அந்துமணி பதில்கள்
பெ.வித்யா தாரணி, திருவையாறு: எதிர்பார்த்து, ஏமாற்றம் அடையும் போது, தாங்கிக் கொள்ள என்ன யோசனை?எதிர்பார்க்கத் தொடங்கும் முன்னரே, அந்த யோசனை மனதில் உதிக்கும் போதே, 'இப்படியும் நடக்கலாம்' என்று மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 'ரிசல்ட்' தெரியும் போது, பாதிப்பு அதிகம் இருக்காது!எஸ்.பாரதபிரியா, மணலாறு எஸ்டேட்: கணவனைக் கட்டிப் போட ஒரு பெண்ணுக்கு உதவக் கூடியது அழகா, அன்பா?நெளிவு சுளிவுடன் கூடிய ராஜ தந்திரம் போதுமே!க.செண்பகவள்ளி, குமுளி: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால்...அவளது உழைப்பு, பொறுமை, சின்சியாரிடி, நாசூக்கு, சாதுர்யம்!வி.சாந்தி, கோவை: காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளலாமா?காதலிக்கும் ஆசாமியின் மன நிலை, பண நிலையை பொறுத்து எடுக்கப்பட வேண்டிய முடிவு!எஸ்.சி. குணசேகரன், கடலூர்: பிடிவாதம் கொண்ட மனைவியின் அக்குணத்தை எப்படி போக்குவது?நீங்கள், 'டபுள்' பிடிவாதக்காரராக மாறுவது ஒரு வழி என்கிறார் அனுபவப்பட்ட உதவி ஆசிரியர் ஒருவர்!பி.செந்தூரன், பெரியகுளம்: அடுத்தவளின் கணவன் என்பது தெரிந்தும், சில திருமணமாகாத பெண்கள், ஆடவரிடம் நெருங்கிப் பழகுகின்றனரே...அந்த அடுத்தவளின் கணவரின் அறிவும், பழகும் விதமும் கவர்ந்திருக்கக் கூடும்; அந்த அடுத்தவளின் மண வாழ்வு பாழாகாமல் பழகும் வரை தோஷமில்லை!கே.ராஜாராம், வியாசர்பாடி: எதற்கெடுத்தாலும் பெண்கள் அழஆரம்பிக்கும் போது, ஏற்படும் எரிச்சலை தவிர்ப்பது எப்படி?அவர்கள் அழாமல் பார்த்துக் கொண்டால், எரிச்சல் ஏன் ஏற்படப் போகிறது. பூப்போன்ற மனதுடைய பெண்களை ஏன் அழ விட வேண்டும்? பின்னர், 'எதற்கெடுத்தாலும் அழுகை' என, ஏன் எரிச்சல் கொள்ளவேண்டும்! என்.ஜெயலட்சுமி, சென்னை: தெய்வ சன்னதிக்கு முன், சுயமரியாதைத் திருமணம் அல்லது பதிவுத் திருமணம் - எது சிறந்தது?செலவில்லாத் திருமணம்!ம.கந்தவேல், கம்பம்: உறவினர்கள், நண்பர்கள் இவர்களில் யாருக்கு அதிக மரியாதை தர வேண்டும்?பாக்கெட்டில், கை போடாதவர்களுக்கு!