அந்துமணி பதில்கள்!
* அ.முருகானந்தம், பெங்களூரு: வெட்டிப்பேச்சு பேசி, நம் நேரத்தை வீணடிப்பவரிடம் இருந்து தப்பிப்பது எப்படி?உங்கள் அலுவலக மேஜை மீது, 'எனக்கு நிறைய வேலை இருக்கிறது... உங்களுக்கு?' என, ஒரு போர்டு வைக்கலாம்.* உங்களுடன் நிறைய பேச ஆசை தான்... ஆனால், அவசர வேலைகள் நிறைய இருக்கு... பின்னர் பேசுவோமா... என நாசூக்காக கழற்றி விடலாம்!* ஜாமின் கொடுக்க ஒரு ஆளை தயாராக வைத்திருக்கலாம்.* 'வெட்டிப் பேச்சு' துாரத்தில் வருகிறது என தெரிந்தால், 'அப்ஸ்காண்ட்' - - தலைமறைவாகலாம்! எல்.சூரியக்கண்ணு, சென்னை: வாழ்க்கை வெறுத்து விட்டது. ஏதேனும் வெளிநாட்டுக்கு ஓடி விடலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் சிபாரிசு செய்யும் நாடு எது?நியூசிலாந்து! மனிதர்களை விட கால்நடைகளே அதிகம் உள்ள நாடு அது. நம்ப வைத்து கழுத்தறுக்காதவை கால்நடைகள். அங்கே செட்டில் ஆகி விடுங்கள்.* கு.சந்திரன், சீர்காழி: வாழ்க்கைத் துணையை, 'கால்குலேட்டிவ்' ஆக தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் இக்காலப் பெண்களா, ஆண்களா?'அவன்ட்ட டூ வீலர் இருக்குதா... கார் இருக்குதா... சொந்த வீடா... வாடகை வீடா... மற்றும் சொத்து பத்து எவ்வளவு? சம்பளம்,- வருமானம் என்ன... இப்படியெல்லாம் கணக்குப் போட்டு, வாழ்க்கைத் துணையை முடிவு செய்வது பெண்கள் தான். மனதுக்கு பிடித்து விட்டால், ஓ.கே., சொல்லி விடுவான் ஆண் என்கிறார், சமீபத்தில் திருமணமான, ஆண், உ.ஆ., ஒருவர்.அ.சமீனா, திருவண்ணாமலை: நட்புடன், சகோதர பாசத்துடன் ஒரு ஆணிடம் பேசும், பழகும் பெண்களை, அந்த நபரோடு முடிச்சுப் போட்டு, வம்பு பேசுவது நம் நாட்டில் மட்டும் தானா... மேலை நாடுகளிலும் உண்டா?முன்னேறாத, சமூகப் பார்வை விரிவடையாத சில ஆசிய நாடுகளில் மட்டுமே இந்த அவலம் தொடர்கிறது... மேலை நாடுகளில் இது ஒரு விஷயமே அல்ல!* என்.ரெங்கநாயகி, திருப்பூர்: திரும்பத் திரும்ப ஒன்றை செய்வதாலும், நினைப்பதாலும் அது நிஜமாகி விடுமா?உளவியலார், 'நிஜமாகி விடும்' என்கின்றனர். ஒருவன் கோபக்காரனாக, முன் கோபியாக இருக்கிறான். அவன், இக்குணங்கள் தன்னை விட்டு அகல வேண்டும் என எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தால், நாளாவட்டத்தில் மாற்றம் கண்டே தீருவார் என்கின்றனர்.எஸ்.கே.சவுந்தரராஜன், ஸ்ரீவில்லிபுத்துார்: சிறைவாசம் முடிந்ததும், பிக்பாக்கெட் திருடர்கள், மறுபடி அதே தொழிலைத் தானே செய்கின்றனர். அவர்களைத் திருத்த வழி கிடையாதா?நம் சட்டங்கள், பிக்பாக்கெட் திருடர்களைத் திருத்தும் அளவில் இல்லை. கடுமையான சிறை தண்டனை தான் ஒரே வழி!வி.வெண்ணிலா, ராமேஸ்வரம்: அந்துமணிக்கு எப்படிப் பட்ட பெண்களைப் பிடிக்கும்?சொந்தக்காலில் நிற்க துணிவுள்ள, அதற்கான திறமை பெற்ற,- பெற முயலும் பெண்களும், அசட்டுத் தனமான வெட்கம் காட்டாத பெண்களும், நாலு பேர் மத்தியில் தைரியமாகப் பேசத் தெரிந்த பெண்களும், கண்ணெதிரே நடக்கும் கொடுமையைத் தட்டிக் கேட்கும் துணிவுள்ள பெண்களும்... எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்களுக்கும் பிடிக்கும்!