உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கே. வினாயகம், புதுடில்லி:'ரஜினிகாந்த் பேச்சை யாரும், 'சீரியசாக' எடுத்துக் கொள்ள வேண்டாம்...' என்று, ம.தி.மு.க., நிறுவனர், வைகோ பேசியுள்ளாரே...
இவர், வேலைக்கு அமர்த்தி இருக்கும் உதவியாளர் எழுதிக் கொடுப்பதைத் தான் பேசுகிறார்... அதை எந்த மக்கள் தான், 'சீரியசாக' எடுத்துக் கொள்வர்?
வ. கணேசன், சென்னை: 'ஆன்லைன்' சூதாட்டத்தை ஒழிக்க, மக்களிடம், அரசு கருத்து கேட்பது சரியா?
இந்த சூதாட்டத்தால் தினமும் தற்கொலைகள் நிகழ்ந்து வருவதை அரசு அறியாதா... இதில், தி.மு.க.,வினர் உள்ளனர் போலும்... அதனாலேயே இப்படி காலம் தாழ்த்துகின்றனர்...
* எம்.பி. தினேஷ், கோவை: 'ஊழலற்ற, நேர்மையான ஆட்சி மேற்கு வங்கத்தில் நடைபெறுகிறது...' என்று அம்மாநில முதல்வர் மம்தா கூறுகிறாரே...
அவரது நேரடி உதவியாளரே ஊழலில் மாட்டிக் கொண்டுள்ளாரே... இனி, இதுபோன்ற, 'டுபாக்கூர்' அறிக்கைகள் விட மாட்டார் என, நம்புவோம்!
எஸ். சாகுல் அமீது, தஞ்சை: கள்ளக் காதலியின் அழகில் மயங்கி, தன் மனைவியின், 550 பவுன் தங்க நகைகளை திருடி கொடுத்துள்ளாரே, ஒரு தொழில் அதிபர்...
இவர் வாங்கிக் கொடுத்ததாக இருக்காது... மாமனார் வீட்டிலிருந்து வந்த நகையாக இருக்கும்... ஏமாளி அவர்... கள்ளக் காதலி அந்த நகைகளை தன் இரண்டாவது காதலனிடம் கொடுத்து, மாட்டிக் கொண்டுள்ளாரே...
* ஆர். பிரகாஷ், திருச்சி: 'தேசிய கொடியை ஏற்றி, அதற்கு வணக்கம் செலுத்த மாட்டேன்...' என, கிறிஸ்துவ மத பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் மறுத்துள்ளது குறித்து...
நம் நாட்டு தேசியத்திற்கு மறுப்பு தெரிவித்தவரை, நாடு கடத்த வேண்டும்... இதுதான் அவருக்கு சரியான தண்டனை!
ஆர். கோவிந்தன், கோவை: உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டுமா?
கண்டிப்பாக... நம் வாழ்நாள் குறைவாகவே உள்ளது... அன்பை பலவீனமாக நினைக்காதீர்கள்... அப்படி நினைத்தால், பலவீனமாகி விடுவீர்கள்!
ஆர். அமிர்தரூபன், குமரி: எடப்பாடியை, பன்னீர் உறவாட அழைப்பது?
எவ்வாறு அழைப்பு விட்டாலும், எத்தனை கோர்ட் உத்தரவிட்டாலும், இருவரும் இனிமேல் ஒன்று சேரப் போவதில்லை... இது தான் உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !