உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

'மனிதர்களுக்குள் பல கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்; அதற்காக அவர்களை விரோதிகளாக நாமே தீர்மானித்துக் கொள்ளக் கூடாது...' என்று ஒரு தத்துவ முத்தை அன்று சபையோர் முன் உதிர்த்தேன்.'என்ன டே மணி... தத்துவமெல்லாம் உதுக்கே...' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.'ஏதாவது புஸ்தகத்தை படிச்சுத் தொலைச்சு இருப்பான்... அத, இப்போ அவுத்து விடுறான்...' என்றார் லென்ஸ் மாமா.அவர் சொன்னது உண்மை தான்; சென்னை, லஸ் கார்னரில் ஒரு மாலை வேளையில், பிளாட்பாரக் கடையை, அலசிய போது, ஒரு நுால் கிடைத்தது. அதில், 'சில நினைவுகள்' என்று ஒரு கட்டுரை இருந்தது.பெரியவர்களின் அனுபவங்கள், நினைவுகள், சிந்தனைகள் என்றால், உடனே விழுந்தடித்து படிப்பது என் பழக்கம்.அடிபட்டு, மிதிபட்டு, கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வது, -அனுபவப்படுவது என்பது ரொம்ப, 'காஸ்ட்லி'யான சமாசாரம் அல்லவா...'சில நினைவுகள்' கட்டுரையை எழுதியவர், கே.சுப்ரமணியம்; இவர், பரத நாட்டியக் கலைஞர் பத்மாவின் தந்தை. தமிழில், முதன் முதலில், பேசும் சினிமாவை தயாரித்து, இயக்கியவர்.கட்டுரையில் சுப்ரமணியம் சொல்கிறார்:பவளக்கொடி படம் எடுக்கும்போது, தயாரிப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார், மீனாட்சி சுந்தரம் செட்டியார். சிரித்த முகம்; அன்பு கலந்த வார்த்தை மற்றும் அவருடையநற்குணங் களால்எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றவர்.ஒருநாள் மாலை, ஷூட்டிங் முடிந்த பின், ஸ்டுடியோ மாடி அறையில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தேன்.திடீரென்று கீழே இருந்து, 'ஐயோ...' என்று சத்தம் கேட்டது.ஈரத்துணியுடன், கீழே விரைந்து ஓடினேன். மீனாட்சி சுந்தரத்தை நல்ல பாம்பு கடித்து விட்டது. தர்வான்களும், துணை நடிகர்களுமாக அவரைத் துாக்கி வந்து, கட்டட வராந்தாவில் போட்டனர்.வாயில் நுரை வந்து விட்டது; சமயத்திற்கு கார் டிரைவரும் இல்லை. பழைய, 'ஸ்டுடிபேக்கர்' மாடல் கார் ஒன்று, மர வேலைகளுக்காக ஓடிக் கொண்டிருந்தது. செட்டியாரை அதில் ஏற்றி, அந்த ஓட்டைக் காரை நானே ஓட்டிச் சென்றேன்.கட்டியிருந்த ஈரத்துணி மீது பனியன் போடக் கூட நேரமில்லை; அவ்வளவு அவசரம். கார் சென்ற வேகத்தைக் கண்டு, ஊதலை ஊதி நிறுத்தப் பார்த்தார், போலீஸ்காரர்.என் ஆத்ம நண்பர், டாக்டர் சங்கரன்; அவரை கலைஞர்களின் டாக்டர் என்றே சொல்லலாம். அவர், சென்னை, ராயப்பேட்டை டிராம்ஷெட்டுக்கு அருகே குடியிருந்தார்.துரதிருஷ்டவசமாக டிராம் ஷெட்டுக்கு சில அடி துாரத்தில், நான் ஓட்டிச் சென்ற வண்டியின் முன் சக்கரம் கழன்று உருண்டு ஓடி விட்டது. எப்படித் தான் அந்த வேகத்தில், அந்த காரை நிறுத்தினேன் என்று இப்போது நினைத்தால் கூட ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாரும் கூண்டோடு கைலாசம் போயிருக்க வேண்டியவர்கள்; தப்பித்தோம். சட்டென்று எல்லாரும் காரில் இருந்து தாவிக் குதித்தோம்.பிரக்ஞை இழந்திருந்த மீனாட்சி சுந்தரத்தை துாக்கியபடி டாக்டர் வீட்டுக்கு ஓடினேன். அவசரமாகப் பரிசோதனை செய்த டாக்டர், கிண்டியில் உள்ள, 'கிங் இன்ஸ்ட்டியூட்'டில், 'சீரம் இன்ஜக் ஷன்' மருந்து வாங்கி வரச் சொன்னார்.பித்து பிடித்தவன் போல் தெருவுக்கு ஓடினேன்; கார் இல்லை. அக்காலத்தில் இப்போது போல கால் டாக்சி வசதி கிடையாது. நடு சாலையில் நின்று, கண்ணில் பட்ட காரை நிறுத்தினேன். அப்போது, சென்னையில்  வெள்ளையர்கள் அதிகம். டென்னிஸ் விளையாடி விட்டு, அடையார் பங்களாவிற்குப் போய் கொண்டிருந்தார், கார் ஓட்டிய அந்த ஆங்கில மாது.'அம்மணி... என் நண்பரைப் பாம்பு கடித்து விட்டது. ஒரு உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்; காரில் சென்று மருந்து வாங்க அனுமதியுங்கள்...' என்று சொல்லியவாறு, தைரியமாக காரில் ஏறி உட்கார்ந்தேன்.அந்த அம்மாள் பெயர் மிஸ்கோல் என, பின் அறிந்தேன். அவர் ஆதரவாக, 'நீங்கள் ரொம்ப பதற்றத்தில் இருக்கிறீர்கள்... துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ளுங்கள்...' என்றார்.அவர் அவ்வாறு சொன்னது மிகவும் நல்லது என்று பிறகு தெரிந்தது. தர்வானைக் காரில் ஏறிக் கொள்ளச் சொன்னேன். வேகமாக, 'கிங் இன்ஸ்டிடியூட்' போனோம். அந்த நிறுவன அதிகாரி, அவசர அவசரமாக இரண்டு டியூப் மருந்தைக் கொடுத்து, அதற்கான தொகையைக் கேட்டார்.முதலில் திகைத்தேன்; பின், அவரிடம் தன்மையாக, 'ஐயா... இந்த தர்வானைப் பணயமாக இங்கே வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு, இவனை அழைத்துச் செல்கிறேன்...' என்று கூறி, அவ்வம்மையாரின் காரிலேயே டாக்டர் வீட்டுக்குத் திரும்பினேன். கால் கட்டை விரல் கணுவில் சீரம் மருந்தை ஏற்றினார், டாக்டர். மூன்று மணி நேரத்திற்குப் பின், கண்ணைத் திறந்த செட்டியார், 'சுப்புணி...' என்று அன்பாக என்னை அழைத்தார்.அந்நிகழ்ச்சி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதவாறு அமைந்து விட்டது. சட்டக் கல்லுாரியில் இருந்து நான் வெளி வந்து சில மாதங்களே ஆகி இருந்தன. அக்காலத்து அரசியல் வேகம், என் மனதில் வெறி பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. 'வெள்ளையர்' என்று சொன்னாலே வெறுப்பு; ஆனால், அன்று, அந்த ஆங்கில மாது காட்டிய அன்பும், பண்பும் என்னுள் ஒரு புதிய மாறுதலை உண்டாக்கியது.'மனிதர்களுள் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்; அதற்காக, அவர்களை விரோதிகள் என்று நாமாகவே தீர்மானித்து, குரோதத்தையும், வெறுப்பையும் வளர விடக் கூடாது...' என்று தெரிந்து கொண்டேன்.தெரிந்த ஒருவருக்கு நன்மை செய்ய நான் பாடுபட்டேன்; தெரியாத ஒருவருக்கு அந்த அந்நிய மாது உதவினார். அன்பே அறம் என விளங்கியது.- இவ்வாறு எழுதி இருந்தார்.இந்தப் பெரியவரின் அனுபவத்தை நாம் படித்து அறிய, பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது! இதுவே, நமக்கு எத்தகைய வாழ்க்கை பாடத்தை, புத்திமதியைக் கொடுக்கிறது பாருங்கள்!கர்நாடகத்துக்காரர், கரியப்பா; நம் ராணுவத்தின் தளபதியாக இருந்தவர். 'எனது போர்க்கால அனுபவங்கள்' என்ற தலைப்பில், அவர் எழுதிய நுால் ஒன்றை சமீபத்தில் படித்தேன். அதில் இருந்து சில பகுதிகள்:சீனாவிடம், நாம் பெரும் தோல்வியுற்று அவதிக்கு உள்ளான போது, இந்தியப் படையினரின் நம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி போன்றவை மிகவும் குறைந்து, அதிருப்தி நிலவியிருந்தது. படை வீரர்களுக்கு, தமது தலைமைக் கமாண்டர்களிடம் நம்பிக்கை ஏற்படவில்லை.போரில் ஏராளமான படைகளையும், போர் கருவிகளையும் நம் ராணுவம் இழந்திருந்த நேரம் அது. நம், 'ஆர்மி' அந்த சமயத்தில் போருக்கே தகுதி உடையதாக இல்லை என்பதே உண்மை.இத்தகைய சூழ்நிலையில் ஆர்மி, 'சீப்' ஆக இந்திய ராணுவத்திற்குப் பொறுப்பேற்றார், ஜெனரல் சவுத்ரி! அவரது புதிய கமாண்டிங் முறையால், நம் வீரர்கள் நம்பிக்கை கொண்டு, எழுச்சி பெற்றனர். அவரது அறிவுக் கூர்மை தான் அதற்கு காரணம்.வீரர்களுக்கு ராணுவத்தில் கொடுக்கப்படும் பயிற்சியும், ஆர்மியின் பிசிக்கல் தகுதியும் மிகவும் மோசமான நிலையில் இருந்ததை அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், ஆபீசர்களின், 'லீடர்ஷிப்' தகுதியும் குறைவாக இருந்தது. யுத்தங்களில் முன்னேறி செல்வதற்கு அளிக்கப்படும் பயிற்சி சரியான முறையில் இல்லை.இதையெல்லாம் உணர்ந்த சவுத்ரி, முதல் வேலையாக, 'ஆபீசர் கேடரில்' உள்ளவர்களை எல்லாம் மாற்றி, அந்த பொறுப்புகளுக்கு, போர் முறைகள் பற்றிய அனுபவமும், பயிற்சியும் பெற்றிருந்த இளம் வயது ஆபீசர்களைக் கொண்டு வந்தார். இந்தியன் ஆர்மிக்கு எப்படி டிரெயினிங் கொடுப்பது என்பது பற்றி புரோகிராம் ஒன்றை ஏற்படுத்தினார். விரைவிலேயே ராணுவம் உறுதி பெற்றது.சீனாவிடம் நாம் பலத்த அடி வாங்கியிருந்ததைக் கண்ட பாகிஸ்தான், இந்தியாவின் ராணுவ பலம் குறைந்து விட்டது என்று நினைத்து, காஷ்மீர் மீது படையெடுத்து தாக்குதல் நடத்தத் துவங்கியது. இதற்காக, 1965ம் ஆண்டின் ஆரம்பத்தில், குஜராத் பார்டர் மற்றும் கட்ச் பகுதியிலுள்ள போலீஸ் படைகளை சிறை பிடித்து, இந்திய ராணுவத்தை சோதித்துப் பார்த்தது.இதைக் கண்ட ஜெனரல் சவுத்ரி, எந்தவித அதிர்ச்சியையும் காட்டாமலும், 'கட்ச்' பகுதியில் போர் துவங்க முயற்சிக்காமலும் இருந்தார். இதனால், தவறான முடிவுக்கு வந்தது, பாகிஸ்தான்.அதன் விளைவு... 1965 செப்டம்பரில் ஜம்மு - -காஷ்மீரில் உள்ள, 'சம்ப்' பகுதியில் பாகிஸ்தானியர்களின் தாக்குதல்! இத்தாக்குதலை இந்திய ராணுவம் எதிர்க்காமல், காஷ்மீர் மலைப்பகுதிகளில் மட்டும் சென்று போரிட்டது.பாகிஸ்தானியர்கள் ஜெனரல் சவுத்ரியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் பாகிஸ்தானிடம் இருந்ததைப் போல் போதுமான டாங்கிகள், கருவிகள், விமானங்கள் போன்றவை நம்மிடம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், நேராக உள்நாட்டு எல்லையைக் கடந்து, பாகிஸ்தானின், பஞ்சாபில் இருந்த முக்கியமான பாகிஸ்தான் படைகளை தாக்கினார், ஜெனரல் சவுத்ரி.இது, பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த அதிர்ச்சியாகி விட்டது. அவர்கள் இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உடனே அவர்கள், காஷ்மீருக்குள் படையெடுத்து, ஊடுருவ நினைத்த தங்கள் எண்ணத்தைக் கை விட்டு, தங்கள் முக்கிய ராணுவத்தைக் காப்பாற்ற தாய் நாட்டுக்கு விரைந்து ஓடினர்.- இன்னும் பல சுவையான செய்திகள் இப்புத்தகத்தில் உள்ளன...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !