அந்துமணி பா.கே.ப.,
தென் மாவட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார், அந்தப் பெண்மணி! பெண்மணி என்றதும், 45 - 50 வயதான அம்மணியரை நினைவுக்குக் கொண்டு வந்து விடாதீர்கள்; இவருக்கு, 30 வயதுக்குள் இருக்கலாம்... நீண்ட கால வாசகி... அடிக்கடி கடிதம் எழுதுவார்... சில முறை நேரிலும் சந்தித்துள்ளார்.புத்தகப் புழு அவர்... மளிகை பொருட்கள் கட்டி வந்த காகிதத்தில் ஏதேனும் அச்சிடப் பட்டிருந்தாலும் கூட, அதையும் படித்து விடுவார் என்றால், வாசிப்பில் உள்ள ஆர்வத்தைக் கணித்துக் கொள்ளுங்கள்.சமீபத்தில், புத்தகங்கள் வாங்குவதற்கென்றே விடுப்பு எடுத்து, சென்னை வந்திருந்தார்.சென்னை வந்திறங்கியதுமே, எனக்கு போன் போட்டு, தான் வந்திருக்கும் விவரத்தையும், என்னை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறி, நேரம் கேட்டார்.அலுவலகத்தில் சந்தித்தால், விரிவாகப் பேச முடியாது என்பதால், 'நாளை இரவு, உணவு நேரத்தில் நானும், லென்ஸ் மாமாவும் வருகிறோம்...' என, சந்திக்க இருக்கும் உணவு விடுதியையும், நேரத்தையும் கூறி, போனை வைத்தேன்.அடுத்த நாள் சந்தித்த போது, தான் பணியாற்றும் பல்கலை பற்றியும், அதன் தரம், உடன் பணிபுரிவோர், மாணவர்களிடம், 'லைப்ரரி' பயன்படுத்தும் தன்மை குறைந்து வருவது பற்றியும் விரிவாக பேசினார்.லென்ஸ் மாமா, தன் வாயை நாசூக்காக பிளந்து, வலது கை விரலால் இரண்டு சொடுக்கு போடவும், 'என்ன அங்கிள்... ரொம்பவுமே, 'பிளேடு' போடுறேனா...' எனக் கேட்டவர், 'சரி... நான் இனி வாயைத் திறக்கப் போவதில்லை... நீங்கள் பேசுங்கள்...' என்றவரை, உற்சாகப்படுத்தும் விதமாக, 'சீரியஸ் விஷயங்கள் போதும்... நீங்க பயங்கர தமாஷ் பேர்வழியாச்சே... லேட்டஸ்ட் ஜோக்குகள் சிலவற்றை எடுத்து விடுங்களேன்...' என்றேன்.இடையே ஆர்டர் கேட்டு, உணவு விடுதியின் கேப்டன் வந்தார்...'எனக்கு ஒரு விஜிடபிள் ஒக்ராத்தின் போதும்...' என்றவரை, மேலும், கீழும் பார்த்தேன்... காரணம், பிரெஞ்சு உணவான இந்த ஒக்ராத்தின் முழுக்க, முழுக்க, 'சீஸ்' எனும் பாலாடை கட்டியால் தயாரிக்கப்படுவது, கொழுப்பு தவிர ஒன்றும் கிடையாது அதில்.என் பார்வையைப் புரிந்து கொண்ட அப்பெண், 'நல்லா பாருங்க சார்... அப்படியே தானே இருக்கேன்... ஒரு கிலோ எடை கூட அதிகரிக்கவில்லை... டெய்லி ஒர்க் அவுட்; வாக்கிங்; டயட்; யோகா என்று ஒன்றும் விடுவதில்லை... அத்துடன் சைவம்... ஏதோ வந்த இடத்தில் ஆசைப்பட்டது நாக்கு... அது தான் ஒக்ராத்தின் ஆர்டர் பண்ணினேன்...' என்றவர், 'முஷாரபை கிண்டலடிக்கும் ஜோக்குகளை அவிழ்த்து விடுகிறேன் இந்த சந்திப்பில்...' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபரை, கிண்டலடிக்கத் தயாரானார்.'வயதும், அனுபவமும் ஒரு சிலருக்கு எப்படி கை கொடுக்கும் என்பதை இந்த சம்பவம் உங்களுக்குப் புரிய வைக்கும்... கேளுங்க... பாக்., முன்னாள் அதிபர், முஷாரப், முன்னாள் இந்திய பிரதமர், மன்மோகன் சிங், பாலிவுட், முன்னாள் நடிகை, மாதுரி தீட்சித், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர், மார்கரெட் தாட்சர் ஆகியோர் ஒரே ரயில் பெட்டியில் பயணித்தனர்.'ஓடிக்கொண்டிருந்த ரயில், திடீரென ஒரு மலை குகையில் நுழைந்தது; பெட்டி முழுக்க கும்மிருட்டு! அப்போது, முத்தமிடும் சத்தமும், அதைத் தொடர்ந்து எவர் கன்னத்திலோ அடி விழும் ஓசையும் கேட்டது... அடுத்த சில நொடிகளில், மலை குகையை விட்டு வெளியே வந்த ரயில் பெட்டியினுள் வெளிச்சம் பரவியது. தாட்சரும், மன்மோகனும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தனர்.'முஷாரப்போ, சிவந்த வலது கன்னத்துடன் இரு உள்ளங்கைகளாலும் கன்னத்தைப் பிடித்தபடி, கால்களில் கைகளை முட்டுக் கொடுத்து கொண்டிருந்தார்; எவருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.'அப்போது, தாட்சர் நினைத்தார்... 'இந்த பாகிஸ்தானியர்கள், மாதுரி மீது ஏன் தான் இப்படி கிறுக்குப் பிடித்து அலைகின்றனரோ... மலை குகையில், கும்மிருட்டான நேரத்தில் ரயில் பெட்டி நுழைந்த போது, மாதுரிக்கு முத்தம் கொடுக்க முஷாரப் முயன்றிருப்பார்... அந்தப் பெண் சரியாகத்தான் கொடுத்திருக்கிறார்...' என, அவரது எண்ண ஓட்டம் சென்றது.'மாதுரி இப்படி நினைத்துக் கொண்டார்... 'எனக்கு, 'கிஸ்' கொடுக்க முஷாரப் முயன்று, இருளில் ஆள் தெரியாமல் தாட்சருக்கு முத்தம் கொடுத்து விட்டார் போலும்... தாட்சர் திரும்ப சரியாக கொடுத்து விட்டார்...' என்ற ரீதியில் சிந்தித்தார், மாதுரி.'சே... என்ன பைத்தியக்காரத்தனம்... இந்த கிழம் (மன்மோகன்) மாதுரிக்கு முத்தம் கொடுக்க முயன்றிருக்கும்... நான் தான் அது என நினைத்து, எனக்கு அறை கொடுத்து விட்டாள், மாதுரி...' என்று நினைத்தார், முஷாரப்.'அடுத்து திட்டம் போட்டார் மன்மோகன்... 'அடுத்து, மலை குகையில் ரயில் பெட்டி நுழைந்து இருந்தால்... மீண்டும் ஒரு முத்த சப்தம் எழுப்பி, இன்னொரு அடி முஷாரபுக்கு கொடுத்து விடலாம்...''இப்போது நினைத்துப் பாருங்கள்... வயதும், அனுபவமும் ஒரு மனிதருக்கு எப்படி உதவுகிறது என்பதை...'ஒக்ராத்தின் வந்தது... அதை சுவைத்தபடியே, 'இதோ அடுத்த ஜோக்... அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதி தகர்த்த செப்டம்பர் 2001... அமெரிக்க அதிபர் புஷ்ஷை போனில் அழைத்தார், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்... 'புஷ் அவர்களே... என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்... எவ்வளவு பெரிய பேரழிவு... எத்தனை மக்கள்... எவ்வளவு உயரமான கட்டடம்... இங்கே ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... இந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை...' என, கூறினார்.'குழம்பிப் போன புஷ், 'என்ன கட்டடம்... மக்களுக்கெல்லாம் என்ன ஆனது...' எனக் கேட்டார். சுதாரித்துக் கொண்ட முஷாரப், 'இப்போது, அமெரிக்காவில் எத்தனை மணி...' எனக் கேட்டார். 'காலை, 8:00 மணி ஆகிறது...' என்றார், புஷ். 'அப்படியானால், இன்னும் ஒரு மணி நேரம் கழித்து கூப்பிடுகிறேன்...' எனக் கூறி, போனை வைத்தார், முஷாரப்.அமெரிக்க நேரம், நம்மை விட பிந்தியது. அங்குள்ள மாநிலங்களைப் பொறுத்து, பத்து முதல் பனிரண்டு மணி நேரம் பின்னால் இருக்கும். உதாரணமாக, இங்கு நண்பகல், 12:00 மணி என்றால், அங்குள்ள சில மாநிலங்களில், இரவு, 12:00 மணி ஆக இருக்கும். அதிபர் முஷாரபின் பங்கு, இரட்டைக் கோபுர தகர்ப்பில் உள்ளது என்பதும், அவரது முட்டாள் தனத்தை கிண்டலடிப்பது போலவும் இந்த ஜோக்கை அமைத்துள்ளனர்!'அடுத்து சொல்லப் போகும் ஜோக், இரட்டை கோபுரம் தகர்ந்தபோது நடந்ததை ஒட்டியதே... ஆனால், இதில் முஷாரப் கிடையாது... சீன அதிபர் தொடர்புடையது. இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவிரவாதிகள், அதே நேரத்தில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான, 'பென்டகனையும்' தகர்த்தனர். 'உடனே, சீன அதிபர், அமெரிக்க அதிபரான புஷ்ஷுக்கு போன் போட்டு, 'நடந்த அசம்பாவிதம் பற்றி கேள்விப்பட்டேன்... ரொம்ப வருத்தமாகப் போய் விட்டது... மிகப் பெரிய கோர சம்பவம் இது... உங்களுடைய முக்கியமான தஸ்தாவேஜுகள், ராணுவ ரகசியங்கள் அடங்கிய பைல்கள், அணு ஆயுத கோப்புகள் காணாமலோ, எரிந்தோ போயிருந்தால், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்... எல்லாவற்றின் நகலும் எங்களிடம் பத்திரமாக இருக்கிறது...' என்றார்.அந்த நேரம், புஷ்ஷின் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்...'இவை எல்லாம் இன்டர்நெட்டில் இருந்து கிளப்பியவை...' என்றும் கூறினார்.அவர் தங்கியிருந்த ஏரியாவில், 'டிராப்' செய்து, திரும்பும் போது, 'இன்டர்நெட்டில் கிளப்பிய ஒரு, 'ஏ' ஜோக் சொல்கிறேன். கேள்... பள்ளிக்கூட சிறுவன் ஜானி, அன்று அவனது பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டியுள்ள ரோடு வழியே அவனது அப்பாவின் கார் சென்று ஒரு காட்டுக்குள் நுழைவதைப் பார்த்தான். ஆச்சர்யம் மேலிட, இவனும் பின்னாடியே ஓடிச் சென்று மறைந்திருந்துப் பார்த்தான்...'காரினுள் ஜானியின் அப்பாவும், உறவுக்காரப் பெண் ஜேனியும், 'அந்தரங்க' சமாசாரங்களில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது... உடனே வீட்டிற்கு வந்த ஜானி, தன் தாயிடம் காரில் கண்ட விஷயங்களை கூறி, 'ஜேனி ஆன்ட்டி, அப்பாவுக்கு முத்தம் கொடுத்தாங்க... ஆன்ட்டியோட டிரஸ்சை கழற்ற, அப்பா, 'ஹெல்ப்' பண்ணார்... அப்பாவின் ஆடைகளை களைய, ஜேனி ஆன்ட்டி, 'ஹெல்ப்' பண்ணாங்க... அப்புறம்...' என சொல்லும் போது, ஜானியின் அம்மா தடுத்து நிறுத்தி, 'கதை ரொம்ப, 'இன்ட்ரஸ்ட்டா' இருக்கே... மீதி கதையை, அப்பாவுடன் இரவு டின்னர் சாப்பிடும் போது சொல்லு... என்னைப் போலவே, கதையை ரசிக்கிறாரா என்பதை அவர் முகம் போகும் போக்கைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்...' என்றாள்.'இரவும் வந்தது... உணவு நேரமும் வந்தது... டைனிங் டேபிளில் ஜானி, அவன் அப்பா அமர்ந்திருக்க, பரிமாறிக் கொண்டிருந்த அம்மா, 'ஜானி... அந்தக் கதையை சொல்லு, பார்ப்போம்...' என்றார்.'ஜானி ஆரம்பித்தான்... 'ஸ்கூல் பிளே கிரவுண்டில் நான் விளையாடிக் கொண்டிருந்தேனா... அப்போ, அப்பாவோட கார் அந்த பக்கமா போயி, பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைஞ்சது... ஆவலில் நானும் பின்னாடியே போயி பார்த்தேன்... 'அங்கே, ஜேனி ஆண்டிக்கு, அப்பா முத்தம் கொடுத்தாரு... அப்புறம், ஆன்ட்டியோட டிரஸ்சை கழற்ற அப்பா, 'ஹெல்ப்' பண்ணாரு... அதைப்போல, அப்பாவோட, டிரஸ்சை கழற்ற, ஆன்ட்டி, 'ஹெல்ப்' பண்ணாங்க... 'அப்புறம் அப்பா மிலிட்டரியில வேலை செஞ்சுக்கிட்டிருந்த போது, 'நீயும் (அம்மா), அங்கிள் ஜோசப்பும் செய்வீங்களே... அதே வேலையை, அப்பா செஞ்சாரு...' என போட்டுடைத்தான்... இந்த கதையிலிருந்து என்ன நீதி தெரிஞ்சிக்கிற...' எனக் கேட்டார், லென்ஸ் மாமா.'யாராவது ஒரு கதையை சொல்லும்போது, குறுக்கப் புகுந்து நிறுத்தாம, முழு கதையையும் மொத்தமா கேட்டுக்கணும்... இது தானே இந்த கதையோட நீதி...' என கூறி, முடித்தேன். ஆமோதிக்கும் விதமாக மாமா தலையாட்ட, இருப்பிடம் வந்து சேர்ந்தது.