உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கேசென்னை, பெண்கள் கல்லுாரி ஒன்றில், எம்.பி.ஏ., இறுதியாண்டு படிக்கும் மாணவியும், என் வாசகியுமானவர், என்னை சந்திக்க வந்தார். அருகில், லென்ஸ் மாமாவும் இருக்க, அவரையும் நலம் விசாரித்தார்.'படிப்பெல்லாம் எப்படி போகுது... படிப்பு முடிந்ததும், என்ன செய்வதாக உத்தேசம்?' என்றேன்.'எல்லாம் சிறப்பா போயிட்டிருக்கு... படித்து முடித்ததும், சொந்த தொழில் செய்யப் போகிறேன், மணி...' என்றார்.'என்ன மாதிரியான தொழில்...' என்றேன்.'இரண்டு, மூன்று யோசனை இருக்கு. எதுல ஈடுபட்டா வெற்றிகரமா முடியும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டுக்குள் முடிவு செய்து விடுவேன்...' என்றவர், தொடர்ந்தார்...'எங்க கல்லுாரியில் படிக்கும் சிலர், என்ன தொழில் தமக்கு பொருத்தமானது என்று கண்டுபிடிக்க, ஒரு கணக்கு வைத்துள்ளனர். பசங்க இடையே இது பரவலாக உள்ளது...' என்றார்.'அது என்ன கணக்கு?' என்றேன்.அவர் கூறியது இது தான்...'எந்த துறையில், உங்க பணத்தை, முதலீடு செய்யணுங்கிறதை, நீங்களே தேர்வு செய்யலாம். 10, 'சாய்ஸ்' இருக்கு. அதுல வர்ற முடிவுப்படி, நீங்க துறையை தேர்ந்தெடுத்து முதலீடு பண்ணுங்க...'ஒன்றிலிருந்து, ஒன்பதுக்குள்ளே ஓர் எண்ணை தேர்ந்தெடுத்துக்கிடுங்க... நீங்க தேர்ந்தெடுத்த அந்த எண்ணை, மூன்றால் பெருக்குங்க... வர்ற விடையோட, மூன்றை கூட்டிக்கிடுங்க... கூட்டிய பின் வர்ற எண்ணை, மறுபடியும், மூன்றால் பெருக்குங்க... 'இப்ப, உங்களுக்கு ரெண்டு இலக்கம் கொண்ட ஓர் எண் வரும்... அந்த ரெண்டு இலக்கத்தையும் கூட்டிக்கிடுங்க... கூட்டி வர்ற அந்த எண் தான், உங்களை பெரும் பணக்காரர் ஆக்கப் போகிறது... 'நீங்க கடைசியா எந்த எண்ணை விடையா கண்டுபிடிச்சீங்களோ, அந்த எண்ணுக்குள்ள தொழிலில் முதலீடு செஞ்சு, பணத்தை அள்ளுங்க...' என்றார்.அந்த, 10, 'சாய்ஸ்' இது தான்:1.நிலம் 2.தங்கம் 3.நிரந்தர வைப்பு நிதி 4.'ஷேர்'கள் 5.பெட்டிக் கடை, மளிகை கடை மற்றும் 'ஆட்டோமொபைல்' தொழில் 6.'ரெகரிங் டிபாசிட்' 7.பொது, 'பிராவிடன்ட் பண்ட்' 8.தேசிய சேமிப்பு பத்திரம் 9.மனைவியிடம் கொடுத்தல் 10.'மியூச்சுவல் பண்ட்!'இந்த கணக்கை, என்னை போட சொன்னார், வாசகி. லென்ஸ் மாமாவும் கணக்கு போட, ஒன்பதாவது எண்ணே வந்தது.'இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது...' என்று, பெண் உதவி ஆசிரியைகளை போட்டு பார்க்க கூறினேன். அவர்களுக்கும், ஒன்பதாம் எண்ணே வந்தது.நம்மை, 'கலாய்க்க' தான், இந்த கணக்கு என்று புரிய, வாசகியை தேட, கண் அடித்தபடி, 'டூ-வீலரில்' ஏறி பறந்தார்.கடுப்பான லென்ஸ் மாமா, 'அடுத்த முறை அவர் வரட்டும்...' என்று பல்லைக் கடித்தார். ப'மணி... வெளியூர் சென்று ரொம்ப நாளாகி விட்டதுப்பா... பொறுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கு... ரெண்டு நாள் புதுச்சேரி சென்று வருவோம்...' என்று நச்சரித்தார், லென்ஸ் மாமா.எனக்கும் கொஞ்சம், 'ரிலாக்ஸ்' தேவைப்பட்டதால், தயங்கித் தயங்கி, பொறுப்பாசிரியரிடம் அனுமதி கேட்க, நல்ல, 'மூடு' இருந்ததால், உடனே, அனுமதி அளித்தார்.வழக்கம்போல், மாமா, வண்டி ஓட்ட, நான் அருகில் அமர்ந்திருந்தேன். சென்னை எல்லை தாண்டியதுமே, 'அங்கிள் ஜானி'யை தேட, நான் தடுத்தேன். கடுப்பில் இருந்தவர், பாதையின் குறுக்கே வந்த ஆடு, மாடு மற்றும் மனிதர்களை சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தைகளால், அர்ச்சனை செய்தபடியே வண்டி ஓட்டினார்.இனி, அவருடன் மல்லுக்கட்ட முடியாது என்பதால், 'திண்ணை' நாராயணன் சாரிடம், வாங்கிச் சென்ற, 'ஆங்கிலேய கவர்னர்கள் பிடியில் சென்னை' என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.அதில், அப்போது, சென்னையின் கவர்னராக பதவி வகித்த, தாமஸ் பிட் என்ற ஆங்கிலேய அதிகாரியின் லீலைகளை படித்தபோது, இன்றைய அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியது இவர்தானோ என்று எண்ணத் தோன்றியது.அப்பகுதியை நீங்களும் படித்துப் பாருங்களேன்:இங்கிலாந்தில், 1653ல், பிறந்த தாமஸ் பிட், 21வது வயதில், இந்தியா வந்தார். அப்போது, ஒரிசாவின் பாலாசூர் நகரில் தங்கியிருந்த, பிட், கிழக்கிந்திய கம்பெனியின் ஒப்புதலை பெறாமலே, பிற நாடுகளுடன் வணிகம் செய்து வந்தார். இதனால், கம்பெனிக்கும், இவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.இவரை ஒடுக்க, கிழக்கிந்திய கம்பெனி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், அவை அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்தார், பிட்.இதனிடையே, 1683ல், இங்கிலாந்து சென்ற, பிட்டை, மடக்கிப் பிடித்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான, அவரது செயல்களுக்கு, 400 பவுண்டு அபராதம் விதித்தனர். இன்றைய மதிப்பில், 33 ஆயிரம் ரூபாய். அக்காலத்தில், இது மிகப்பெரிய தொகை.ஆனால், இந்தியாவில் எக்கச்சக்கமாக சம்பாதித்து விட்டதால், அபராத தொகையை சிரமமில்லாமல் கட்டி விட்டார், பிட். இருந்தாலும், இங்கிலாந்திலேயே சில ஆண்டுகள் தங்கி, நிறைய நிலங்களை வாங்கிப் போட்ட, பிட், எம்.பி.,யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர், 1693ல், மீண்டும் இந்தியா வந்த, தாமஸ் பிட், இம்முறை, கிழக்கிந்திய கம்பெனியுடன் சமாதானம் செய்து கொண்டார். அவரது திறமையை அறிந்த கிழக்கிந்திய கம்பெனி, சென்னைக்கு அனுப்பியது. அடுத்த ஆண்டே, புனித ஜார்ஜ் கோட்டையின், கவர்னராக நியமிக்கப்பட்டார்.சென்னை நகரை முதன் முறையாக, துல்லியமாக சர்வே எடுக்க ஏற்பாடு செய்தார். முகலாய பேரரசர், அவுரங்கசீப்பின் தளபதியான, தாவூத்கான், 1702ல், புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட, அதை முறியடித்தார், பிட்.இதுபோன்ற நடவடிக்கைகளால், தாமஸ் பிட்டின் ஆட்சி காலத்தை, சென்னையின் பொற்காலம் என்று கூறுகின்றனர், வரலாற்று ஆய்வாளர்கள். கடந்த, 1708ல், திருவொற்றியூர், கத்திவாக்கம், வியாசர்பாடி மற்றும் சாத்தங்காடு ஆகிய கிராமங்களை, தாவூத்கானிடமிருந்து மானியமாக பெற்று, சென்னையுடன் இணைத்ததும், தாமஸ் பிட் தான்.இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில், முக்கியமானது, 'ரீஜென்ட்!' இதற்கு, மற்றொரு பெயர், பிட் வைரம். இந்த வைரம், தெலுங்கானா மாநிலம், கோல்கொண்டாவில் உள்ள, பர்க்கால் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. வெட்டி எடுத்தபோது, 410 காரட்டாக இருந்த வைரத்தை, கவர்னர் தாமஸ் பிட், 1701ல், 48 ஆயிரம் பகோடாக்கள் விலை கொடுத்து வாங்கினார். பின், இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று பட்டை தீட்டப்பட்டதும், 137 காரட்டாக குறைந்தது. பிட் வைரம் என்றழைக்கப்பட்ட இதை, பிரெஞ்ச் அரசுக்கு, 1.35 லட்சம் பவுண்டுகளுக்கு விற்று, மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தார். இன்றைய மதிப்பு, 1.13 கோடி ரூபாய்.பிரெஞ்ச் மன்னரால், 1717ல், 'ரீஜென்ட்' என்று பெயர் மாற்றப்பட்ட இந்த வைரத்தை தான், நெப்போலியன் தன் வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார். 'ரீஜென்ட்' வைரம், தற்போது, பிரான்ஸ் தலைநகரான, பாரீஸ் நகரில் உள்ள, 'லுாவர்' அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.பதவிக் காலம் முடிந்ததும், பெரும் செல்வத்துடன், 1709ல் இங்கிலாந்து திரும்பிய, தாமஸ் பிட், பல பகுதிகளில் அரண்மனை போன்ற வீடுகளை வாங்கி, ராஜபோகமாக வாழ்ந்தார். அப்போதும், சும்மா இருக்காமல், மீண்டும், இங்கிலாந்து பார்லிமென்டில் நுழைந்து விட்டார். இதனிடையே, அவர் மகனும், எம்.பி.,யாகி விட்டதால், அப்பாவும், மகனும் சேர்ந்தே பார்லிமென்டுக்கு சென்று வந்தனர்.இவரது பேரனான, வில்லியம் பிட் சீனியரும், கொள்ளுப் பேரனான, வில்லியம் பிட் ஜூனியரும், இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்கள்.இறுதி நாட்களில், ஜமைக்காவின் கவர்னராக நியமிக்கப்பட்டார், பிட். ஆனால், சில காரணங்களால், அந்த பதவியை அவர் ஏற்கவில்லை.ஆங்கிலேய ஆட்சியாளர்கள், பணம் சம்பாதிக்கும் களமாக, சென்னை இருந்துள்ளது என்ற கூற்று, உண்மை தான் போலிருக்கு!புத்தகத்தை படித்து முடித்து, நிமிர்ந்தபோது, கடமையே கண்ணாக, வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !