உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* பா. ஜெயக்குமார், வந்தவாசி: காங்கிரஸ் தலைவர் பதவியை தொடர்ந்து, ராகுல் மறுத்து வருகிறாரே... ஏன்?
தன் பெயரையும், மதிப்பையும் மக்களிடம் காத்துக் கொள்ளத்தான்... தான் தலைவரானாலும் மத்தியில், காங்., அரசை கொண்டு வர முடியாது என்பது, அவருக்கு நிச்சயமாகத் தெரியும்... அதனால் தான்!
ஜி. அர்ஜுனன், திருப்பூர்: தன்னையும், தன் மகன் உதயநிதியையும் பார்த்தால், 'அண்ணன், தம்பியா?' எனக் கேட்கின்றனர் என்கிறாரே, ஸ்டாலின்...
கேட்பவர்கள், உதயநிதிக்கும், 69 வயது ஆகிவிட்டதோ என்று நினைக்கின்றனர் போலும்... காரணம், ஸ்டாலினுக்கு, 70 வயதாகி விட்டதே!
க. முருகன், நெல்லை: என் நண்பன், அமெரிக்காவில் மனைவியுடன் வசிக்கிறான்... தந்தை கிடையாது... தாய், தனிமையில் சென்னையில் வசிக்கிறாள்... அவனுக்கு ஒரு அறிவுரை கூறுங்களேன்...
நம்மை பெற்ற தாய், நமக்கு என்ன வேண்டுமோ அத்தனையும் செய்கிறாள்... வாழ்நாள் முழுவதும் நம்மை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாள். உங்களது நண்பரால், தன் தாயை அமெரிக்கா கூட்டிச் செல்ல இயலாது... தானும் வேலையை விட்டு வர இயலாது... தாய் தாங்கிக் கொள்ள வேண்டியது தான்!
* கி. ராமச்சந்திரன், மண்ணுார், கோவை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த முடியுமா... வெற்றியடையுமா?
பூரண மதுவிலக்குள்ள குஜராத் மாநிலத்திலேயே, கள்ளச் சாராயம் குடித்தவர்கள் எத்தனை பேர் மரணம் அடைந்தனர் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்களே... தமிழகத்திலும் மதுவிலக்கு வந்தால், இதுபோல் நிகழும்!
ஆர். அமிர்தரூபன், குஞ்சன்விளை, குமரி: போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்க காரணம்?
'டாஸ்மாக்'கில் விலை அதிகம்... பாட்டிலில் போட்டிருக்கும் விலையை விட அதிகம் வாங்குகின்றனர்... கஞ்சா போன்ற போதை பொருட்கள் விலை குறைவு... அதனாலேயே நடமாட்டம் அதிகரித்துள்ளது!
மா. தருண்ராஜா, பாப்பான்குளம், தென்காசி: 'ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும், லியோனி மீது நடவடிக்கை அவசியம்...' என்று, எச்.ராஜா வலியுறுத்தி உள்ளாரே...
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... இப்போது, பாட நுால் கழக தலைவர் என்ற, தமிழக அரசின் கவுரவமான பொறுப்பில் இருக்கிறார்... முன்னர் அவர், யாரையோ மகிழ்விப்பதற்கு பணம் வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்... இப்போது பேசலாமா?
அ. சேகர், கடையநல்லுார்: எனக்கு, இன்பமும் வருகிறது, அதே நேரத்தில் துன்பமும் வருகிறதே ஏன்?
இன்பமும், துன்பமும் உங்களால் தான் உங்களுக்கு வரும்... வேறு யாருமே அதற்கு பொறுப்பல்ல... ஒருவருக்கு அவரே சொர்க்கம், அவரே நரகம்... புரிந்து கொள்ளுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !