உள்ளூர் செய்திகள்

மாற்று வழி!

பி.காம்., படிப்பில், மணிகண்டன் தேர்வு பெற்று விட்டான் என்ற செய்தி, அவன் அம்மா மரகதத்தின் வயிற்றில் பாலை வார்த்தது. அவனுக்காக வேண்டாத தெய்வமில்லை; சுற்றாத கோவில் இல்லை.படிப்பில் சுமார் தான்; சிரத்தையோடு படிக்க மாட்டான். கல்லுாரி நேரம் போக மீதி நேரம் முழுவதும், 'ஸ்மார்ட் போனும்' கையுமாகவே இருப்பான். துாங்கும்போது கூட தலைமாட்டில் போன் இருக்கும்.'ஏற்கனவே கணினியில் பாடங்களை படிப்பதால், கண் பார்வை பாதிக்கப்படும். அதுபோதாதென்று, சதா சர்வ காலமும் போனில் கண்களை செருகிக் கொண்டிருந்தால், கண்களின் கதி என்னவாகும்...' என்று, கரடியாய் கத்துவாள், மரகதம். ஆனால், அம்மா பேச்சை காதில் வாங்கவே மாட்டான், மணிகண்டன்.'நீ வேணா பாரு... உன் கையில் இருக்கும் மொபைல் போனை, ஒருநாள் பிடுங்கி வீசியெறிய போறேன்... அது நடக்கதான் போகுது... அப்புறம் தான் உனக்கு புத்தி வந்து திருந்துவாய்...' என்பாள்.ஆனால், அவனிடம் எந்த பாச்சாவும் பலிக்காது. அவன் மாறவே இல்லை.அவனுடன் படிப்பவர்களை பற்றி ஏதாவது கூறினால், 'அம்மா... இதோ பாருங்க, நான் எந்த பாடத்திலாவது, 'அரியர்ஸ்' வைத்திருக்கேனா... அப்புறம் எதற்கு அனத்துகிறீர்கள்...' என்று கூறி, அவள் வாயை அடைத்து விடுவான்.அது என்னவோ உண்மை தான். தேர்ச்சி பெறுவதற்கு வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்ணை, எப்படியும் எடுத்து விடுவான். மூன்று ஆண்டுகளில், 'அரியர்ஸ்' கிடையாது. அதேபோல், கல்லுாரிக்கு, 'கட்' அடிக்கவும் மாட்டான். அதனால், மணிகண்டனை ஓரளவிற்கு மேல் கடிந்து கொள்ளவும் முடியாது.தேர்வு முடிவு வந்தவுடன், நிறைய இடங்களில் வேலைக்காக விண்ணப்பம் போட்டான், மணிகண்டன். நிறைய தேர்வுகளை எழுதினான். ஆனால், எழுதியவர்களின் எண்ணிக்கை, பல லட்சங்களை தொட்டது. 1,000 காலி இடங்களுக்கு, 10 லட்சம் பேர் எழுதும்போது, சாதாரணமாக படித்து பட்டம் பெற்ற அவனால், 'ரேங்க்'கில் வர முடியவில்லை.மரகதத்திடம், 'மணிகண்டனை, 'கோச்சிங் கிளாசில்' சேர்த்து விடுங்கள்... வங்கி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., -யூ.பி.எஸ்.சி., எல்லாவற்றையும் சுலபமாக எழுதலாம்...' என்றனர், ஒரு சிலர். மின் துறையில் பணிபுரிந்த, மணிகண்டனின் தந்தை, அவனது, எட்டு வயதில், பணி நேரத்தில் மின்சாரம் தாக்கி இறந்து போனார். ஆயிரத்தெட்டு நடைமுறைகளை செயல்படுத்தி, அவ்வப்போது கடன் வாங்கியதை கழித்தது போக, மீதியுள்ள சொற்ப தொகையாக வந்த, கிராஜுவிட்டி, பி.எப்., மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை வைத்து தான் குடும்பம் நடத்தினாள், மரகதம்; மணிகண்டனை, பி.காம்., வரை படிக்க வைத்தாள்.'மணிகண்டனுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டால் கவலையில்லை. இரண்டு, மூன்று வருடம் வேலை பார்த்து, 'செட்டில்' ஆகி விட்டால், அவனுக்கு கல்யாணத்தை செய்து விடலாம்...' என்று எண்ணினாள்.ஆனால், எதிர்பார்த்தபடி நடக்கவில்லை; வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருந்தது.வேதனைப்பட்டாள். தெய்வம் தான் துணை என்று, நவக்கிரக பிரதட்சணம், கோவில் எல்லா சன்னிதிகளையும் சேர்த்து அடி பிரதட்சணம், ஏகாதசி, கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி விரதங்கள் என, இருக்க ஆரம்பித்து விட்டாள்.பணியில் இருக்கும்போது, தந்தை இறந்ததால், குடும்பத்தில் ஒருவருக்கு பரிவு அடிப்படையில் வேலை தருவர் என்பதற்காக விண்ணப்பித்தான், மணிகண்டன். ஆனால், எப்போது கிடைக்கும் என்பது மட்டுமல்ல, கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாய் இருந்தது.மாதங்கள் ஓட ஓட, நொந்து போனாள், மரகதம்.ஒருநாள், அவளின் மூத்த சகோதரர் முருகானந்தம், நினைவு வந்தது. கரும்பு ஆலை ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், அந்த ஆலையில் வேலை செய்யும் ஆட்களுக்கு, பண தேவைக்கு, குறைந்த வட்டியில் பணம் கொடுத்து லேவாதேவி செய்து கொண்டிருந்தார். 'தொழிற்சாலையில், எல்லா தொழிற்சங்கங்களுடனும் இணக்கமாக உறவு இருக்கிறது. ஏதாவது உதவி வேண்டுமென்றால், எளிதாக சாதித்துக் கொள்ள முடியும்...' என்று, மரகதத்திடம் ஒருமுறை கூறியது, நினைவுக்கு வரவே, அவரை உடனே தொடர்பு கொண்டாள்.மறுநாளே வந்து, விபரங்களை கேட்டு, மணிகண்டனிடம் வேலைக்கான மனுவை, 'ஆன்லைனில்' அனுப்பி வைக்க சொன்னார்.''கவலைப்படாதே மரகதம்... கூடிய சீக்கிரம் வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்... என் மருமானுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறேன்,'' என்றார்.''அண்ணா... உனக்கு, நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை; என் நிலைமை உனக்கே தெரியும். உன்னோட மருமான், மணிகண்டன், இந்த காலத்து பசங்களை போல அகடவிகடமாய் பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவன்... ''அப்பாவை போலவே, பரம சாது. நியாயம், நேர்மை பற்றியெல்லாம் தான் பேசுவான். நீதான் அவனுக்கு ஒரு வழியை அமைத்து கொடுக்க வேண்டும். எனக்கும், உன்னை தவிர வேறு யார் இருக்கா... மணிகண்டன் சாமர்த்தியமாக இருந்து விட்டால், நான் இவ்வளவு கவலைப்பட மாட்டேன்,'' என்ற மரகதம், அழ ஆரம்பித்து விட்டாள்.''அழாதே மரகதம்... மனசுக்கு சங்கடமா இருக்கு... கூடிய சீக்கிரம் நல்ல செய்தியோடு வருகிறேன்,'' என்று சகோதரியை தேற்றி கிளம்பினார், முருகானந்தம்.சொன்னது போலவே, 20 நாட்களில், மணிகண்டன் வேலைக்கான உத்தரவோடு, வந்து விட்டார்.மகிழ்ந்த மரகதம், மணிகண்டனுக்கு நல்ல நேரம் வந்து விட்டதாக, தான் வேண்டிய தெய்வங்களுக்கெல்லாம் நன்றி சொன்னாள்; மாமாவிற்கு நன்றி கூறினான், மணிகண்டன்.''மரகதம்... இப்போதெல்லாம் வேலை கிடைப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. எப்படியோ எல்லா தொழிற்சங்க தலைவர்களிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி, மேலிடத்தில் பேசி, வேலைக்கான உத்தரவை வாங்கி விட்டேன்... எல்லாரும் எனக்கு வேண்டியவர்களாக இருந்ததால், இது சாத்தியமாயிற்று,'' என்றார், முருகானந்தம்.மரகதத்தின் கண்களில் நீர் முட்டியது.''தற்போதைக்கு மாத சம்பளம், 15 ஆயிரம் ரூபாய் தான். ஆனால், இரண்டு ஆண்டுக்கு பின், கூடுதல் சம்பளத்துடன் நிரந்தரமாக்கி விடுவர். பிழைத்து, கிடந்தால், நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம்,'' என்றார்.''ரொம்ப நன்றி, அண்ணா.''''கரும்பு ஆலை என்பதால், ஆண்டுக்கு, எட்டு மாதங்கள் தான் வேலை... நான்கு மாதங்களுக்கு, வேலை கிடையாது,'' என்றார்.''அப்போ, அந்த நான்கு மாதங்களுக்கு சம்பளம்...'' என்றாள், மரகதம்.''வேலையும் கிடையாது; சம்பளமும் கிடையாது,'' என்றார்.''மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றதும், ரொம்பவுமே சந்தோஷப்பட்டேன். ஆண்டுக்கு, நான்கு மாதம் சம்பளம் இல்லையென்றால், குடும்பம் எப்படி நடக்கும். அதைவிட குறைந்த சம்பளமாக மாதம், 10 ஆயிரம் ரூபாயாக கூட, ஆண்டு முழுவதும் வந்தால் நல்லதில்லையா, அண்ணா?'' என்றாள்.அம்மாவின் பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான், மணிகண்டன்.''மரகதம்... நீ சொல்வது புரிகிறது. ஆனால், கரும்பு ஆலை என்பதால், சட்ட திட்டங்கள் அப்படி இருக்கு. நாம் என்ன செய்ய இயலும்,'' என்றவர், ''அம்மா இப்படி சொல்றாங்களே... மணிகண்டா, நீ என்ன சொல்றே,'' என்றார்.அம்மாவையும், மாமாவையும் பார்த்தவாறே சிறிது நேரம் மவுனமாக இருந்தான், மணிகண்டன்.''அம்மா... நானும், இதுவரை எத்தனையோ தேர்வுகள் எழுதி விட்டேன். எதிலும், 'ரேங்கில்' வரமுடியவில்லை. என்னை பொறுத்தவரை நன்றாக தான் எழுதுகிறேன். ஆனால், என் திறமை அவ்வளவுதான்...''மாமா, அவர் செல்வாக்கில் எனக்கொரு வேலையை, நல்ல சம்பளத்துடன் வாங்கி தந்துள்ளார். அது, மிகப்பெரிய காரியம். அதை நாம் நிராகரிப்பது நியாயமாகாது. நமக்காக, யார் இவ்வளவு அக்கறையோடு உதவி செய்வர்... நான்கு மாதம் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை. அவ்வளவுதானே... ''ஆனால், நான்கு மாதம் முடிந்ததும் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியுமே... அது மிகப்பெரிய விஷயமில்லையா... அதோடு, எட்டு மாதங்களுக்கு, 15 ஆயிரம் சம்பளம் என்பதை விட, 10 ஆயிரம் சம்பளத்தில் ஆண்டு முழுவதும் கிடைத்தாலே நல்லது என்று கூறினீர்கள். அந்த வார்த்தைகள் தான் என்னை யோசிக்க வைத்தது, அம்மா.''என், காமர்ஸ் புரொபசர், 'எந்த ஒரு பிராபளத்திற்கும் மாற்று வழி உண்டு. தண்ணீர் ஓடி வரும்போது, அது வரும் வழியை மறித்தால், வேறொரு வழியில் நகர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அது போல் தான் நாமும். ஒரு வழி இல்லாவிட்டால் மாற்று வழியை கண்டுபிடித்து ஜெயிக்க வேண்டும்; சோர்ந்து விடக்கூடாது...' என்பார். அதன்படி, உங்கள் பேச்சிலிருந்து மாற்று வழியை கண்டுபிடித்து விட்டேன்,'' என்றான், மணிகண்டன்.''என்னடா என் பேச்சில் பெரிசா மாற்று வழியை கண்டுபிடித்து விட்டே... புதிர் போடுகிறாயா?'' என்றாள், மரகதம்.''மாமா, நிறைய சேமிப்பு சீட்டு நடத்துகிறார் இல்லையா... அவரிடம், சம்பளம் வாங்கியவுடன் மாதா மாதம், 5,000 ரூபாயை கொடுத்து விடலாம்; 10 ஆயிரம் ரூபாய் தான், சம்பளம் வருவதாக நினைத்துக் கொள்வோம். எட்டு மாதங்களில், மாமாவிடம், 40 ஆயிரம் சேர்ந்து விடும் அல்லவா... ''அதை அவர், வேலை இல்லா அந்த நான்கு மாதங்களுக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வீதம், சம்பளம் போல தந்து விட்டால் பிரச்னை தீர்ந்தது. உங்களின் ஆசியோடு கரும்பு ஆலை வேலைக்கு சேர விரும்புகிறேன்... அதோடு, 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்பீர்களே, அதையும் நான் மறக்கவில்லை... அது மட்டுமல்ல, கிடைத்ததை விட்டு, பறக்க ஆசைப்பட மாட்டேன், அம்மா,'' என்றான்.'என் மகன் மணிகண்டனா, இவ்வளவு முன் யோசனையுடன் பேசுகிறான்... அவனுக்கு நல்ல மூளையையும், சிந்தித்து பார்க்கும் திறமையையும் தந்திருக்கிறார், கடவுள். நான்தான் அவனை புரிந்து கொள்ளாமல் சாமர்த்தியம் இல்லாதவன் என்று நினைத்தேன்...' என்று மனதிற்குள் உருகினாள்.''மணிகண்டனுக்கு ஒன்றும் தெரியாது, சாமர்த்தியம் இல்லாதவன் என்றெல்லாம் சொன்னாயே, மரகதம்... இப்போ பார்த்தாயா... கல்லுாரியில், பொருளாதாரம் எடுத்து படித்தவன், எப்படி அதை தன் வாழ்க்கையின் துவக்கமாக நடைமுறைபடுத்தி விட்டான் பார்... ''அதோடு, பெரும்பாலான இந்திய குடிமகன்களின் மரபணுவில், சேமிப்பு என்கிற உணர்வு என்றும் உள்ளது என்பதை, எனதருமை மருமான் சம்பாதிக்க ஆரம்பித்த முதல் மாதமே, 5,000 ரூபாய் சேமிக்க திட்டம் போட்டு நிரூபித்து விட்டான்.''இனி... நீயோ, நானோ ஆலோசனை கூறவேண்டிய அவசியமே இல்லை. மணிகண்டனே, 1,000 பேருக்கு, 'அட்வைஸ்' தருவான்... அதோடு, இனி என் மருமானுக்கு சாமர்த்தியம் இல்லை என்று சொன்னால் நடப்பதே வேறு,'' என்று சொல்லி, சத்தமாக சிரித்தார், முருகானந்தம்.''மாட்டேன்... எதுவும் சொல்ல மாட்டேன்,'' என்று மகிழ்ச்சியுடன் சிரித்த மரகதம், மணிகண்டனை அணைத்து உச்சி முகர்ந்தாள்.சாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !