உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எம்.கண்ணன், பொள்ளாச்சி: நிம்மதியை கொடுப்பதும், அதைக் கெடுப்பதும் பணம்... உங்கள் கருத்து என்ன?தவறு; அதை, கையாளும் திறமை படைத்தவன், இரண்டிற்கும் நடுவில் இருக்கிறான்.எஸ்.கே.குலசேகரன், போடிநாயக்கனூர்: அசைவ உணவு உண்பதால், உடல் பலம் கூடுமா?கொலஸ்ட்ரால் தான் கூடும். அசைவம் ரத்தக் கொதிப்பைக் கூட்டும்; மாரடைப்பை கொண்டு வரும். சைவம் சாப்பிடும் யானை, குதிரை, காட்டெருமை, நீர்யானை எல்லாம் பலம் வாய்ந்தவைகளாக இல்லையா?பி.வேணுபிரபாகரன், கும்மிடிபூண்டி: சுத்தத் தமிழன் எப்படி இருக்க வேண்டும்?அவர்க'ள்' என்பதை, அவர்க'ல்', இவர்க'ல்' என்று கல் விட்டெறியக் கூடாது. ழ,ள,ல ஆகிய எழுத்துகளை சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.ஆர்.திலகன், வீரபாண்டி: சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடியாக கட்டணம் கேட்கின்றனரே... இது ஏன்?இங்கு ஆட்டோ சொந்தக்காரர்கள் பெரும்பாலும் ஆட்டோ ஓட்டி தொழில் செய்பவர்களல்ல; நாள் வாடகைக்கு டிரைவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். தம் முதலீட்டை மூன்று ஆண்டுகளில் திரும்ப எடுத்து விட முயல்வதால், அதற்கேற்ப அதிக வாடகை நிர்ணயம் செய்கின்றனர். இதுவே, அடாவடி கட்டணங்களுக்கு காரணம். 'டியூ' முடிந்த பின்னும் அடாவடி கட்டணங்கள் தொடர்வது ஏன் என்பது புரியாத புதிர்!கே.சக்திவேல், திருப்புவனம்: வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் உண்டாக வழி என்ன?முடிந்தாலும், முடியாவிட்டாலும் நம்மால் முடியும் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். சோர்வு ஏற்படும் போதெல்லாம் நார்மன் பிராய்டு போன்ற அறிஞர்களின் புத்தகங்களைப் படிக்க வேண்டும். அவை, ஊக்கத்தைத் தரும்; உற்சாகம் தானே வரும். முயன்று பாருங்கள்!எம்.கோபாலகிருஷ்ணன், உடுமலைப்பேட்டை: 'பார்சி'கள் என ஒரு இனத்தை அழைக்கின்றனரே... அவர்கள் யார்?இன்றைய ஈரான் நாடு, முன்பு, பாரசீகம் என அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்தவர்கள் பார்சிகள். இவர்கள், சாரதூஷ்டிரம் என்ற மதத்தை பின்பற்றினர். கி.பி., 7ம் நூற்றாண்டில் அரேபியர் படையெடுத்து, மத மாற்றம் செய்த போது, மதம் மாற விரும்பாத பார்சிகள், இந்தியாவில் தஞ்சமடைந்தனர். பாரசீகத்திலிருந்து இங்கு வந்ததால், பார்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.ப.மலர்செல்வி, காஞ்சிபுரம்: தற்பெருமை ஒரு மனிதனிடம் எப்போது, எதனால் உண்டாகிறது?நிறைகுடமாக இல்லாதவன் தற்பெருமைக்காரனாக இருப்பான். இது, அவன் மடையனாவதற்கு அடுத்த நாள், அழிவதற்கு முந்தைய நாளில் உண்டாகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !