ஆச்சி மனோரமா! (28)
அப்போது, மனோரமாவின் மகன், பூபதிக்கு வயது மூன்று. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின், மணிமகுடம் மற்றும் புதுவெள்ளம் ஆகிய நாடகங்கள் கோயம்புத்துாரில் நடத்த ஏற்பாடாகி இருந்தது. அதற்காக நாடகக் குழுவினர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு லாட்ஜில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.மனோரமாவும் அவர்களோடு சென்றிருந்தார். இவரோடு நடித்த மற்றொரு சக நடிகை சீதாலட்சுமி. மனோரமாவை விட வயதில் மூத்தவர். எனவே, மனோரமாவை உரிமையோடு, 'அடி' போட்டு பேசுவார்.ஒருநாள் நண்பகல். மனோரமாவும், சீதாலட்சுமியும் அருகருகே படுத்தவாறு பேசிக் கொண்டிருந்தனர். மகன் பூபதி அருகில் படுத்திருந்தான்.'அடி பாப்பா' என்று அழைத்து, ஏதோ பேச முற்பட்டார். உடனே, அந்த சிறு குழந்தை பூபதி, விருட்டென்று எழுந்து சீதாலட்சுமியை நோக்கி ஓடினான். அவர் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, 'பாப்பாவை, அடின்னா சொன்னே...' என்று கோபமாக கேட்டான்.சீதாலட்சுமிக்கு, இது எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், சீதாலட்சுமி, 'ஆமாண்டா, அடின்னுதான் சொன்னேன். அதுக்கு என்ன?' என்று கேட்டார், சிரித்துக் கொண்டே.அப்படியும் குழந்தை விடாமல், 'எங்கே இன்னொரு தடவ அப்படி கூப்பிடு பார்க்கலாம்...' என்றது, அதே மழலை குரல்.'சொன்னா என்னடா செய்வே?' என்று கேட்டபடியே மீண்டும், 'அடி பாப்பா...' என்றார் சீதாலட்சுமி வேண்டுமென்றே.கோபம் கொண்ட குழந்தை பூபதி, அவரது கழுத்தை தன் பிஞ்சுக் கரங்களால் நெரிக்கத் துவங்கினான். 'சொல்லுவே, இனிமே அப்படி சொல்லுவே...' என்று கத்தினான்.சின்னஞ்சிறு வயசிலேயே அம்மா மீது அதீத பாசம் வைத்திருந்ததைப் பார்த்து பிரமித்து போனார், சீதாலட்சுமி.இதேபோல பூபதியின் அன்பிற்கும், பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக மற்றொரு நிகழ்வையும் உதாரணமாக கூறலாம்...ப்ரண்ட் ராமசாமியின், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்னும் நாடகம், சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடந்தது.அந்த நாடகத்தில், கதாநாயகனை காதலிக்கும் கதாநாயகி, பின் ஏதோ காரணத்தால் வில்லனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பின் தற்செயலாக கதாநாயகனை சந்திக்க நேர்கிறது. அவனோடு உரையாடுகிறார். இதைப் பார்த்த வில்லன் கணவனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. மனைவியை அவன் அடிப்பது போல ஒரு காட்சி உண்டு.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர், முத்துகிருஷ்ணன் என்பவர். வில்லனாக நடித்தவர், ஆர்.எம்.சோமசுந்தரம், கதாநாயகி, மனோரமா.இந்த நாடகம் பலமுறை நடந்திருந்தாலும், பூபதி பார்ப்பது அதுதான் முதல் முறை. திரைச் சீலைக்கு பக்கத்தில் நின்றபடி, நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான், குழந்தை பூபதி.மனோரமாவை, வில்லன் அடிக்கும் காட்சியை பார்க்க நேர்ந்தது. அது அவனுள் கோபத்தையும், ஆத்திரத்தையும் வரவழைத்துள்ளது.அந்தக் காட்சி முடிந்ததும், மனோரமாவிடம் ஓடி வந்து, 'பாப்பா... உன்னை அடிச்சானா பாப்பா... பாப்பா... உன்னை அடிச்சானா பாப்பா?' என்று திரும்ப திரும்ப, கேட்டான். அப்புறம் கோபமாக பெரிய மனிதனை போல, கைகளை பின்புறமாக கட்டி, மேடையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.சிறு குழந்தையாக இருந்தாலும், நாடகம்தான் என்பதை உணராமல், உண்மையாகவே தன் தாயை ஒருவர் அடித்து விட்டார் என்று நினைத்தான்.மகனை அப்படியே அள்ளியெடுத்து முத்த மழை பொழிந்தார், மனோரமா.'மகனே தன் வாழ்க்கை' என்ற ஒரே லட்சியத்தோடு வாழ்ந்தார், மனோரமா. பூபதியை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசை.அப்போது, பிளஸ் 2 படிப்பு கிடையாது. அதற்கு பதிலாக கல்லுாரியில், பி.யூ.சி., படிப்பு இருந்தது. பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., எனும், 11ம் வகுப்பு படித்து முடித்ததும், கல்லுாரியில் ஓராண்டு, பி.யூ.சி., படிக்க வேண்டும். அதில் வெற்றி பெற்ற பிறகே மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்பை படிக்க முடியும்.அப்படிதான் பூபதியும், பி.யூ.சி., படிப்பை முடித்தார். ஆனாலும், அவருக்கு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கவில்லை.பி.யூ.சி.,யில் தமிழ் மொழிக்கு பதிலாக பிரெஞ்சு மொழியை எடுத்து படித்ததால் தான் அவருக்கு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.எனவே, பி.எஸ்சி., படிக்க நேர்ந்தது. கெமிஸ்ட்ரி, அவரது விருப்ப பாடமாக அமைந்தது.கல்லுாரியில் படிக்கிற போதுதான், அவரது வாழ்க்கை சற்று தடம்புரள துவங்கியது. 'இதயம் பேசுகிறது' பத்திரிகையில் ஆசிரியர் மணியனின் மைத்துனி மீது, பூபதிக்கு காதல் அரும்பியது. இவர்கள் காதல் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே இருந்தது.ஆனால், இந்த விஷயம், உடனடியாக தெரியாமல், காதல் முற்றிப்போன நிலையில் தான் மனோரமாவிற்கு தெரிய வந்தது.அதிர்ந்து போனார்.தன் தாயின் வாழ்க்கையை நினைத்து பார்த்தார். ஆண் துணை இல்லாமல், வருமானம் இல்லாமல், உதவிக்கு யாருமே இல்லாமல் தவியாய் தவித்ததை அத்தனை எளிதில் அவரால் மறந்துவிட முடியுமா?எத்தனை கஷ்டங்கள்... பசி, பட்டினி என்று சகலவிதமான துன்பங்களையும் அனுபவித்தது எத்தனை கொடுமையான அனுபவம்.அப்புறம் -அதே தவறை தானும் அல்லவா செய்து விட்டார். தாயின் அறிவுறுத்தலையும் மதிக்காமல், அவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ராமநாதனை காதலித்து திருமணம் செய்தோமே, என்ன ஆயிற்று?ஒரு குழந்தை பிறந்ததும், இவரை கழற்றிவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டாரே.தாய்க்கு நேர்ந்தது, மகளுக்கும் நேர்ந்தது.இப்போது, அதே கதி, அவரது மகன் பூபதிக்கு ஏற்படுகிறது என்றால், அதை எப்படி பெற்ற மனம் ஏற்கும்?பூபதியின் காதல், மிகப்பெரிய அணுகுண்டாக அமைந்தது. அது வெடிக்காமலேயே, 'புஸ்'சென்று போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது மனோரமாவிற்கு!— தொடரும்.நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.www.shankar_pathippagam@yahoo.comகுன்றில்குமார்