அந்துமணி பதில்கள்
*டி.கதிரேசன், பெருங்குடி: அரசியல்வாதிகள் எப்போது, முற்றும் துறந்தவர்கள் போல காட்சி அளிப்பர்?'எலக்ஷன்' நெருங்கும் போது!***** என்.பத்மநாபன், மதுரை: கடினமானது எது, சுலபமானது எது?உங்களைப் தூற்றி, பிறர் பேசக் கேட்கும் போது, அது பற்றி அக்கரை கொள்ளாமல் சட்டையில் ஒட்டிய தூசியாக தட்டி விட்டபடி புன்னகை பூப்பது கடினம்! பிறரைப் பற்றி கேவலமாகப் பேசும் போது சிரிப்பது சுலபம்!**** என்.கண்ணதாசன், திருப்பூர்: நான் சீக்கிரம் பணக்காரனாக விரும்புகிறேன். ஒரு வழி சொல்லுங்களேன்...ரொம்ப ஈசி... முடி இல்லாத தலையில் முடி முளைக்க வைக்கும் தைலம் ஒன்றை கண்டுபிடியுங்கள்... விளம்பரப்படுத்துங்கள். முடி வளர்கிறதோ இல்லையோ, நீங்கள் உடனே பணக்காரனாகி விடுவீர்கள்.***** மு.புண்ணியகோடி, சிட்லபாக்கம்: சினிமாப் பார்ப்பதையே கெடுதல் என்கிறீர்களா?இல்லை. எப்போதாவது வெளியாகும் நல்ல படங்களைப் பாருங்கள்; கெடுதல் இல்லை. கண்ட படங்களையும் தினமும் பார்த்து விட்டு, அதைப் பற்றியே பேசிக் கொண்டு பித்துப் பிடித்து அலைவதும், தமக்கு பிடித்த நடிகர், நடிகை என்று எவரையாவது சொல்லிக் கொண்டு, அவரை விட சிறந்தவர் எவரும் இல்லை என்று சண்டை இட்டுக் கொள்வதும் தான் கெடுதல்.**** ஆர்.சுகுமாறன், கொடைக்கானல்: நீங்கள், 'அப்செட்' ஆகிப் போவது எப்போது?போஸ்ட் ஆபீசுக்கு லீவு விடும் போது! தபாலும், தபால்காரரும் எனக்கு உயிர்...தபால் மூலம் தானே என்னுடன் நீங்கள் எல்லாம் தொடர்பு கொள்கிறீர்கள்!***** ஆர்.கோச்சடையான், புதுச்சேரி: அனுதாபத்திற்கு உரியவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?அரசியல்வாதிகளைத் தான்! பதவியை விட்டு இறங்கிய பின் தான் அவர்களுக்கு எத்தனை விதமான அவமதிப்புகள்; நம் கண் முன்னே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!**** ஏ.நகுல், காஞ்சிபுரம்: மனைவி கோபமாக இருக்கும் போது, கணவன் என்ன செய்ய வேண்டும்?நமக்கு அந்த அனுபவமில்லை... லென்ஸ் மாமாவிடம் கேட்டேன். அவர் சொன்னது: கணவனும் கோபம் கொண்டு, கத்தி, ரகளையில் ஈடுபடக் கூடாது; அமைதி காக்க வேண்டும். காரணம்: மனைவியின் கோபத்துக்குக் காரணமே, கணவனின் வேண்டாத செயலாகத்தான் இருக்கும். நியாயமான காரணமில்லாமல் பெண்களுக்கு கோபம் வராதே!**** எஸ்.ஆனந்தன், குமுளி: மனிதனுக்கு பைத்தியம் பிடிப்பதால் பலன் ஏதும் உண்டா?உண்டே; எதிர்ப்பேதுமின்றி தம் கருத்தைக் கொட்ட பைத்தியங்களால் தானே முடிகிறது!**** பி.தட்சிணாமூர்த்தி, சென்னை: தன்னிலையை ஒருவன் எப்போது அறிகிறான்?கல்யாணம் ஆனபின், குடும்பம் நடத்த பணத்திற்கு அலையாய் அலையும் போது!***