அந்துமணி பா.கே.ப.,
ஜெர்மனியைச் சேர்ந்த சமூக வாழ்வியல் பேராசிரியர் ஒருவர், உலகம் முழுவதும் சுற்றி, 5,000 தம்பதியர்களை பேட்டி கண்டு, தாம்பத்தியம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்... * பெரும்பாலான காதலர்கள், முதலில் காதல் வயப்பட்டு இணைகின்றனர். நடு நடுவே சில தகராறுகள் எழுந்து, வளர்ந்து மறைகின்றன. இறுதியில், காதல் தீவிரமாகி, திருமணத்தில் நிறைவு பெறுகிறது.* திருமணமானதும் சில நாட்கள் சுற்றுலா, உறவினர் வீட்டு விசேஷங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு, காலம் கழிக்கின்றனர். * திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனதும், கணவன் - மனைவியின் பொழுதுபோக்கு கலந்துரையாடலிலேயே திருப்தியடைகிறது. சாப்பிடும் போதும், இரவு படுக்கையறையிலும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் அதிகம்.* போகப் போக பேச்சு குறைகிறது. ஆறாவது ஆண்டு முதல், தேவைப்படும்போது பேசுவது என்றாகிறது. எட்டாவது ஆண்டிலிருந்து கணவன் - மனைவி பேசிக்கொள்வது மேலும் குறைந்து விடுகிறது. பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் பேச்சு தொடரும். * ஆரம்பத்திலிருந்த மோகம் கணவனுக்குக் குறைந்து விடுவதால், மனைவிக்கு அன்பளிப்பை படிப்படியாகக் குறைத்து விடுகிறான். பிறகு, தனியாகப் பணம் சேர்த்து, குஷியாகப் பொழுது போக்கத் தொடங்குகிறான்.* திருமணமான பின், மூன்றிலிருந்து எட்டாம் ஆண்டுக்குள்ளே தான், பெரும்பாலான விவாகரத்துக் கோரிக்கைகள் வருகின்றன.உங்கள் தாம்பத்தியம் எப்படி? ஜெர்மன் பேராசிரியரின் கணிப்பு சரிதானா; ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்! ***சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கர் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவரது சிதார் இசை கச்சேரிக்கு நேரில் சென்று இருக்காவிட்டாலும், அட்லீஸ்ட், 'டிவி' நிகழ்ச்சியிலாவது கண்டுகளித்திருப்பீர்கள். அவரது சுயசரிதை நூலை சமீபத்தில் படித்தேன். அதில், விமர்சகர் ஒருவர் பற்றி ரவிசங்கர் இப்படி குறிப்பிடுகிறார்:டில்லியிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையின் சங்கீத விமர்சகர், எல்லாக் கலைஞர்களிடமும் குறை காண்பார். கச்சேரியின் போது சரியாக எந்த நேரத்தில் பாடகர் பிசகு செய்கிறார் என்று குறிப்பிட்டு எழுதுவது அவரது வழக்கம். ஒரு முறை அலி அக்பர்கான் சரோட்டுடன், நான் சிதார் இசைத்துக் கொண்டிருந்தேன். ஓரிடத்தில் தவறு செய்து விட்டேன். அடுத்த நாள் வழக்கம்போல் அந்த விமர்சகர், 'இரவு 10:45க்கு ரவிசங்கரின் விரல்கள் பிசகின...' என்று எழுதியிருந்தார். மறுபடியும் அலியும், நானும் இணைந்து கச்சேரி செய்தோம். இம்முறை அலி அக்பரின் விரல்கள் பிசகு செய்தன. உடனே வாசிப்பை நிறுத்தி, சிதாரைக் கீழே வைத்தேன். ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தேன்... 'நேரம் சரியாக 11:00 மணி, 20 நிமிடம், 20 விநாடி ஆகிறது. அலி அக்பர் இப்பொழுது மூன்று இடங்களில் பிசகியிருக்கிறார். குறிப்பிட்ட விமர்சகர் இதை குறித்துக் கொள்ளட்டும்...' என்றேன். சபையில் பலத்த சிரிப்பொலி. விமர்சகர் வெளிநடப்பு செய்து கொண்டிருந்தார்.ரவிசங்கர் இசை மேதை மட்டுமல்ல; சரியான கிண்டல் பேர்வழி கூட என்பது புரிந்தது.***'பத்திரிகைகளை நாளேடு, வார ஏடு என்று சொல்கின்றனரே, 'ஏடு' என்பது ஓலைச் சுவடியை குறிக்கும் சொல். அதன்பின், அச்சிடப்பட்ட இதழ்களையும் ஏடு என்று சொல்வது வழக்கமாகி விட்டது. ஆனால், புத்தகத்தை நூல் என்று சொல்கி@றாமே தவிர, ஏடு என்று ஏன் குறிப்பதில்லை?' என்று நடுத்தெரு நாராயணன் சாரிடம் கேட்டேன்.'ஏடு என்பது புத்தகத்தையும் குறிக்கும் சொல்தான். 'ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது...' என்று சொல்வதில்லையா?' என்றார் நடுத்தெரு நாராயணன்.'ஏட்டுச் சுரைக்காய் உதவாது என்றால், கான்ஸ்டபிள் சுரைக்காய் மட்டும் உதவுமோ?' என்று கிண்டலடித்தேன்.'ஏடு என்று சொன்னதும் எனக்கொரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது. ஐம்பது வருஷத்துக்கு முன், என் நண்பரொருவர் ஏட்டுச் சுவடிகள் ஆராய்ச்சி செய்கிற ஏதோ ஒரு இலாகாவில் வேலை பார்த்து வந்தார்.'அவருடைய ஆபீசுக்கு ஒரு நாள், ஒரு கடிதம் வந்ததாம். யாரோ கிராமத்து ஆள் ஒருத்தன் எழுதியிருந்தானாம்...''எதைப் பற்றி?''தன்னிடம் கந்தபுராண ஏட்டுச் சுவடிகள் முழுமையாக இருப்பதாகவும், அது அங்கிருந்து வீணாவதற்குப் பதில், உங்கள் ஆராய்ச்சி நிலையத்துக்கு தேவையானால் நூறு ரூபாய் விலைக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுதியிருந்தானாம்...''அட பரவாயில்லையே...''அந்த சமயத்தில், ஏட்டுச் சுவடி ஆராய்ச்சி இலாகாவில், இந்தக் கந்த புராண ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. பல ஏட்டுப் பிரதிகளை ஒப்பு நோக்கி மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர்... அசல் எது, இடைச் செருகல் எது என்று தெரியாமல் இருந்தது.'இப்படி ஒரு கடிதம் வந்ததும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தனராம். கட்டாயம் இது தான் நம் குழப்பத்தைத் தீர்க்கப் போகிறது என்று நினைத்து, குறிப்பிட்ட ஏட்டுச் சுவடியை விலைக்கு வாங்க முடிவு செய்து விட்டனர்.'பிரமாண்டமான பார்சலும் வந்து விட்டது. பணத்தை கொடுத்து வாங்கியும் விட்டனர்...''சரி தான்... அந்தக் கட்டில் ஒன்றுமே இல்லையாக்கும்?' என்றேன்.'அப்படியெல்லாமில்லை. வந்தது கந்த புராணச் சுவடிகளேதான். ஆனால், அத்தனை பாட்டுகளும் மிகச் சாதாரணமாகவும், கொச்சையாகவும் இருந்தனவாம். இந்தப் புதுக் குழப்பம் வேண்டாம் என்று அந்தச் சுவடிகளை ஒரு பக்கம் வைத்து விட்டனராம்.'இரண்டு மாதம் கழித்து, அதே கிராமத்திலிருந்து ஒருவர் அந்த கடிதம் எழுதியிருந்தாராம்.'கடிதத்தில், 'உங்களுக்கு இங்கிருந்து வந்த கந்த புராணச் சுவடிகளை உடனே, திருப்பி அனுப்பவும். எவ்வளவு பணம் நீங்கள் கேட்டாலும் சரி. அந்தக் கந்த புராணம் எங்கள் கிராமத்து கோவில் சொத்து. எங்கள் பாட்டன் இயற்றிய அருமையான (!) பாடல்கள் அவை. நான் தான் கோவில் நிர்வாகி. என் தம்பி திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன். வருடா வருடம் ஒரு திருநாளில் அந்தக் கந்த புராணத்தை பூஜையில் வைத்து எடுத்து வாசிப்போம். என் தம்பி, இதை எதிர்த்து வந்தான். எங்களுக்குத் தெரியாமல் அந்த சுவடிகளை அனுப்பி விட்டான். தயவு செய்து உடனே, திருப்பி அனுப்புங்கள். இங்கே ஊரில் ஒரே பரபரப்பாக இருக்கிறது...' என்று கடிதத்தில் கண்டிருந்தது...' என்றார் நடுத்தெரு நாராயணன்.'பரவாயில்லை, நூறு ரூபாய் திரும்பக் கிடைத்திருக்கும்!' என்றேன் நான்.***வெயில் கொடுமையைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன்.'சூரியனை ரொம்ப தாக்காதே. அப்புறம் அது தன், 12 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் உஷ்ணத்தோடு ஒரு பெருமூச்சு விட்டதோ, நீ சாம்பலாகி விடுவாய்!' என்றார் லென்ஸ் மாமா.'பூமியை விட பத்து லட்சம் மடங்கு பெரிதாக இருந்தாலும், மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட்டால் சூரியன் ரொம்ப அற்பமான நட்சத்திரம். பெட்டல் கியூஸ் என்ற நட்சத்திரம் சூரியனைப் போல், 10 லட்சம் மடங்கு பெரிது...' என்றார் மாமா.'இந்த சின்ன சூரியனுக்கே நம்மால் பதில் சொல்ல முடியவில்லை. இன்னும் பெரிதாக ஒன்று வந்து நின்றால், அவ்வளவு தான்...' என்றேன்.'அந்த பயம் வேண்டியதில்லை...' என்றார் மாமா. 'சூரியனை விட்டால் அடுத்த ஸ்டார் — ஸ்டாப் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமோ? இப்போதுள்ள சூரிய தூரத்தைப் போல 2 லட்சத்து, 65 ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது...'நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.***'மதுரையில், மங்கம்மா சத்திரம் என்ற பிரபலமான கட்டடம் உண்டு. நானும் பார்த்திருக்கிறேன். ஆனால், யார் இந்த மங்கம்மா என்று தெரியவில்லையே?' என்று தன் சந்தேகத்தை என்னிடம் கேட்டார் அன்வர்பாய்.'தமிழ்நாட்டில், மதுரையை தலைநகராகக் கொண்டு அரசாண்ட புகழ்பெற்ற அரசி மங்கம்மாள். இவர் மதுரை நாயக்க மன்னரான சொக்கநாத நாயக்கருடைய மனைவி. 'ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின், நோய் வாய்ப்பட்டு, 1689ல் இறந்து போனார், இவருடைய மகன் நான்காம் முத்துவீரப்பர். பின்னர், தம் பேரனாகிய இரண்டாம் சொக்கநாதருக்கு காப்பாளராக இருந்து நிர்வாகத்தை நடத்தினார் மங்கம்மாள்.'மங்கம்மாள் திறமை வாய்ந்தவர்; வள்ளல். இவருடைய முன்னோரான திருமலை நாயக்கருடைய ஆட்சி போன்று, இவருடைய ஆட்சியும் சிறப்புற்றிருந்தது. 1693ல் அவுரங்கசீப்பின் படைத் தலைவர் சுல்பிகர்கான் படையெடுப்பைத் தவிர்க்க எண்ணி, முகலாயருக்குக் கப்பம் கட்ட இசைந்தார் மங்கம்மாள்.'மங்கம்மாள், தாம் ஆட்சி செய்த, 17 ஆண்டு காலத்தில் சாலைகள், சத்திரங்கள், குளங்கள், தங்கும் விடுதிகள் முதலியவற்றை அமைத்தார்; கோவில் திருப்பணிகள் செய்தார். 1706ல் சொக்கநாதர் பட்டத்துக்குரிய வயது அடைந்ததும் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அதே ஆண்டில் இவர் காலமானார்!' என்றேன்.எப்போதோ படித்த சரித்திரம், அன்வர் பாயின் சந்தேகத்தை போக்க உதவியது! ***