அந்துமணி பா.கே.ப.,
ஒரு கொட்டாவி விட்டு, கைகளைத் தூக்கி, நெட்டி முறித்துக் கொண்டார் லென்ஸ் மாமா. 'இரண்டு நாளா எக்சசைஸ், செய்யாமலும் வாக்கிங் போகாமலும், உடம்பு ஒரு மாதிரியாக இருக்கு...' என்றார். 'பயனுள்ள உடற்பயிற்சிகள்'என்று, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம், உ.ஆ., உதவியோடு படித்தேன்...' என்றேன். 'அதுக்குத் தான் தமிழிலேயே ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கிறதே!' 'இது ரொம்ப வித்தியாசமாக இருந்தது; உதாரணத்திற்கு கொஞ்சம் சொல்கிறேன். கேளுங்க...' எனச் சொல்ல ஆரம்பித்தேன்...மல்லாந்து படுத்து, நிமிடத்துக்கு, 100 தரம், மூச்சை நன்றாக உள்ளுக்கிழுத்து, தாராளமாக பெரிய ஓசையுடன் மூச்சை வெளியேற்ற வேண்டுமாம்... தினமும், 500 தடவை இப்படி செய்தால், மூக்குத் தசைகள் விரிவடைந்து, கண்கள் சிவந்து, தொண்டை உப்புமாம்... நீங்கள் மிரட்டாமலே, குழந்தைகள் உங்களைப் பார்த்து, பயப்படுமாம். இடுப்பளவு உயரமுள்ள மேஜையின் முன், நின்று கொள்ள வேண்டுமாம். அந்த மேஜைக்கு டிராயர் இருக்க வேண்டும். 'ஒன்று' என்று சொல்லி, டிராயரை இழுத்து, 'இரண்டு' என்று சொல்லி, மறுபடி உள்ளே தள்ள வேண்டுமாம். 'மூன்று' என்று, மீண்டும் வெளியே இழுத்து, 'நாலு' என்று, மறுபடி உள்ளே தள்ள வேண்டுமாம். இப்படி, 700 தரம் செய்த பின், உங்கள் மேஜை டிராயரை, முன்போல் இழுக்கவும், தள்ளவும் கஷ்டமில்லாமல், வழுக்கென்று போகுமாம்; வருமாம். வாளி இருந்தால், அதன் கைப் பிடியை தராசுக் கோல் போல் நடுவே உயர்த்திப் பிடித்துக் கொள்ள வேண்டுமாம். முதலில், நடுவிலிருந்து இடது புறத்துக்குப் பிடியைச் சாய்த்தும், பின், நடுவே, அங்கிருந்து வலது புறத்துக்குச் சாய்க்க வேண்டுமாம். பிறகு, மீண்டும் நடு; இடதுபுறம்; பின் நடு; வலதுபுறம்! இப்படி காலை, 7:00 மணி முதல் 10:00 மணி வரை செய்தால், 10 அடித்து ஐந்து நிமிடம் ஆகும்போது, கைப்பிடி, கையோடு வந்து விடுமாம். அதை தூர எறிந்துவிட்டு, வாளியை, அழகிய சிறு அண்டாவாக வைத்துக் கொள்ளலாமாம்! நல்ல வலுவான, இரும்பு டிரங்க் பெட்டி இதற்கு வேண்டுமாம். மூடி, கை மீது விழாதபடி நன்கு திறந்து வைத்துக் கொள்ள வேண்டுமாம். மனைவியை ஒரு புடவை கொண்டு வரச் சொல்லி, பெட்டிக்குள் வைத்து மூடி, மறுபடி திறந்து, இன்னொரு புடவை கொண்டு வரச் சொல்ல வேண்டுமாம். அதை வைத்து மூடி, திறக்க வேண்டுமாம். இப்படியே, இனி பெட்டி கொள்ளாது என்ற வரையில் செய்ய வேண்டுமாம். பின்னர் மனைவியைக் கூப்பிட்டு, வாயை அகலத் திறந்து (மனைவியின் வாயை அல்ல; உங்கள் வாயை) ஓங்கிய குரலில், 'இத்தனை புடவை இருக்கும் போது இன்னொன்று எதற்காகக் கேட்டாய்?' என்று அதட்ட வேண்டுமாம். இந்த பயிற்சிக்கு 'மனைவியை மடக்கும் பயிற்சி' என்று பெயராம்... அப்புறம், ஐந்தாவதாக... 'போதும்; நிறுத்து!' என்று துண்டை உதறி, தோளில் போட்டு நடக்கலானார் லென்ஸ் மாமா. பெல்ஜியம் - ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு குட்டி நாடு; வைரம் பட்டை தீட்டுவதிலும், கண்ணாடித் தொழிலிலும் உலகப் புகழ் பெற்ற நாடு. பெல்ஜியம் என்றதும், 'சட்' என, என் நினைவில் வருவது, அந்த நாட்டில், கண் எதிரே நடந்த, ஒரு கார் விபத்து தான். முன்பு ஒரு முறை, நானும், லென்ஸ் மாமாவும் பிரான்சில் இருந்து, ஜெர்மன் நாட்டிற்கு, காரில் சென்ற போது, பெல்ஜியம் நாட்டைக் கடந்து சென்றோம். மலை மீது செல்லும் ரோடு அது. இரண்டு கார்கள் செல்லவும், இரண்டு கார்கள் எதிரே வரவும் வசதி உள்ள மலைச்சாலை அது. நம்மூரில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மலைகளின் ரோடுகளை ஒப்பிட்டால், நான் கூறும் பெல்ஜியம் ரோடின் பிரமாண்டம் உங்களுக்குப் புரியும்! அங்கு, எதிரே, அந்த விபத்து நடந்த மூன்றாவது நிமிடம்... எங்கிருந்து தான் ஆம்புலன்ஸ் வந்ததோ, போலீஸ் வந்ததோ, தெரியவில்லை... அவ்வளவு தொலைத் தொடர்பு வசதிகள்... உயிர் மீது, அவர்கள் கொண்டுள்ள மதிப்பு, அன்று புரிந்தது. ஓ.கே., கம்மிங் பேக் டு த பாயின்ட்... சில ஆண்டுகளுக்கு முன், பெல்ஜியம் நாட்டு மக்கள் ஒரே இரவில், சைவ சாப்பாட்டிற்கு மாறி விட்டனராம்... இப்படி, ஒரு செய்தியை வெளிநாட்டு இதழ் வெளியிட்டிருந்தது. அங்கு, மாமிசம் மற்றும் பால், பால் பொருட் களில், 'டையாக்சின்' என்ற நச்சுப் பொருள் கலந்து விட்டது. இதை அறிந்த மக்கள், ஒரே நாளில் சுத்த சைவமாக மாறி விட்டனர்.குளோரின் தயாரிக்கும் போது கிடைக்கும் உபபொருள் டையாக்சின். இது, நச்சுத்தன்மை கொண்டது; கேன்சர் நோயை உண்டாக்கும் ஆற்றல் பெற்றது. அந்நாட்டின் மாடு, ஆடு மற்றும் கோழித் தீவனங்களில் இந்த நச்சு பரவி உள்ளதை கண்டுபிடித்த ஒரு தனியார், 'டிவி' நிறுவனம், தன் மாலை நேர செய்தி ஒளிபரப்பில், இந்த உண்மையைப் போட்டு உடைத்தது. இந்தக் கால்நடைகள் தரும் பால், இறைச்சி மற்றும் முட்டைகளில், இந்த நச்சுத்தன்மை ஊடுருவி, அது மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும். உண்மையை அறிந்த அரசு, எல்லா சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளில் இருந்து, இவற்றை அகற்றி, எரித்து விட உத்தரவிட்டது; நச்சுத்தன்மை கொண்ட கால்நடைகளையும் அழிக்க உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளும், லட்சக்கணக்கான கோழிகளும் அழிக்கப்பட்டு விட்டன. பெல்ஜியம் மக்கள், இப்போது, வெறும் காய்கறிகளையே உண்ணுகின்றனர் என்று அப்பத்திரிகை எழுதியுள்ளது. இந்த விஷயம் பற்றி, குப்பண்ணாவிடம் கூறினேன். அவர் அடித்த, 'ஸ்டேட்மென்ட்' இது: நம்ம நாட்டு உணவுப் பொருட்களில் இல்லாத கலப்படமா? நாம எல்லாம் செத்தா போயிட்டோம்? பெல்ஜியம்காரா ஏன் இப்படி பயப்படறா, என்றார்.அவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மரியாதை நிமித்தம் அவரை சந்திக்கச் சென்று இருந்தேன். பேச்சோடு பேச்சாக, பிரிவுபசார விழாவில், தம் மாணவர்களுக்கு, அவர் கூறும் அறிவுரை பற்றிக் கூறினார்: தந்தை சொற்படி நடவாதே -- தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே --உட்கார்ந்து சாப்பிடாதே --படுத்துத் தூங்காதே --என்பாராம்! 'என்ன சார்... இப்படியெல்லாம் அறிவுரை வழங்கினால், பையன்களின் எதிர்காலம் என்னத்துக்கு ஆகும்?' எனக் கேட்டேன். 'அவசரப்படாதே தம்பி... விளக்கம் சொல்கிறேன்...' என்றவர், ஒவ்வொரு, 'பாயின்ட்'டையும் விளக்கினார். 'நீங்கள் தவறான வழிகளில் சென்றால், தந்தை மனமுடைந்து, கடுஞ்சொல் கூறுவார்... 'அப்பா சொல்லும்படியாக ஏனப்பா நடந்து கொள்கிறாய்?' எனத் தாய் கேட்பாள். இதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். 'தாயின் செலவுக்கு பணம் தராதே' என்பது, நீங்கள் சம்பாதிக்கும் நிலை வரும்போது, தாயின் செலவுக்கென்று தனியே பணம் தராமல், சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் தாயிடம் கொடுத்து விடுங்கள். உங்கள் நலம் ஓங்க, தாய், உங்களைப் பாதுகாப்பாள். 'உட்கார்ந்து சாப்பிடாதே' என்றால், சோம்பேறியாக, மற்றவர் கையை எதிர்பார்த்து வாழாதே... உழைத்து உண், ஓங்கி வாழ்வாய்... 'படுத்து தூங்காதே' என்றால், உழைக்காதவர்கள், படுக்கையில் படுத்து, தூக்கம் வராமல் வேதனைப்படுவர்; உழைப்பவர்களுக்கு, படுக்கைக்குச் செல்லும் முன்பே, கண் மயக்கம் வந்து விடும். அப்படி வாழுங்கள்... இதுதான், அவற்றின் பொருள்...' என்று விளக்கினார்.