அந்துமணி பதில்கள்!
ஆர்.புருஷோத்தமன், சென்னை: சுற்றுச்சூழல் மாசு அதிகமாகிக் கொண்டே போகிறதே... இதைக் குறைக்க, தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும்?மறு சுற்றுக்கு பயன்படாத பிளாஸ்டிக் உபயோகத்தை அறவே நிறுத்த வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது, துணிப் பையைக் கொண்டு செல்ல வேண்டும். அடுத்ததாக வேலைக்கோ, பள்ளிக்கோ செல்ல ஒவ்வொருவரும் பைக், ஸ்கூட்டர் பயன்படுத்தாமல் இருந்தால், ஓர் ஆண்டில், ஒரு நபர் மூலம் ஏற்படும், 4.52 கிலோ ஹைட்ரோ கார்பன், 31.25 கிலோ கார்பன் மோனாக்சைட், 2.45 கிலோ நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய நச்சுக் கலப்பு உருவாவதைத் தடுக்க முடியும்!ஜி.ரத்னாவதி, பொள்ளாச்சி: நகர்புற மக்களுக்குத் தானே சர்க்கரை வியாதி, மாரடைப்பு வருகிறது... ஏன்?அவர்கள் தான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்கின்றனர்... வியாதிகள் வெளியே தெரிய வருகின்றன. கிராமப் புறங்களிலும் இவ்விரண்டு வியாதிகளும் இருக்கத்தான் செய்கிறது; மாரடைப்பில் இறந்தால்,'கபால்ன்னு வாயுப் பிடிப்பு வந்து செத்துட்டார்...' என்று துாக்கிப் போட்டு விடுகின்றனர். எம்.சக்தி, பெங்களூரு: அந்துமணி கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வது யார்?கனவே வருவதில்லை! யாரிடமும் கடன் வாங்கவில்லை நான்; தலையணையில் தலை சாய்த்த உடனேயே, 'கொர்!'* எஸ்.நித்திஷ், திண்டிவனம்: யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?பொய்யான முகஸ்துதி செய்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடிய விஷம் நிறைந்த மாயை தான் முகஸ்துதி. இதில் அகப்படாதவர்கள் இருக்க முடியாது. எனவே தான், இவர்களிடம் ஜாக்கிரதை என்கிறேன்!எம்.சுகுமார், கம்பம்: இந்த சமூகத்தில் நாலு பேர் மதிக்கும்படி நல்லவனாக வாழ ஆசைப்படுகிறேன்... அதற்கு என்ன செய்ய வேண்டும்?உங்கள் மனசாட்சி சொல்வதைக் கேளுங்கள்... மாமனிதனாகி விடுவீர்! மனசாட்சி, கெட்டதை ஒரு போதும் சொல்லாது... உங்கள் ஆசை நிறைவேறும்!* சி.கார்த்திகேயன், சிவகங்கை: எனக்கு மன அமைதியே இல்லை; எப்போதும் சஞ்சலத்தில் உள்ளதே மனம்...மனம் அமைதியற்று போவதற்கு தலையாயக் காரணம், யோசனை இன்றி போவது தான். இந்த மரத்தை இங்கு வெட்டினால், இங்கே விழும் எனத் தெரிந்து கொள்ளாமல், நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டுவது போன்ற செயல்களால் மன அமைதி தொலைந்து போகும்!ரா.மஞ்சுளா, காஞ்சிபுரம்: நடிக, நடிகையர் சமூக சேவையில் அதிகமாக ஆர்வம் காட்டுவதில்லையே... ஏன்?அவர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்... அவர்களுக்குத் தொழில் நடிப்பு; செவ்வனே அதைச் செய்து கொண்டுள்ளனர். அவர்களை கடவுளாகவும், உயிர் காப்பானாகவும் உருவகப்படுத்திக் கொள்வதை கைவிடுங்கள்!