உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அது ஒரு விடுமுறை தினம். எனக்கும், லென்ஸ் மாமாவிற்கும் அலுவலகத்தில் வேலை இருந்தது. மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த போது, மாலை, 4:30 மணி அளவில், எனக்கு ஒரு போன் கால்!'மணி... நான்தான் பேசறேன். சும்மா ஒரு அஞ்சு நிமிஷம், நேரில் பார்த்துப் பேசணும்... வரட்டுமா? இங்கே, உங்க ஆபீஸ் பக்கத்தில் இருந்து தான் பேசறேன். ஐந்தே நிமிட டிரைவ்... இதோ, இப்பவே வந்துடுறேன்...' எனச் சொல்லி, என்னை பதில் பேச விடாமல், எதிர் முனையில், போனை, 'டொக்' என, வைப்பது கேட்டது.வேலையில் ஈடுபட்டபடியே, நான், 'ஆங்... ஊங்...' என, கூறிக் கொண்டிருந்ததைக் கேட்ட லென்ஸ் மாமா, 'என்ன... மணி நெளியறே... என்ன விஷயம்?' என்றார் நமுட்டுச் சிரிப்புடன்!போனில் பேசிய வாசகியை, லென்ஸ் மாமாவிற்கும் தெரியும். அவர், என் வாசகி என்பதைவிட, லென்ஸ் மாமாவின் குறும்புகளுக்கு விசிறி; அவரது புகைப்படங்களின் பரம ரசிகை. சென்னையில் உள்ள கல்லூரியில், பட்ட மேற்படிப்பு படிக்கும் துடிப்பான இளம்பெண்.'எல்லாம் உங்க விசிறி தான் மாமா... இப்போ இங்கே வர்றாங்களாம்...' என்றேன்.'என்னை விசாரிச்சாளா... நான் ஆபிசில் இருக்கிறேனா எனக் கேட்டாளா?' என்றார்.வேலையின் மும்முரத்தில் இருந்த நான், வேண்டுமென்றே, 'கேட்கவே இல்லே...' என்று கடுப்படித்தேன்.'அதெப்படி... வரட்டும் பேசிக்கறேன்!' என்றபடியே, தன் வேலையைத் தொடர்ந்தார். ஆனால், அவ்வப்போது, ஏதோ, 'முணுமுணு'ப்பது மட்டும் என் காதில் விழுந்தது.சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தார் வாசகி. தொள தொளவென ஒரு சட்டை, நடிகர் செந்தில் அணிவது போன்ற அரை டிரவுசரில், 'டக் - இன்' செய்தும் 'போனி டெயில்' போட்டு, காலில் ரப்பர் செருப்பு அணிந்து இருந்தார். முகத்தில், 'மேக் - அப்' ஏதும் இல்லை. கண்கள் அழுதது போல, கண் மை இன்றி காட்சி அளித்தன.'சரி... ஏதோ பிரச்னையில பொண்ணு அழுது இருக்கு... அத நம்ம கிட்ட கொட்டித் தீர்க்கத் தான், விடுமுறை தினம் என்று கூட பார்க்காம ஓடி வந்துள்ளார்...' என, நினைத்தபடியே, 'வாங்க... உட்காருங்க...' என்றேன்.'என்ன மணி சார்... உற்சாகமில்லாமல் இருக்கீங்க...' எனக் கேட்டபடியே அமரவும், எங்கோ சென்று இருந்த மாமாவும் உள்ளே வந்தார்.'வாங்க, அங்கிள்... எப்படி இருக்கீங்க...' என வினவினார்.மாமா பொய் கோபம் கொண்டு, 'என்னைப் பத்தி மணிகிட்ட நீ கேட்கவே இல்லயாமே... இந்த அங்கிளை நீ மறந்துட்டே...' என்றார்.'நோ... நோ... ஐ என்கொயர்ட் அபவுட் யூ ஆல்சோ!' என்றார்.என்னை, எரித்து விடுவது போல பார்த்தார் மாமா. நான் கண்டுகொள்ளாமல், 'என்னங்க... ஏதும் பிரச்னையா, அழுதீங்களா... கண் மை எல்லாம் கரைஞ்சு போன மாதிரி இருக்குதே...' என்றேன்.'கடகட'வென, சிரித்தார் வாசகி.'பட்டிக்காட்டு பையன்ப்பா நீ... அவ கேஷுவல் டிரஸ்சில், பர்முடாஸ் ஸ்டைல் அரை டவுசர் போட்டு, தொள தொள சட்டையும், ரப்பர் செருப்பும், போனி டெயிலும் போட்டு வந்திருக்கா... இந்த டிரஸ்சுக்கு மேக் - அப் போடக் கூடாதுப்பா...' என்றார் மாமா.'கரெக்ட் மாமா... இவர் சரியான அம்மாஞ்சி; இவர், உண்மையிலேயே அம்மாஞ்சி தானா என்பதை, உறுதி செய்து கொள்ளத்தான், ஒரு சோதனை செய்ய ஓடி வந்தேன்...' என்றபடியே, தன் பையில் இருந்து வெளிநாட்டு பெண்கள் பத்திரிகை ஒன்றை எடுத்தார்.'நேத்து நைட், இந்த பத்திரிகையை படிச்சேன். இதுல வெளியாகி இருக்கும், சுய சோதனை போன்ற கேள்வி பதில் பகுதியை படிச்சதும், மணி சார்கிட்ட இதக் கேட்டு தெரிஞ்சுக்கலேன்னா மண்ட வெடிச்சுடும் போலாகி விட்டது...' என்றபடியே, கேள்வியை கேட்க ஆரம்பித்தார்...'மணி... நான் கேட்கப் போற கேள்விகளுக்கு, 'ட்ரூ' அல்லது 'பால்ஸ்'ன்னு மட்டும் பதில் சொன்னால் போதும். வேறு விளக்கம் ஏதும் சொல்ல வேணாம்; கேள்விகள் அனைத்தும், 'பாரின்' கேள்விகள். எனவே, நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாக நினைத்து, பதில் சொல்லணும்...' என்றார்.இது என்ன பெரிய வேலை... வாசகி கேட்கப் போகும் கேள்விகளுக்கு, சரி அல்லது தவறு என்று தானே கூற வேண்டும் என்ற தெம்பில், 'ஓ.கே.,' என்றேன்.குறும்புக்கார வாசகி, 12 கேள்விகளை கேட்டார். அவை:1.அழகான பெண்ணைக் கண்டால், மயக்கும் விழிகளுடன் அவளை நோக்குவீர்களா?2. மயக்கும் தோற்றம் கொண்ட பெண்ணுடன் பேசும் போது, உங்களது வழக்கமான அதிகாரக் குரலை விடுத்து, குழைந்து பேசுவீர்களா?3. மனதைக் கவர்ந்த இளம் பெண்ணின் அருகில் நீங்கள் இருந்தால், அவளுடைய மேனியில், எப்படியாவது உரசும் எண்ணம் ஏற்படுமா?4. குறைந்த வெளிச்சம் கொண்ட உணவு விடுதியில், மற்றவர் பார்வை அதிகம் பதியாத மூலையில் உள்ள டேபிள் தான், உங்களுக்கு பிடித்தமானதா?5. 'இந்தாளு ஜொள்ளு மன்னன் அல்ல...' என, இளம் பெண்களிடம் பெயர் எடுத்தவரா நீங்கள்?6. திருமணமான பின்பும், வசீகரமான இளம் பெண்களை, 'சைட்' அடிப்பது தவறு இல்லை என்ற எண்ணம் உடையவரா நீங்கள்?7. 'பீச்'சில் குளிக்கச் சென்றால், உங்கள் உடல் அழகு, மற்றவரை கவர வேண்டும் என்ற நோக்கில் உடை அணிந்து, அதற்கேற்ப நடந்து கொள்பவரா?8. உங்களைப் பாராட்டி, அதிசயிக்கும் கூட்டத்தினரின் நடுவே இருக்கும்போது மகிழ்ச்சி கொள்பவரா?9. வஞ்சனை இல்லாத, ஆனால், சரசமாடும் விதத்திலான உங்களது பேச்சுகளால், பின்னாளில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள் என உங்கள் நண்பர்கள் உங்களை எச்சரிப்பது உண்டா?10. இளம் பெண் ஒருவர் உதவி ஒன்றை உங்களுக்கு செய்தால், அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, மலர் கொத்து, - சாக்லெட், - 'தேங்க் யூ கார்ட்' அனுப்பும் போது, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வாசகத்தையும் அத்துடன் இணைத்து அனுப்புவீர்களா?11. உங்கள் காதலியுடன், நடன அரங்குக்குச் செல்கிறீர்கள். அங்கு நடனமாட வந்துள்ள மற்ற பெண்களுடன் நடனமாட விரும்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்களா?12. ஒரு பெண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரியவே தெரியாது. ஆனால், தனியாக அவள், ரெஸ்டாரன்டில் அமர்ந்து இருக்கிறாள். அவளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள, நீங்களாகவே முன் வந்து, அப்பெண்ணுக்கு, 'பீர்' வாங்கிக் கொடுப்பீர்களா?கேள்விகளை என் மீது தொடுத்தாலும், மாமாவும், தன் பதிலையும் சொல்லி வந்தார். இருவருக்குமே, மார்க் போட்டு வந்த வாசகி, என்னிடம், 'அம்மாஞ்சிதான் நீங்கள்... உங்களுக்கு கிடைத்துள்ள மார்க்குகளுக்கு விடை என்ன தெரியுமா?' என்றபடியே விடையை சொன்னார்...'நீங்கள், யதார்த்தத்தை புரிந்து கொண்டு நடக்கும், 'சீரியஸ்' ஆசாமி. நீங்கள் சரச சைகைகள் கொடுத்தால், அதை புரிந்து கொண்டு, இளம் பெண்கள் இணங்குவர் என்பது, உங்களுக்கு தெரிந்தாலும், அது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டீர்கள்!'மாமாவுக்கு கிடைத்துள்ள விடையைப் பாருங்கள்!' என்றபடியே படிக்க ஆரம்பித்தார்...'சரச சைகைகளை காட்டுவதில், கைதேர்ந்தவர் நீங்கள். உங்களது கவனம், தன் மீது படாதா என இளம் பெண்கள் ஏக்கம் கொள்வர், 'நீ ரொம்ப ஸ்பெஷல்' என்பது போல, இளம் பெண்களை உணர வைத்துவிடும் தன்மைகள் கொண்டது உங்கள் சைகைகள்!'மாமான்னா மாமா தான்... நம்ம அம்மாஞ்சியும் இருக்குதே...' என்றார் வாசகி.'அது சரி... எனக்கு எத்தனை மார்க்... மாமா எவ்வளவு வாங்கினார்?' என்றேன்.'நீங்க... 0 முதல் 4 வரை, 'சரி' என்ற லிஸ்டில் வருகிறீர்கள். மாமா, 5 முதல் 8 வரை, 'சரி' என்ற லிஸ்டில் வருகிறார்...' என்றார்.'அப்போ, 9 முதல் 12 வரை, 'சரி' என்ற லிஸ்டில் வருபவர்களுக்கு என்ன சொல்லி இருக்காங்க?' என்றேன்.'ரொம்ப மோசம்... 'அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் செய்யாமல், சரச சைகைகள் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்...' என போட்டு இருக்கின்றனர்...' என்றார்.வாசகியிடம், 'அம்மாஞ்சி' என பெயர் எடுத்தது பற்றி சந்தோஷமே எனக்கு! இந்தப் பெயரை நான் எடுத்தாலும், நம் வாசகர்கள், தாம் எப்படி என்பதை அறிந்து கொள்ள அருமையான, சுய சோதனை ஒன்றை அளித்தாரே என்ற திருப்தி என்னுள் எழுந்தது!அது சரி... அப்புறம் அந்த வாசகி என்ன சொன்னார் எனத்தானே கேட்கிறீர்கள்... லென்ஸ் மாமாவும், வாசகியும் அரட்டை அடிக்க, காபி குடிக்க வெளியே சென்றனர். 'ஐ கன்ட்டினியூட் மை ஜாப்!'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !