அந்துமணி பதில்கள்
*பி.மணியன், பொன்னேரி: யாரைக் கண்டால் உங்களுக்கு பிடிப்பதில்லை?சிரித்து பேசி, பின்னால் குழிபறிக்கும் கயவர்களை, முகஸ்துதி செய்யும் குள்ள நரிகளை, உப்பு சப்பில்லாத விஷயங்களை, திரும்பத் திரும்ப சொல்லி கழுத்தறுக்கும், லூசுகளை, மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் மூடர்களை!***** மா.பத்திரி நாராயணன், கடம்பத்தூர்: நான் முன்னேற துடிக்கிறேன். என்னிடம் என்ன, 'குவாலிட்டி' எல்லாம் இருக்க வேண்டும்?யானையின் வலிமை, சிங்கத்தின் துணிவு, ஒட்டகத்தின் பொறுமை, மீனின் துள்ளல், நாயின் மோப்பம், எறும்பின் சுறுசுறுப்பு, தேனீயின் உழைப்பு, கொக்கின் விழிப்பு, புலியின் பாய்ச்சலும் இருந்தால், உங்களை கையிலே பிடிக்க முடியாது... அவ்வளவு உயரத்திற்கு சென்று விடலாம்.****கே.சந்திரா, காட்டூர்: எழுதுவதற்கு ஏற்ற நல்ல நேரம் எது?எல்லாரும் தூங்கும் அதிகாலை நேரம் - யாருமே, 'டிஸ்டர்ப்' செய்யாத, போன் கால் தொந்தரவு அற்ற ஞாயிற்றுக் கிழமை - இருக்கும் இடம் பிறருக்கு தெரியாத வெளியூர் ஓட்டல் ரூம்.****ஏ.முத்துலட்சுமி, திருப்பரங்குன்றம்: வாழ்வில் துன்பம் எப்போது வரும்; இன்பம் எப்போது வரும்?துணிவு இருந்தால், கூடவே இன்பமும் இருக்கும். துணிவை இழந்து விட்டால் - இன்பம் போல் துன்பம் வந்து சேரும்.****கா.தமிழ் செல்வி, பாலகிருஷ்ணாபுரம் புதூர்: கூட்டுக் குடும்பத்து மருமகள், வீட்டில் நைட்டி அணிந்து கொள்ளலாமா?கண்டிப்பாக அணிந்து கொள்ளலாம்! சேலை அணிந்து, அடுக்களையில் அவர்கள் படும் அவஸ்தையை சொல்லி விளக்கி விட முடியுமா? லூஸ்பிட்டிங், ஆனால், 'திக்' துணியிலான நைட்டிகள் சவுகரியமாகவும், விரசமில்லாமலும் இருக்கும்.***** சு.ராமசாமி, சிவகிரிப்பட்டி: வேலைக்கு போகும் பெண்கள், முழு சுதந்திரம் அடைந்து விட்டார்களா?தைரியம் அடைந்திருக் கிறார்களே தவிர, முழு சுதந்திரம் கிடைத்து விடவில்லை! அவர்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடாமல், தகப்பனோ, கணவனோ, சகோதரனோ, 'டாமினேட்' செய்து கொண்டுதான் உள்ளனர்.****கு.ஜெயசந்திரன், புதுப்பாளையம்: பத்திரிகைக்கும் - வாசகர்களுக்கும் இடையே உறவு எப்படி இருக்க வேண்டும்?புகுந்த வீடு சென்ற பின்னும், தன் தாய் வீட்டு மீது ஒரு பெண் வைத்திருக்கும் பாசம் போல் இருக்க வேண்டும்.***** ஆர்.கதிர்வேலன், செம்மண்டலம்: இன்றைய சூழ்நிலையில் யாரை நம்புவது - யாருக்கு உதவுவது?இன்றைய தேதியில், உங்களையே நீங்கள் நம்புங்கள். உங்களுக்கு நீங்க@ள உதவிக் கொள்ளுங்கள்... இல்லாவிட்டால், நம்பிக்கை துரோகம் மிகுந்து விட்ட இந்த நாளில் உருப்பட முடியாது!***