பா-கே
அன்று -'பிள்ளையார் துறை'யை சாப்பிடுவதற்கு அலுவலக மொட்டை மாடிக்கு சென்றேன்.'சாரி... அது, 'பிள்ளையார் துறை' அல்ல... புளியோதரைக்கு இந்தப் பெயர் கொடுத்தவர், பாலு என்ற, ஐ.ஏ.எஸ்., ஆபீசர். (அவர் நிஜமான, ஐ.ஏ.எஸ்., ஆபீசர் அல்ல; ஆனால், அதே தோற்றம் கொண்டவர்.)அவர், இப்படித்தான் பல பெயர்களையும் வித்தியாசப்படுத்தி சொல்வார்.சரி... விஷயத்துக்கு வருவோம்...நமது அலுவலகத்தில் பல துறைகளிலும் பணியாற்றும் நான்கு பெண்கள், ஒரே டேபிளில் அமர்ந்து உணவு அருந்த ஆரம்பித்திருந்தனர்.எனக்கு, 'சீட்' கிடைக்காததால், தெற்கேயும், மேற்கேயும் பார்த்துக் கொண்டிருந்தேன். இதை கவனித்த, சைவரான கலா என்ற மேடம், 'அந்துமணி... இங்கே வாயேன்... ஒரு, 'சீட்' காலியாகத்தானே இருக்கு...' என்றார்.நன்றி தெரிவித்து, அவர்களுடன் அமர்ந்து கொண்டேன். ஜெசி ரோஸ்லின் ஜெயந்தி என்ற ஊழியர், தன் கேரியரை திறந்தார்; 'கும்' என்ற வாசனை...'மேடம்... என்ன இது?' என்றேன்.'இது, கருவாட்டு தொக்கு மற்றும் கருவாட்டு குழம்பு...' என்றார்.நமக்குத் தான் அந்தப் பழக்கமே கிடையாதே என்பதால், நன்றி தெரிவித்து, 'கேன்டீனில்' இருந்து வாங்கி வந்த புளியோதரையை பிரித்தேன்.கலா தவிர மற்ற மூவரும், அசைவம் உண்பவர்கள். எனவே, அவர்களுக்கு முதலில் கருவாட்டுத் தொக்கு வைத்து விட்டு, சோற்றில் கருவாட்டு குழம்பை ஊற்றினார், ஜெயந்தி.மூவருமே, 'ஐயோ... ஒரே உப்பா இருக்கு...' என, நொந்து கொண்டனர்.அசைவ சமையலில் கில்லியான பானுமதி என்பவர், 'கருவாட்டுத் தொக்கும், கருவாட்டுக் குழம்பும் எப்படிச் செய்வது என சொல்லித் தருகிறேன்...' என, ஆரம்பித்து, தொடர்ந்தார்...'வாளை அல்லது வஞ்சிரம் கருவாடு எதுவாக இருந்தாலும், முதலில், வெந்நீரில், 10 நிமிடம் ஊற விடவும். பின், அதை நன்கு அலசி வடிகட்டவும். மீண்டும் இரண்டு முறை, கருவாடு மூழ்கும் வரை சாதாரண நீர் ஊற்றி அலசவும். அதன் பின்னும், உப்பு படலம் இருந்தால், ஸ்பூனால் லேசாக, சுரண்டி கழுவி, தனியாக வைக்கவும்.'கருவாடு - 10 துண்டுகள்; பெரிய வெங்காயம் - 2; தக்காளி - 2; மஞ்சள் துாள் - 1 தேக்கரண்டி; பூண்டு 6 பல் (லேசாக உரலில் தட்டி கொள்ளவும்); பச்சை மிளகாய் - 4; மிளகாய் துாள் - 2 தேக்கரண்டி; கொத்தமல்லி - சிறிதளவு; தண்ணீர் - அரை கப்; எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி ஆகியவை தேவை.'அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய வைக்கவும். அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாதி அளவு வதங்கியதும், தக்காளி மற்றும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.'இத்துடன், மஞ்சள் துாள், மிளகாய் துாள் மற்றும் கருவாடு சேர்த்து, மிதமான தீயில், ஐந்து நிமிடம் வதக்கவும். இதில், அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தொக்கு பதத்துக்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்... ருசியாக இருக்கும்!'அடுத்து, கருவாட்டு குழம்பு பற்றி சொல்கிறேன்...'நெத்திலி கருவாடு - அரை கப்; கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 1 தேக்கரண்டி; வெந்தயம் - கால் தேக்கரண்டி; வரமிளகாய் - 2; பூண்டு பல் - 6; சின்ன வெங்காயம் - 15; தக்காளி - 2; கத்தரிக்காய் - 4; மிளகாய் துாள் - 1 தேக்கரண்டி; மல்லித்துாள் - 2 தேக்கரண்டி; மஞ்சள் துாள் - அரை தேக்கரண்டி; புளி - பெரிய நெல்லிக்காய் அளவு; கருவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.'நெத்திலி கருவாடை தலை நீக்கி, வெந்நீரில், 10 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பின், சாதாரண நீரில் இரண்டு முறை அலசி வடிகட்டவும்.'அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.'தோலுரித்த சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்க்கவும். இத்துடன், மிளகாய் துாள், மல்லித்துாள், மஞ்சள் துாள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, புளி கரைசலை ஊற்றி, தேவையான அளவிற்கு தண்ணீரையும் சேர்க்கவும்.'நன்கு கொதி வந்ததும், நெத்திலி கருவாடை சேர்த்து, மேலும், 10 நிமிடம் கொதிக்க விடவும். காரக்குழம்பு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.'கத்தரிக்காய்க்கு பதில், மொச்சைக் கொட்டையை முதல் நாளே ஊற வைத்து, வேக வைத்து சேர்த்தால், கருவாட்டு குழம்பின் வாசம், ஊரையே துாக்கும். மேலும், தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்தால், குழம்பு கெட்டியாக வரும்...' என்று முடித்தார்.இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, புளியோதரை சாப்பிடுவது பாதியிலேயே நின்றது.ஆனாலும், நான் விடவில்லை... 'மேடம்களா... இப்போது, உப்பு கரிக்கிறது எனக் கூறினீர்களே... அது, இதில் இருக்காதா...' எனக் கேட்டேன்.'ஒருநாள் செய்து எடுத்து வருகிறேன்... ஆனால், நீ சாப்பிட மாட்டியே... மற்றவர்களின், 'கமென்ட்'டை அப்போது கேள்...' என்றார், பானுமதி.சரி... இது நடக்கும் போது நடக்கட்டும்! உங்கள் வீட்டில் தயார் செய்ய தொடங்கி விட்டீர்களா, வாசகர்களே!
ப
தமிழகத்தில், மதுவை ஒழிக்க வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முதல், பல அரசியல் கட்சியினரும் கேட்டு வருகின்றனர்.ஆனால், தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய், 'டாஸ்மாக்' மூலம் வருமானம் கிடைக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் கடன் சுமை, 4.56 லட்சம் கோடி. ஒவ்வொரு தமிழனின் தலையிலும், 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது.இந்நிலையில், மதுவை ஒழிக்க எப்படி முன் வருவர்?முன் எப்போதோ, கண்ணதாசன் அளித்த பேட்டியில் படித்தது...மதுவிலக்கு என்பது ஒரு மடத்தனமான கற்பனை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மது தோன்றி விட்டது. எல்லா வகையான ஒழுக்கங்களில் சிறந்தவர்களும் கூட, மதுவை குடித்திருக்கின்றனர் என்று, வரலாறு மற்றும் காவியங்கள் கூறுகின்றன. அந்த மதுவை குடிக்காமல் இருக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று தான், காந்திஜியும் கூறினாரே தவிர, சட்டமாக்க வேண்டும் என்று கூறவில்லை. எதை நீங்கள் சட்டமாக்குகிறீர்களோ, அது, அதிகமாக பரவும் என்பது தான் உண்மை.ஆகவே, மதுவிலக்கை பற்றி டில்லியிலும், சென்னையிலும் பேசப்படுகிற பேச்சுகள், அவர்களுடைய பெருமையை வேண்டுமானால் உயர்த்துமே தவிர, மதுவிலக்குக்கு இந்த நாட்டில் ஆதரவு கிடைக்காது. இவர்கள் போனால் இன்னொருவர், இதை அதிகமாக உண்டாக்கி விடுவரே தவிர, குறைக்கப் போவதில்லை.- கண்ணதாசன் சொன்னபடி தானே நடந்து கொண்டிருக்கிறது!