அந்துமணி பதில்கள்!
** க.ஜெகதீசன், சிதம்பரம்: பிறரை ஏமாற்றாமல் உண்மையான உழைப்பு இருந்தும், சேமிக்க இயலாத நிலையில், அத்தியாவசியமான செலவுகள் வந்து விடுகிறதே...'இயலாது' என்பது தோன்றி விட்டாலே, எல்லா சங்கடங்களும் வந்து சேர்ந்து விடும். தேவைகள் எதையாவது குறைத்துக் கொள்ளும் மனத்துணிவை வளர்த்துக் கொண்டால், சேமிப்பு கை கூடி விடும். சேமிப்பு இல்லாத வாழ்வு என்றுமே, 'டென்ஷன்' நிறைந்ததாகத்தான் இருக்கும்!****ரா.தேவராசன், உசிலம்பட்டி: வீடியோ சாதனங்களில் என்னென்ன முன்னேற்றங்கள் வந்துள்ளன?தேவராசன் சார்... உங்கள் தலைமுடி கறுப்பா? இதை பச்சை, மஞ்சள், வெள்ளை... ஹும்... இன்னும் என்னென்ன நிறக் கலவை சேர்க்க முடியுமோ சேர்த்து, அந்த வண்ணத்தில் காட்ட முடியும். இதே போல, உடையை - உடலை! நீங்கள் உசிலம்பட்டியை விட்டு தாண்டாத, கோட், சூட்டே போட்டு அனுபவமில்லாதவரா? உம்மை கோட், சூட் போட்டு, நியூயார்க் நகர தெருவில் நடந்து வருவது போல காட்ட முடியும். விண்கலத்தில் சென்று, நிலவில் இறங்கி நடப்பது போல, நீல் ஆம்ஸ்ட்ராங் தலைக்கு பதில் உம் தலையை வைத்து காட்ட முடியும்... இன்னும், இன்னும் எத்தனையோ...!****ஆர்.நல்லமுத்து, கோவில்பட்டி: பரீட்சை வைத்து விட்டல்லவா பாடம் நடத்துகிறது அனுபவம்... என்ன செய்ய?ஏற்கனவே பாடம் படித்த, 'பெரிசு'களின் சொல் கேட்டால், பரீட்சையில் பெயிலா காமல் இருக்கலாம். ஆனால், இந்த கால இளசுகள், 'தோடா... ஆரம்பிச் சுட்டுதுப்பா...' என, பெரியவர்கள் வாயைத் திறந்தாலே, அலுத்துக் கொண்டு, இடத்தை காலி செய்கின்றனரே...****எம்.அனிதா, கம்பம்: வரதட்சணைக் கொடுமை - எங்களை மாதிரி சில கன்னிப் பெண்கள் வாழ்வதா, சாவதா?இந்த இளைஞர் சமுதாயம் என்னவோ திருந்தி விட்டது. 'வரதட்சணையே வேண்டாம், கல்யாணம் செய்து கொடுங்கள்!' என முன்வரும் இளைஞர்களை, ஏதோ வியாதி, கியாதி இருக்கும் எனக் கூறி, விரட்டி விடுகிறீர்களாமே!***** கோ.ராமசாமி, ஊட்டி: தற்போதுள்ள வாழ்க்கைச் சூழ்நிலையில், பொறுமை, நிதானம், சத்தியம் இவற்றால் முன்னேற முடியும் என்று நம்புகிறீர்களா?பொறுமை, நிதானம், சத்தியம் இவற்றோடு புத்திசாலித்தனமும் இணைந்து கொண்டால், முன்னேற முடியாது என்றா சொல்கிறீர்கள்? கம்ப்யூட்டர் கண்டுபிடித்த ஆசாமி முதல், நம்மூர் இளம் விஞ்ஞானிகள் வரை உதாரணம் எடுத்துப் பாருங்கள்.****வி.பாலகிருஷ்ணன், விழுப்புரம்: சின்னச் சின்ன கிராமங்களில் கூட, பொடியன்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டனரே...எப்போதும் சினிமா பற்றி பேசி, வெட்டியாக அலையாமல், உருப்படியாக உடற்பயிற்சியாவது செய்கின்றனரே என எண்ணி மகிழுங்கள்!****எஸ்.சங்கரநாராயணன், பொள்ளாச்சி: சந்தா செலுத்தி வரவழைக்கும் பத்திரிகைகள், குறிப்பிட்டது போல கிடைக்காததற்கு யார் காரணம்? பத்திரிகையா, தபால் துறையா? அஞ்சாமல் பதில் கூறவும்!90 சதவீதம் தபால் துறை தான். நூல் அஞசல் மூலம் அனுப்பப்படும் சுவையான செய்திகள் அடங்கிய பத்திரிகைகள் என்றால், பெரும்பாலும் சந்தா செலுத்தியவருக்கு கிடைக்காது! சில சந்தர்ப்பங்களில் (அதாவது, 10 சதவீதம்!) பத்திரிகை வெளியீட்டாளர்களின் தரப்பிலும் தவறு ஏற்படுவது உண்டு.***