அந்துமணி பதில்கள்!
கி.கோமதி, வலையபட்டி: சுதந்திர தினத்திற்கு விடுமுறை தேவையா?தேவை இல்லை; கொடிக்கு வணக்கம் செலுத்தி, வேலையைப் பார்ப்பது தான், நமக்கு கிடைத்த சுதந்திரத்திற்கு கொடுக்கும் மதிப்பாகும்! இது போலவே இன்னும் பல தேசிய விடுமுறைகளும், மக்களை சோம்பேறிகளாக்கிக் கொண்டிருக்கின்றன!எல்.கஸ்துரி, பெங்களூரு: திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்; கணவரிடம் கண்டிப்பாக இருப்பது நல்லதா அல்லது அடங்கி நடப்பது நல்லதா?இரண்டாவதை தேர்வு செய்ய வேண்டாம்; முதலாவதும் ஒத்து வராது... சமத்துவம் பாராட்டி, அன்பு செலுத்தி குடும்பம் நடத்துங்கள்... தெளிந்த நீரோடையாகும் இல்வாழ்க்கை!* பா.அஷ்டலட்சுமி பாலு, சங்கராபுரம்: அயல்நாடுகளுக்கு நிகராக நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துக்கள், நம் பெண்களின் சுதந்திரத் தன்மையைக் காட்டுகிறதா அல்லது அடக்கமின்மையை வெளிப்படுத்துகிறதா?இரண்டுமே இல்லை! சகிப்புத் தன்மையின் சிகரங்கள், நம் இந்தியப் பெண்கள்... அவர்களே விவாகரத்துக்கு துணிந்து விடுகின்றனர் என்றால், பொறுமையின் எல்லையைத் தொட்டு விட்டனர் என்றே கொள்ள வேண்டும்!* கி.தமிழ்ப்பாவை, சென்னை: நடிகையரை அட்டையில் போட்டால் தான் பத்திரிகை விற்குமா?இல்லை என்றாலும்... தேசத் தலைவர்களையும், இயற்கை காட்சிகளையும், மிருகங்களையும், ஆண்களின் முகங்களையும் எத்தனை வாரம் தான் ரசிப்பர்!என்.துளசிதாஸ், ராஜபாளையம்: அழகான பெண்களைக் கண்டால், உமக்கு என்ன நினைக்கத் தோன்றும்?ஓரக் கண்ணால் ரசிக்கத் தோன்றும் தான்... ஆனாலும், சங்கோஜம் தடுத்து விடுகிறதே!கே.ராகவன், மதுரை: வருங்கால மனைவியிடம், திருமணத்திற்கு முன்பே என் நிறை, குறைகளைச் சொல்வது தவறா?தவறே இல்லை; அவர் உங்களை புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தன்னை தயார் செய்து கொள்ளவும், மிகவும் உதவியாக இருக்கும்; எல்லாருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பம் அல்ல இது... ஜமாயுங்கள்! * மீனா குமாரவேல், சிதம்பரம்: சாதாரண பாட்டாளி ஓடி ஓடி சம்பாதித்தாலும், கோடீஸ்வரனாக முடிவதில்லையே...முடியாது... உடல் உழைப்பு மட்டுமே பாட்டாளியைப் பணக்காரனாக்காது... மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்... அது, பல சமயங்களில் கை கொடுக்கும்; பையை நிறைக்கும்!