நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (14)
பனித்திரை படத்தின் படப்பிடிப்பு, அணைக்கட்டு ஒன்றின் அருகில் நடைபெற்ற போது, நிறைய சுற்றுலா பயணியர் கூடி நின்று, வேடிக்கை பார்த்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, என் கையை பிடித்தபடி ஒரு பக்கமாக இழுத்துச் சென்றார், அம்மா. மக்களுக்கு பயந்து தோட்டத்திற்குள் புகுந்து ஓடி, காரில் உட்கார்ந்தோம். அம்மாவின் காலில் ஒரு பெரிய ரோஜா முள் குத்தியிருந்தது, காரில் ஏறிய பிறகு தான் தெரிந்தது. கார் முழுவதும் ரத்தம். 'இது என்னம்மா?' என்று அழத் துவங்கினேன். அந்த வயதில், நான் ஒரு அழுமூஞ்சி. எடுத்ததற்கெல்லாம் அழ ஆரம்பித்து விடுவேன். 'எனக்கு நடந்ததால் சரியாகப் போயிற்று. உனக்கு நடந்திருந்தால் என்ன ஆவது?' என்று சொல்லியபடி, முள்ளை மெதுவாக எடுத்தார். அந்த இடத்தில், முதலுதவி பெட்டியில் இருந்த மஞ்சள் பொடியை வைத்துக் கட்டினார். 'பார்த்தாயா? எனக்கு வந்ததனால் இந்த சிறிய வைத்தியத்துடன் போனது. உனக்கு என்றால், பத்திரிகை, டாக்டர்கள், நர்சுகள் என, எத்தனை களேபரம் நடந்திருக்கும்? இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என, எல்லாரும் வந்திருப்பரே...' என, தமாஷ் பண்ணினார், அம்மா. இன்னொரு முறை, அன்பே வா படப்பிடிப்புக்கு, எல்லாரும் சிம்லாவுக்கு ரயிலில் சென்றோம். நான், அம்மா, அப்பா மற்றும் மாமா என, எல்லாரும் இருந்தோம். எனக்கு உடம்பு கொஞ்சம் முடியாமல் இருந்தது. 'நீ துாங்கும்மா...' என்று சொல்லி, விளக்கை அணைத்தார், அம்மா. ரயில் கொஞ்ச துாரம் போயிருக்கும். திடீரென்று, 'ஆ...' என்று பெருங்குரல் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டு எழுந்து விளக்கு போட்டு பார்த்தால், இருளில் பாத்ரூம் போக எழுந்த அம்மா, அங்கிருந்த கயிற்றில் கால் தடுக்கி, விழுந்ததனால் ஏற்பட்ட விபரீதம். 'ஏம்மா, விளக்கு போட்டுட்டு போகக் கூடாதா?' என, கோபத்துடன் கேட்டேன். 'இல்லம்மா, நீ நன்றாகத் துாங்குகிறாய். நாளைக்கு காலையில் படப்பிடிப்பு. உனக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக, இருட்டிலேயே போய் வந்துவிடலாம் என்று போனேன்...' என்றார்.எத்தனையோ நடிகர்களின் பெற்றோர், இதுபோன்ற தொல்லைகளை, தங்கள் மீது போட்டுக் கொள்கின்றனர். தங்களின் பிள்ளைகளை தங்க முட்டையிடும் வாத்தாக கருதிக் கொள்கின்றனர் என, உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.அதிலும், அம்மாவுக்கு, என் சந்தோஷம், சவுகரியம் இவற்றைத் தவிர வேறொன்றும் அவருக்கு இல்லை. எந்த அளவு கண்டிப்பானவராக இருந்தாரோ, அதே அளவு கருணை உள்ளவராகவும் இருந்தார். எனக்காக அம்மா வரவழைத்துக் கொண்ட தொந்தரவுகள், பழிகள், கஷ்டங்கள் மிக அதிகம். அம்மாவுக்கு உடம்பு சவுகரியமில்லாமல் போன சமயத்தில், எனக்கு கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பமாகின.தான் இறந்து விட்டால், தன் மகளை யார் பார்த்துக் கொள்வர். அதற்கு முன், மகளை தகுதியானவரிடம் பிடித்து தந்துவிட வேண்டும் என்ற கவலை, அம்மாவுக்கு.குடும்பம், குணம், அந்தஸ்து மற்றும் வருமானம் எல்லாவற்றையும் அலசி பார்க்க ஆரம்பித்தனர். அம்மாவுக்கு உறுதுணையாக, கர்நாடக முன்னாள் முதல்வர் - க.ஹனுமந்தய்யா, எம்.வி.கிருஷ்ணப்பா, ராஜகோபால் ஆகியோர் இருந்தனர்.என் வரையில் வராமல், எல்லாருமே அம்மாவுடன் கலந்து பேசினர்.அம்மாவிடம் முன்பே, 'மது, சிகரெட் பழக்கமுள்ள மாப்பிள்ளை வேண்டாம்...' என, சொல்லி இருந்தேன்.எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினசரி குடித்து விட்டு, மனைவியை அடித்து நொறுக்குவான். இதை பார்த்து எனக்கு அருவருப்பாய் இருக்கும். ஆனால், அந்த வயதில் எதுவும் செய்ய முடியவில்லை.அதிலிருந்தே குடி பழக்கம் உள்ளவர் என்றால், எனக்கு பயம். சிகரெட் வாசனையும் பிடிக்காது.மேற்கூறிய மூவர் கூட்டணி, ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை தேர்வு செய்தனர்.அவரை இங்கே அழைப்பதா, இல்லை, அம்மாவும், ஹனுமந்தய்யாவும் மட்டும் அமெரிக்கா சென்று, அவரை பார்த்து வருவதா என்ற யோசனையில் இருந்தனர். அந்த சமயம் பார்த்து, என் தோழி விமலாவின் தம்பிக்கு, அமெரிக்காவில் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த செய்தி அறிந்து, அமெரிக்க மாப்பிள்ளை வேண்டாம் என்றனர்.ஒருநாள், ஸ்ரீஹர்ஷா பற்றி அம்மாவிடம் கூறினர்.அப்போது தான், ஜெர்மனியிலிருந்து வந்திருந்தார், ஹர்ஷா. இன்ஜினியர்; திடகாத்திரமானவர்; மலர்ந்த முகம்.பார்த்த அனைவருக்குமே, இவரே, சரோஜாவுக்கு ஏற்ற கணவராக தோன்றி விட்டது.ஹர்ஷாவும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். 'சினிமாவில் தான் பார்க்கின்றனரே... போதாதா! இன்னும் என்ன பார்ப்பது?' என்றார், அம்மா.ஸ்ரீஹர்ஷாவின் வீட்டு பெண்களும் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தனர் என்ற விபரமே, பின்னால் தான் எனக்கு தெரிய வந்தது. அதற்கான காரணம், 'சரோஜாதேவி, சினிமாவில் தான், 'மேக் - அப்' போட்டு நன்றாக இருப்பார். நேரில் அப்படி இருக்க மாட்டார்...' என்று, யாரோ சொல்லி இருக்கின்றனர்.அப்போது நான், ஹைதராபாத்தில், ரகஸ்யம் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன்.இடைவெளியில், அம்மாவும், நானும், பெங்களூரு வந்தோம்.அன்று வெள்ளிக்கிழமை. எண்ணெய் தேய்த்து குளித்து, சாதாரண காட்டன் புடவையில், கூந்தலை காய வைத்தபடி சோபாவில் உட்கார்ந்து, புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் நிழலாடியது.யாரோ வயதான தம்பதியர் வந்தனர்.எழுந்து, 'வாங்க, உட்காருங்க...' என்று சொல்லி, உள்ளே சென்று அம்மாவை அழைத்தேன்.'அடடா, நீங்களா... எப்போ வந்தீர்கள்?' என்று கேட்டார், அம்மா.அவர்கள், ஹர்ஷாவின் பெற்றோர்.என் முகவாய் கட்டையை பிடித்து, 'மகாலட்சுமி மாதிரி இருக்கியேம்மா. உன்னைப் பார்த்தால் அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அத்தனை இயல்பா இருக்கியே. சினிமாவில் தான் நன்றாயிருப்பாய்; நேரில் அப்படி இருக்க மாட்டாய் என்றனரே...' என்றார், ஹர்ஷாவின் அம்மா.அப்போது, ஹர்ஷா பேசிய வார்த்தை இன்றும் என் நினைவில் இருக்கிறது.'நீ ஒரு பெரிய நடிகை. பெரிய பணக்காரி என்பதற்காக, உன்னை மருமகளாக கொள்ளவில்லை. இவ்வளவெல்லாம் இருந்தும், அம்மா கிழித்த கோட்டை தாண்டுவதில்லை என்றனர். அதுதான் எங்களை உன்பால் ஈர்த்தது...' என்றார்.- தொடரும்நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்எஸ். விஜயன்