உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* டி.கே.குமார், சேத்தியாதோப்பு: நாம் எப்படி வாழ வேண்டும்?மனசாட்சி சொல்படி வாழ வேண்டும்; அதுவே உண்மையான நீதிமன்றம்! மன சாட்சியை மறைப்பவர்களிடம் நேர்மை மற்றும் மகிழ்ச்சி இராது! பதட்டமும், பொய்யும், கோபமும், பகையும் நிரந்தரமாக குடியேறி விடும் அவர்களிடம்!எல்.மூர்த்தி, சென்னை: என்னால் இயன்ற, சிறிய அளவிலாவது மக்கள் சேவை செய்ய நினைக்கிறேன்... அதை ஒரு கடமையாகவும் எண்ணுகிறேன்... என்ன செய்யலாம்?உடனிருப்பவர், சுற்றத்தார் அடையும் துக்கத்தை துடைக்க முயலுங்கள்! மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும், மக்களின் துக்கத்தை துடைப்பது தான்!பத்மா சுப்பிரமணி, கோவை: எதற்கெடுத்தாலும் சிரித்து, சிரித்து சமாளிக்கின்றனரே சிலர்...கெட்டிக்காரர்கள்! சிரித்து, சிரித்து சமாளிப்பதன் மூலம், அடுத்தவர் மனதை நோகடிக்க, புண்படுத்தும் அவசியம் ஏற்படுவதில்லை... அனாவசியமாக பொய் பேச வேண்டியதில்லை... விஷயங்களை பூசி மொழுகி விடலாம் பாருங்கள்!* வி.மணிகண்டன், காஞ்சிபுரம்: இதுவரை பணம் கடன் கேட்காத நண்பர், இப்போது என்னிடம் கடன் கேட்கிறார்... என்ன செய்ய?திரும்ப வரும் என நினைத்து கொடுத்தீர்களானால், மனஸ்தாபம், நட்பு முறிவு, பகையே உண்டாகும்! வராது என முடிவு செய்து, ரூ.100 கேட்கும் இடத்தில், 50ஐ கொடுத்தால், நஷ்டமும் குறைவு; பகையும் இல்லை!* என்.மதியழகன், திருப்பூர்:நம்மவர்கள், ஆங்கில மோகம் பிடித்து அலைகின்றனரே... இங்கிலீஷ் மீடியத்தில் படித்தால் மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?இங்கிலீஷ் மீடியத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் ரெண்டும் கெட்டானாகத்தான் இருக்கின்றனர். அவர்களால் ஆங்கிலத்தையும் முழுமையாக கையாள முடிவதில்லை... தமிழும் தெரிவதில்லை! 'தோசை' என எழுதச் சொன்னால், 'தேசை' எனவும், 'காக்காயை' 'கக்கய்' என்றுமே எழுதுகின்றனர்! தமிழ் போதனா முறையில் படித்த அப்துல் கலாம், ஒரு அணு விஞ்ஞானி; நாட்டின் ஜனாதிபதியாக இருந்து, மறைந்தார். இந்தியும், பஞ்சாபியும் கற்ற மன்மோகன் சிங், மிகப் பெரிய பொருளாதார மேதை, பிரதமராக பதவி வகித்தார்.ஏ.எஸ்.ஆனந்தன், தஞ்சாவூர்: வார இதழ்களுடன் இலவசப் பொருட்கள் கொடுப்பதால், இதழ்களின் விற்பனை உண்மையிலேயே அதிகரிக்குமா...திருநெல்வேலி அல்வா சுவையாக இருக்கும் என, கேள்விப்பட்டு இருக்கிறோம். நாமே நேரடியாக சுவைத்தால் தானே உணர முடியும்! அதைப் போன்றது தான் வார இதழ்கள், இலவச பொருட்கள் கொடுப்பதும்! இலவசப் பொருள் கொடுக்கும் வாரங்களில் இதழ்களின் விற்பனை இருமடங்கு இருக்கும்! இலவசப் பொருட்களுக்காக வாங்கும் புதிய வாசகர், அந்த வார இதழின் சிறப்பு அம்சங்கள் பிடித்திருந்தால் திரும்ப வாங்குவார்; அடுத்த வாரம் இலவசப் பொருள் இல்லையெனில் புத்தகம், கடையிலேயே தொங்கும்; துாங்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !