உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அவர் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி. அந்துமணியின் அதி தீவிர வாசகர்; லென்ஸ் மாமாவின், 'க்ளாஸ் மேட்!' அதாவது, பூ படம் வரைந்த கோப்பையை, மாலை நேரங்களில் ஏந்துவதில் தோழர்கள். அதிகாரியை விட, அவரது மனைவி, அந்துமணியின் பக்கங்களை படிப்பதில், அதிக ஆர்வம் கொண்டவர்; நல்ல நகைச்சுவை உணர்ச்சி உடையவர்.சரக்கு சாப்பிட்டால், தன் மனைவியை செல்லமாக வம்புக்கிழுத்து, அவரது தகப்பனாரை கிண்டல் செய்வார் அதிகாரி. அந்த வகையான கிண்டல்களின் சாம்பிள் ஒன்று...'ஏட்டி... உங்க வாப்பா, உங்க உம்மாவுக்கு ராமாயணம் சொன்னா எப்படி சொல்லுவார்ன்னு தெரியுமா... 'தயரதன்... தயரதன்னு ஒரு சுல்தான் இருந்தாரு... அயோத்தி நாட்டு சுல்தான் அவரு... அவருக்கு மூணு பீவிங்க... கோசலை, கைகேயி, சுமித்திரை. இவிங்களுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்குனன்னு நாலு பேட்டா...' இப்படி சொல்வாரு ராமாயணத்தை...' என்று கிண்டலடிப்பார்.கடந்த வாரத்தில், ஒரு நாள், போன் செய்த அந்த அதிகாரி... 'என்னப்பா மணி... ரிடையர் ஆகிட்டேங்கிறதால, முன்ன மாதிரி, அடிக்கடி போன் செய்ய மாட்டேங்குற... எங்களையெல்லாம் மறந்துட்டியா? நாளைக்கு என் வீட்ல உனக்கும், லென்ஸ் மாமாவுக்கும் டின்னர். உனக்கு ஆப்பமும், வெஜிடபிள் ஸ்டூவும், மாமாவுக்கு பாயாவும் வைக்க சொல்லிடுறேன் வந்துடுங்க...' என்றார்.'சார்... தப்பா நினைக்கலைன்னா, அண்ணிக்கிட்ட சொல்லி, 'ரைஸ் ஹாப்பர்ஸ்' செய்ய சொல்லி, அதற்கு இடி சம்மந்தியும் வைக்க சொல்லுங்கள். வந்து ஒரு பிடிபிடிக்கிறேன்...' என்றேன். மறுநாள், மாலை ஏழு மணியளவில், அவரது பங்களாவை அடைந்தோம். போலீஸ் அதிகாரி என்பதால், 'கிம்பளம்' பெற்று, மாளிகை கட்டி விட்டாரோ என, எண்ணி விடாதீர்கள். ஐ.பி.எஸ்., படித்தவர் என்பதால், பெண்ணையும் கொடுத்து, பங்களாவையும் கட்டிக் கொடுத்தவர் அவரது மாமனார்.தோட்டத்து புல்வெளியில், மிகப்பெரிய வெள்ளி கோப்பையில் ஐஸ் துண்டுகள் உடைத்துப் போடப்பட்டு, அதனுள், 'ஷாம்பெயின்' பாட்டில்கள் இரண்டு குந்திக் கொண்டிருந்தன. இரண்டு, மூன்று ஏவலர்கள் தத்தமது கைகளில், 'சைடு' வைத்தபடி நின்று கொண்டிருந்தனர். (சைடு நொறுக்குத் தீனிகள்!)'மணி... நீ உள்ள வாப்பா... பெருசுங்க ரெண்டும் இப்போதைக்கு, 'கச்சேரி'யை முடிக்காது. நான் இதுகள பத்தி, பெரிய ஆராய்ச்சியே செஞ்சுக்கிட்டிருக்கேன். குடிகாரர்கள் குடித்த பிறகு, அவர்களின் மனைவியரிடம், செய்யும் கூத்து, தமாஷ், அடிதடி, பேச்சுக்கள் எப்படியெப்படி இருக்கும் என்பதை, பேட்டி எடுப்பது போல், கேட்டு தெரிந்து வைத்துள்ளேன். அவற்றையெல்லாம் தொகுத்து, ஒரு புத்தகமாக போடலாம் என்ற எண்ணம் உள்ளது. இப்போதைக்கு, ஒரு சமாச்சாரம் மட்டும் சொல்கிறேன் கேள்... என் தோழியின் கணவர், ஒருநாள், முழு மப்பு ஏற்றி, பெட்ரூமிற்கு வந்து படுத்தவர், 'ஏண்டி, 'டீவி'யை அடமானம் வச்சுப்புட்டியா?' எனக் கேட்டு, கலாட்டா செய்திருக்கிறார். 'திரும்பி படுங்க...' என, ஒரே வார்த்தையில், எரிச்சலாக பதில் கூறியிருக்கிறாள் தோழி. குடி மயக்கத்தில், எதிர் திசையில், 'பார்ட்டி' படுத்ததே, இந்த கேள்விக்கு காரணம்...' என முடித்தார் அந்த அதிகாரியின் மனைவி. 'குபீர்' எனச் சிரித்தேன்.குப்பண்ணா சொன்னது இது:குடும்பக் கோர்ட்டில் ஒரு வழக்கு.ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர், சற்று வயதானவர். அவருக்கும், அவர் மனைவிக்கும், தகராறு. மனைவியை விவாகரத்து செய்வதற்காக, வழக்கு தொடர்ந்திருக்கிறார். விவாகரத்து செய்தால், அந்த வயதான அம்மணிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமே... கிழவியின் மீது இருந்த கோபத்தில், அவளுக்கு, ஜீவனாம்சம் கொடுக்கக் கூடாது என்ற திட்டத்தோடு, அவர், தன் இலாக்காவில், பல்வேறு லோன் போட்டு, கடன் வாங்கி, எங்கோ செட்டில் பண்ணி விட்டார். இப்போது, கடன் பிடித்தம் போக, அவர் கையில் வாங்கும் சம்பளம், 500 ரூபாய் தானாம்.எனவே, இந்தப் பணம், தன் வாழ்க்கைச் செலவுகளுக்கே போதாது என்றும், அதனால், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர இயலாது என்றும்,கோர்ட்டில் சொன்னார்.'ஜீவனாம்சம் தர மறுத்தால், உங்களை சிறை வைக்க நேரிடும்...' என்றார் நீதிபதி. பின், வாதியின் மனைவியை நோக்கி, 'உன்     கணவர் ஜீவனாம்சம் தர மறுக்கிறார் அவரை ஜெயிலில் தள்ளட்டுமா?' என்று கேட்டார்.அதற்கு கிழவி கோபத்துடன், 'எனக்கு காசு கொடுக்கலைன்னா, நான் எப்படி சாப் பிடறது? அந்த ஆளை ஜெயில்லே போடுங்க...' என்றாள்.'அவரை ஜெயிலில் போட்டால், அவர் சாப்பாட்டு செலவுக்கு நீ படிப்பணம் தர வேண்டும். தருவாயா?' என்று, கிழவியிடம் கேட்டார் நீதிபதி.'என்ன, நான் பணம் தரணுமா?' என்று, அதிர்ச்சியுடன் கேட்டாள் கிழவி.'ஆமாம்... இது கடன் கேசு. கடனாளியை ஜெயிலில் போட்டால், கடன் கொடுத்தவர் தான், கைதியின் சாப்பாட்டுக்கு பணம் தரணும்; அதுதான் சட்டம்...' என்றார் நீதிபதி.கோபத்துடன் நீதிபதியைப் பார்த்து, 'அட, மூள கெட்டவனே... நான் சாப்பிட வழி இல்லாம, அந்த ஆளு கிட்ட பணம் வாங்கிக் குடுடான்னா, அவனுக்கு சாப்பாடு போட என்கிட்ட பணம் கேட்கிறியே... புத்தி கீதா ஒனக்கு...' என்றாள் கிழவி ஆவேசமாக!நீதிபதி அதிர்ந்து போனார்; நானும் தான் என்றார் குப்பண்ணா.'நானும் தான். சேதி புதுசா இருக்கே...' என்றேன்.'அண்ணாச்சி... கையில் காசில்லாமல், பன்னெண்டு வயசுல மெட்ராஸ் வந்தேன்னு சொல்வீங்களே... இன்னைக்கு காரு, பங்களா, பத்து பதினைஞ்சு லாரி, பேக்டரி என இருக்கீங்க... இதுக்கு அடிப்படையா சேமிப்பும் இருந்திருக்கணும். ஆனால், எவ்ளோ சம்பாதிச்சாலும், துட்ட சேக்க முடியலியேன்னு பலர் புலம்புறாங்களே...' என்றேன் அண்ணாச்சியிடம்.'அட, போப்பா... அதுக்கு நாலஞ்சு, 'டிப்ரன்ஸ்' தர்றேன்... கேட்டுக்க...''டிப்ரன்ஸ்' என்பதை, 'டிப்ஸ்' என, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல வேளை, அன்று லென்ஸ் மாமா உடன் இல்லை. இருந்திருந்தால், அண்ணாச்சியை உண்டு, இல்லை எனச் செய்திருப்பார்.அண்ணாச்சி கொடுத்த டிப்ஸ் இதோ:கடன் வாங்கு; ஆனால், யாருக்கும் கடன் கொடுக்காதே!சொந்தக் காசில் சிகரட் பிடிக்காதே... உன் வீட்டுக்கு அருகில் உள்ள கடை வாசலில், நின்று கொண்டிரு... உனக்குத் தெரிந்தவர் யாராவது சிகரட் வாங்க அங்கே வருவர்; உனக்கும் ஒரு சிகரட் கிடைக்கும்!எந்த பொருளையும், தேவையான அளவை விட, குறைவாகவே உபயோகி. உதாரணமாக, ஒரு கப் காபிக்கு, ஒரு கரண்டி காபி பொடி உபயோகிக்க வேண்டும் என, காபி பொடி டப்பாவில் குறிப்பு இருந்தால், முக்கால் கரண்டி மட்டுமே உபயோகி, காபி கொஞ்சம் வட்டாக இருந்தாலும், பொடி மிச்சம் அல்லவா!நாய், பூனை, கிளி போன்றவற்றை வளர்க்காதே... தெண்டச் செலவு. இப்படி, இன்னும் ஐந்தாறு குறிப்புகளை கொடுத்தார். நீங்கள் யாராவது பின்பற்றி பார்த்து, பலனைச் சொல்லுங்களேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !