ஆச்சி மனோரமா! (19)
இரு வேறு நாடக கம்பெனியின் சார்பில், வெவ்வேறு ஊர்களில் நடக்க இருந்த, இரு நாடகங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் மனோரமா. ஒப்பந்தப்படி, இரு நாடகத்தில் மனோரமா நடிக்க வேண்டிய கட்டாயம். அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்தார், ஒரு நாடக கம்பெனி உரிமையாளரான, கே.ஆர்.ராமசாமி.இதனிடையே, கலாவதி என்ற நடிகையும், இந்த இரண்டு நாடகங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். கலாவதியோடு அவரது தந்தையையும், நாடகம் முடிந்ததும், ரயிலில் அனுப்பி வைப்பதாக வாக்களித்திருந்தார், கே.ஆர்.ஆர்., துணைக்கு மற்றொரு நடிகை கிடைத்துள்ளதால், ஆறுதல் அடைந்தார் மனோரமா.முதல் நாளே சங்கரன்பந்தலுக்கு மனோரமா போய் விட்டார். இரவு, 9:00 மணிக்கே நாடகம் துவங்குவதாக ஏற்பாடு. அப்போது தான் அந்த குறிப்பிட்ட ரயிலை பிடிக்க முடியும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நாடக குழுவினர் அனைவரும், 9:00 மணிக்கு நாடகம் துவங்கும் என்பதால், மேக்கப் போட்டு தயாராக இருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டம் அவர்களை துரத்தியது.கே.ஆர்.ஆர்., அங்கு வருவதற்கு தாமதமாகி விட்டது. எனவே, 9:00 மணிக்கு பதிலாக இரண்டு மணி நேரம் தாமதமாக, இரவு, 11:00 மணிக்கு தான் நாடகம் தொடங்கியது.இதுவே, மனோரமாவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.அதன்பின் நாடகம் தொடங்கி அவசர அவசரமாக நடந்தது. நாடகம் முடிந்ததும், ரயிலை பிடிக்க வேண்டுமே என்ற அவசரத்தில் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு, காரில் அவர்கள் மாயவரத்தை நோக்கி புறப்பட்டனர்.ஆனால், மறுபடியும் துரதிர்ஷ்டம் அவர்களுக்காக காத்திருந்தது.புறப்படும் நேரத்தில் மழை பிடித்துக் கொண்டது. இருந்தாலும், பரவாயில்லை என்று கஷ்டப்பட்டு காரை வேகமாக செலுத்தி, மாயவரம் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அரை மணி நேரத்திற்கு முன்பே நெல்லை ரயில் போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டது.அவர்கள் அனைவரின் பதற்றமும் இன்னும் அதிகமானது.அப்படியானால் என்ன செய்வது? திருநெல்வேலிக்கு எப்படி செல்வது என்ற அச்சம் அதிகமானது.அப்போது ஒருவர், 'உடனே கிளம்பி தஞ்சாவூருக்கு போனால், அந்த ரயிலை எப்படியும் பிடிச்சுடலாம்...' என்றார்.தஞ்சையை நோக்கி கார் புறப்பட்டது.ஆனால், மழையோ வலுத்தது. மழையின் தீவிரம் தாங்க முடியாமல் காரின் முன் விளக்குகள், பட்டென்று தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன.வெளிச்சம் இல்லாமல் காரை செலுத்துவது எப்படி... ரயிலை பிடிப்பது எப்படி?மறுநாள் இரவு, திருநெல்வேலியில் நடக்க இருந்த நாடகத்தில் நடிப்பது எப்படி?'ப்ரண்ட்'ராமசாமியிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறை வேற்றுவது எப்படி?கலக்கமும், பயமும், பதற்றத்தை இன்னும் அதிகரித்தது.இதனால், நடிகை கலாவதியின் தந்தை கையில் ஒரு டார்ச் லைட் கொடுக்கப்பட்டது. முன்னிருக்கையில் அமர்ந்தபடியே அவர் டார்ச்சை வெளியே நீட்டிப் பிடித்தார்.அந்த சிறிய வெளிச்சத்தை ஆதாரமாக கொண்டு காரின் பயணம் தொடர்ந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் எப்படியோ தஞ்சாவூரை அடைந்தனர்.அங்குள்ள ரயில் நிலையத்திற்கு சென்றபோது, ரயில் இவர்களுக்காக காத்திராமல் கடந்து சென்று விட்டது.இந்த தடங்கலையும் மீறி எவ்வாறு நெல்லைக்கு செல்வது, இனிமேல் நெல்லை ரயிலை எப்படி பிடிப்பது?அனைவரும் குழம்பி, ஒரு முடிவிற்கு வந்தனர்.காரை திருச்சிக்கு செலுத்துவது என்பது தான் அந்த முடிவு.இப்போது, சைக்கிள் கூட அவர்கள் காரை முந்திச் செல்ல முடிகிற அளவுக்கு காரின் வேகம் வெகுவாக குறைந்திருந்தது.மழை காரணமாக, கார் பழுதாகி இருந்தது. காரை தள்ளிக்கொண்டு தான் போக வேண்டும் என்ற இக்கட்டான நிலை.பல இன்னல்களுக்கிடையே ஒரு வழியாக அதிகாலையில் திருச்சியை அடைந்தபோது, ரயில் அங்கிருந்தும் கிளம்பி சென்று விட்டது.நம்பிக்கை முழுவதும் சிதைந்து போனது. அப்போது தெய்வ வாக்கு போல ஒருவர் கூறினார். 'மதுரையிலிருந்து பிற்பகல், 2:00 மணிக்கு, நெல்லைக்கு ஒரு ரயில் இருக்கிறது. அதை பிடித்து விட்டால், நெல்லைக்கு போய் நாடகத்தில் நடித்து விடலாம்.'அவர்கள் வந்த காரோ களைத்து போயிருந்தது. இனிமேல் ஒரு அடி கூட, நகர முடியாது. எனவே, அதை பழுது பார்த்து, திரும்பி செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு, பஸ்சை பிடிப்பதற்காக பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தனர்.அங்கே மதுரை செல்லும் பேருந்து ஒன்று கிடைத்தது. அதில் ஏறினர்.'எப்பாடு பட்டாவது திருநெல்வேலிக்கு சென்று, நாடகத்தில் நடித்துவிட வேண்டும். இல்லையென்றால் கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறியவர்கள் என்ற பழி நமக்கு வந்து சேர்ந்திடும்...' என்றார், மனோரமாவின் தாயார்.வாக்கு சுத்தம் என்பது அவருக்கு அத்தனை முக்கியமாக இருந்தது. மதுரையை அடைந்த அவர்கள், அங்கிருந்து நேராக ரயில் நிலையத்திற்கு அரக்கப் பரக்க ஓடினர்.நல்ல வேளையாக இரண்டு மணி ரயில் புறப்படவில்லை. அதில் ஏறி அமர்ந்ததும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது.ரயில் சற்று தாமதமாக புறப்பட்டது. பின், இரவு எட்டு மணிக்கு திருநெல்வேலியை அடைந்தது.அவர்கள் அங்கிருந்து கண்காட்சி நடைபெறும் மைதானத்தை நோக்கி ஓட்டமெடுத்தனர்.இதனிடையே, மனோரமாவும், கலாவதியும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் போனதால், அவர்களுக்கு பதிலாக அந்த நாடகத்தில் நடிப்பதற்காக, சிறு சிறு வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகளை நடிக்க வைக்க ஏற்பாடு செய்திருந்தார், ப்ரண்ட் ராமசாமி.அவர்கள் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்த போதிலும், திகில் பிடித்தவர்கள் போல காணப்பட்டனர். எப்படியோ, கண்காட்சி நடந்த மைதானத்தை அடைந்தனர், மனோரமாவும், மற்றவர்களும். அதன்பின், அவசர அவசரமாக மேக்கப் போட்டுக் கொண்டனர். நாடகமும் தொடங்கியது. அதுவும் வெகு சிறப்பாக அனைவரின் பாராட்டுதலோடு நடந்து முடிந்தது.நாடகம் முடிந்த பிறகு தான் பசி என்று ஒன்றிருப்பதே அவர்களின் நினைவுக்கு வந்தது. முதல் நாள் மதியம் சாப்பிட்டது.அதன் பின், எத்தனை துன்பங்கள், இடையூறுகளை கடந்து, இந்த நாடகத்தில் நடிப்பதற்கு வந்ததை ராமசாமியிடம் கூறினர். ஆனால், அதற்காக அவர் எந்தவிதமான அனுதாபமும் காண்பிக்கவில்லை. வருவதற்கு ரொம்பவும் காலதாமதமாகியதால், அவர் டென்ஷன் ஆனது மட்டும் தான் அவருக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.மனோரமா உள்ளிட்டோர், பெரும் இன்னலுக்கு இடையே நெல்லைக்கு வந்ததை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. — தொடரும்.நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.www.shankar_pathippagam@yahoo.com- குன்றில்குமார்