்பெனி துவங்கப் போறேன்... உனக்கு, சம்மதம்தானே?' என்றான்.அவளுக்கு, மறுபடியும் பழைய குழப்பம் தான் வந்தது. என்ன பதில் சொல்வது, வீட்டு நிலைமை தெரியாத பையன் என்றால் எடுத்துச் சொல்லலாம். விடலைப்பையன் என்றால், கண்டிப்புடன் பேசலாம்.பார்த்திபன் அப்படியா... பணக்கார வீட்டில் பிறக்க வேண்டிய லட்சியக்காரன். கெடு வாய்ப்பாக அவள் வயிற்றில் வந்து, பிறந்து விட்டான். ஏழைக்கு எதற்கு கனவும், லட்சியமும்? அவள் ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லாமல், மகன் சொன்னதை முழுமையாக, மனமார ஏற்றுக் கொண்டாள். திருப்தியானது, மனம். அது, அவனுக்குக் கிடைக்கட்டும் என்று நெஞ்சுக்குள் வாழ்த்தினாள். காலம் நகர்ந்துகொண்டே இருக்கிறது.பேருந்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்தான், பார்த்திபன். சக்கரங்களின் மேல் அமைந்த இருக்கை, துாக்கித் துாக்கிப் போட்டது. முதுகு, கழுத்து என்று பதம் பார்த்தது.'இருக்கட்டும், மனதின் வலிக்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்... மூன்று ஆண்டுகள் மின்னல்கள் போல மறைந்தன. எத்தனை முயற்சிகள், எவ்வளவு தோல்விகள்... சாண் ஏறினால் முழம் அல்ல, அடியே சறுக்குகிறது... ஆர்வமிக்க மனதும், திறமையான மூளையும் போதும் என்று நம்பினானே அது தவறா...'மனம் கற்பனை செய்யும் உயரத்தை கால்களால் எட்ட முடியாதா... எது தடுக்கிறது, பணமும், வசதியும் தான். அடிப்படையாக, வசதியும், செல்வாக்கும் இருந்தால் தான், இந்த 'பிசினஸ்' எல்லாம் சரிப்பட்டு வரும்.'அறிவு பெரிது தான். ஆனால், கையிருப்பு மிகவும் முக்கியம். அதுதான் அடிப்படை. வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. தோல்விக்கு மேல் தோல்வி. புதிய கடன்களுக்கு அலைவதே வேலையாக இருக்கிறது. அய்யோ... என்ன வாழ்க்கை இது?' என, நினைத்து கொண்டான்.வீடு வந்து சேர்ந்தபோது, அம்மாவின் தையல் இயந்திரத்தின் ஓசை கேட்டது. கடலோசை போல இருந்தது. காதே அடைக்கிறது. இந்த வலிகளிலிருந்து அம்மாவை விடுவிக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். கொஞ்சம் காலதாமதம் ஆனாலும், அது பொறுத்துக் கொள்ளக் கூடியது தான்.ராஜகுமாரிபோல அம்மா ஜொலிக்கப் போகிறாள் என்று நம்பினான். எல்லாம் பகற்கனவாய் போய்விடுமா?''வாடா தங்கம்... வா வா... அடடா, இந்த மிஷின், 'கொடகொட'ன்னு சத்தம் போடுதா... நீ வந்ததை உடனே கவனிக்க முடியலடா தம்பி,'' என்று, முகம் நிறைய பூரிப்பும், மகிழ்ச்சியுமாக வரவேற்றாள், அம்மா.''காபி கொடும்மா... தலை வலிக்குது,'' என்று சொல்லி, குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.'என்ன செய்யப் போகிறேன், எல்லா வேலையும் பாதியில் நிற்கிறது. 'எக்ஸ்போர்ட் லைசென்ஸ்' மனுக்கள் அப்படியே நிலுவையில் இருக்கின்றன. சிலிக்கான், அலுமினியம், இரும்பு என்று, சிமென்ட் மூலப் பொருட்கள், தாமுவின் பட்டறையில் கிடக்கின்றன.'நரேஷ் பில்டர்ஸ் நெருக்கடி கொடுப்பதற்குள், பொருட்கள் தயாராக வேண்டும். அதற்குள் வங்கி கடன் கிடைக்குமா... தொழிலாளர்கள் வரத் தயாராகி விடுவரா?' என, சிந்தனை ஓடியது.''கண்ணு... உனக்கு பூண்டு போட்ட முட்டை தோசை பிடிக்கும்ல... கூடவே வேர்க்கடல சட்னி... சாப்பிட்டு, ஓய்வு எடுடா தங்கம்,'' என்று, தட்டுடன் வந்து உட்கார்ந்தாள், அம்மா.வாங்கிக் கொண்டான்.''வேலை எல்லாம் நல்லா போகுதா கண்ணு... போன வாரத்துக்கு இந்த வாரம் இன்னும் அழகாய்ட்ட... உடற்பயிற்சி எதுவும் செய்யுறியா?'' என்று சிரித்தாள்.''அம்மா,'' என்றான்.''சொல்லு கண்ணு.''''எல்லாத்தையும் ஏற கட்டலாம்ன்னு இருக்கேன்...'' என்று சொல்வதற்காக, வாய் திறக்கும்போது... அம்மா குறுக்கிட்டு, ''ஒரு நிமிஷம் கண்ணு...'' என்று, உள்ளே ஓடி, ஒரு தாளை எடுத்து வந்தாள்.''என்னம்மா?''''நீ, ஆறாவது படிக்கறப்ப, பேப்பர்ல வந்த போட்டோப்பா... பத்திரமா வெச்சிருக்கேன்... பாரு, உங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர், டீச்சர்ன்னு எல்லாரும் இருக்காங்க உன்னைச் சுத்தி... நீ, புது, 'வெரைட்டி'யா வாழை மரம் தயார் பண்ணினது பேப்பர்ல வந்திருக்கு... அதே சமயத்துல, இன்னொரு விஷயமும் நடந்துச்சு...''''ம்.''''நினைவிருக்கா கண்ணு, செங்கல்பட்டு தாண்டி மீன் பண்ணை, காளான் வளர்ப்பு இடங்களைக் காட்ட ரெண்டு நாள், 'டூர்' கூட்டிட்டுப் போனாங்க... 40 பேரையும், ஒரு மண்டபத்துல தங்க வெச்சாங்க... அஞ்சு பேருக்கு ஒரு அறைன்னு கணக்காம்...''பசங்க எல்லாரும் அறைக்குள்ள போய்ட்டு குளிக்கலாம்ன்னு பார்த்தா, குழாய்ல தண்ணி வரலியாம்... காவலாளி யாரும் இல்லே... அதனால, பசங்க குளிக்காமலே கிளம்பிட்டாங்க... ஆனா, நீ மட்டும் நல்லா ஜம்முன்னு குளிச்சு, உடை மாற்றி, பளிச்சுன்னு வந்தியாம்... ''பசங்க, 'ஏன், தண்ணி வரலே'ன்னு கேட்டப்போ, 'தேடி கண்டுபிடிச்சேன். தொட்டி முழுக்க தண்ணி இருக்கறதால குழாய்ல தான் பிரச்னை இருக்கும்ன்னு நினைச்சு, 'செக்வால்வு' வரை ஏறி, திறந்து, அடைப்பு இருந்ததை நீக்கினேன். பிறகு, தண்ணி அருமையா வந்துச்சு'ன்னு சொன்னியாம்...''எல்லாரும் பாராட்டினாங்களாம்... 'பிரச்னை பிரச்னைன்னு புலம்பிக்கிட்டே இருக்காம, எப்படியாவது தீர்க்க பார்க்கலாம்ன்னு உற்சாகமா முயற்சி பண்ணின இல்லே... அதுதான் முக்கியம். அந்த ஆர்வம் தான் முக்கியம்'ன்னு பெரிய சார் பாராட்டினார்.''அதுமட்டுமில்லாம, 'வாழ்க்கை முச்சூடும் இந்த ஆர்வமும், உற்சாகமும் குறையக் கூடாது. ஏழை வீட்டுல பொறந்தாலும், எத்தனையோ பேர் தொழிலதிபர்களா, ஆராய்ச்சியாளர்களா, கண்டுபிடிப்பாளர்களா ஆனதுக்கு இந்த உற்சாகம் தான் முதலீடு'ன்னு சொல்லி, உன்னைக் கை குலுக்கி பாராட்டினாராம் கண்ணு...''நீ, அன்னிக்கு வந்து சொன்னது, அப்படியே என் கண்ணுல இருக்கு... பாரு, ஒருநாள் நீ எவ்வளவு பெரிய இடத்துக்கு வரப்போறேன்னு,'' என்றாள், அம்மா.அவன் சட்டென்று முகம் உயர்த்தி, அம்மாவைப் பார்த்தான். 'காலமும், தானும், அம்மாவும் சேர்ந்து நின்றால், எதையும் சாதித்து விட முடியும்...' என்று, புதிதாகப் புரிந்து கொண்ட மாதிரி இருந்ததுராஜ்யஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !