அந்துமணி பா.கே.ப.,
பா - கேசினிமா துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், என்னையும், லென்ஸ் மாமாவையும், நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு, 'லஞ்ச்'க்கு அழைத்திருந்தார்.அவரை சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டதால், மதியம், 1:00 மணிக்கு ஹோட்டலில் ஆஜரானோம். யார் யாருக்கு என்ன உணவு வகை வேண்டும் என்று கேட்டு, 'ஆர்டர்' செய்தார்.சமீபத்தில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள் பற்றி அக்கு வேறு ஆணி வேராக பிரித்து மேய்ந்தார், திரைத்துறை நண்பர்.நாளிதழில் வெளியாகும் சினிமா செய்திகளை தான், தினமும் படிக்கிறோமே. இங்கேயும் அதுதானா என்பதால், எனக்கு அதில் சுவாரஸ்யம் ஏதும் ஏற்படவில்லை. எனவே, சுற்றிலும் இருப்பவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். பேச்சு மும்முரத்தில், அவர்கள் இருவரும் சிகரெட்டை ஊதித் தள்ள ஆரம்பித்தனர். எங்களுக்கு அடுத்த டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், திரும்பி எங்களை பார்த்து, 'இப்படி தொடர்ந்து சிகரெட் பிடிச்சா, உடம்பு என்னத்துக்கு ஆகும். அதன் புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் நுரையீரல் பாதிக்குமே...' என்று சத்தம் போட, அவசர அவசரமாக சிகரெட்டை அணைத்தனர், நண்பரும், லென்ஸ் மாமாவும்.அடுத்து, அந்நபர் செய்ததுதான், 'ஹை - லைட்!' வெயிட்டரை அழைத்து, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, எங்கள் டேபிள் நடுவில் வைக்க சொன்னார். ஒரு சிறிய டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து டேபிள் மீது சுருட்டி வைக்க செய்தார்.'இதெல்லாம், சிகரெட் புகையை இழுத்துக் கொள்ளும்...' என்றவர், சேரை இழுத்து எங்கள் அருகில் போட்டு, 'நான், நுரையீரல் சிறப்பு மருத்துவர்...' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.நாங்கள் யார் என்பதை அறிந்து, 'உங்களோடு சேர்ந்து சாப்பிட அனுமதிப்பீரா...' என்று மென்மையாக கேட்டு, புன்னகைத்தார்.நாங்கள் சரி என்றதும், மருத்துவ சம்பந்தமாக பல விஷயங்களை பேசினார். தொடர்ந்து, 'சிகரெட் வியாபாரி ஒருவர், சிகரெட் விற்க, அவர் செய்த, 'டெக்னிக்' பற்றி சொல்லட்டுமா...' என்றார்.'சொல்லுங்களேன் கேட்போம்...' என்று நான் பதில் கூறியதும், என்னை முறைத்தார், லென்ஸ் மாமா.நான் கண்டுகொள்ளாமல், மருத்துவர் கூறுவதை கேட்கலானேன். அது:சிகரெட் பிடிக்கிற பழக்கமே இல்லாத ஒரு ஊருக்கு, சிகரெட் வியாபாரி ஒருத்தர் வந்தார். வியாபாரம் பண்ணிப் பார்த்தார். யாரும் அந்த ஊர்ல வாங்கற வழியைக் காணோம்.இவரு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சார். உடனே, சிகரெட்டோட பெருமைகளை பத்தி பிரசாரம் பண்ண ஆரம்பிச்சார். எப்படி தெரியுமா?* புகைப் பிடிக்கிறவன் எவனையும் நாய் கடிக்கிறதில்லே!* புகைப் பிடிக்கிறவனுக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கிறதில்லே!* புகைப் பிடிக்கிறவன் வீட்டுக்கு திருடன் வர மாட்டான்!* புகைப் பிடிக்கிறவனை முதுமை நெருங்காது! அப்படின்னு சொல்லி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சார்.ஜனங்கள்லாம் பார்த்தாங்க... இதுல நிறைய சவுகர்யம் இருக்கும் போலன்னு நினைச்சாங்க.உடனே, சிகரெட் வாங்க ஆரம்பிச்சாங்க. வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சது. ஒரு வருஷம் ஆச்சு.சிகரெட்டின் மகிமை பத்தி அந்த வியாபாரி சொன்னது, பொய்யின்னு அனுபவத்துல புரிஞ்சுக்கிட்டார், ஒருத்தர். உடனே, வியாபாரியைத் தேடிக்கிட்டு போனார்.'என்னய்யா நீ... இந்த ஊர் ஜனங்களை பொய் சொல்லி ஏமாத்திப்புட்டியே...'ன்னு சண்டை போட்டார்.ஆனா, அந்த ஆள் கொஞ்சம் கூட அசரல. 'நான் சொன்னது எதுவும் பொய் இல்லே...'ன்னு சாதிச்சார்.இவரு விடலே.'அது எப்படி? புகைப் பிடிக்கிறவனை நாய் கடிக்காதுன்னு சொன்னியே அது பொய் தானே...' என்றார்.இதுக்கு அந்த வியாபாரி விளக்கம் கொடுத்தார்.'அப்படி இல்லீங்க... புகைப் பிடிக்கிறவன் உடம்புல பலம் இருக்காது. தள்ளாடி தள்ளாடி தான் நடப்பான். அதனால, எப்பவும் கையில ஒரு ஊன்றுகோல் வச்சிருப்பான். கையில குச்சியோட இருக்கிறவனை பார்த்தால், நாய் நெருங்காது. அதுதான் அப்படிச் சொன்னேன்...' என்றார்!'ஊனமுற்ற குழந்தை பிறக்காதுன்னு சொன்னீயே, அது எப்படி?'ன்னு கேட்டார், இவர்.'உண்மையில அவனுக்கு எந்தக் குழந்தையும் பிறக்காது. அதனால, ஊனமுற்ற குழந்தையும் பிறக்காது தானே...''புகைப்பிடிக்கிறவன் வீட்டுக்கு திருடன் வரமாட்டான்னு சொன்னியே...' என்றார்.'ஆமாம், புகைப்பிடிக்கிறவன் ராத்திரிபூரா இருமிக்கிட்டே இருப்பான். அதனால், ஆள் முழிச்சுகிட்டிருக்கான்னு நினைச்சு திருடன் வரமாட்டான்...' என்றார், இவர்.'எல்லாம் சரி, புகைப்பிடிக்கிறவன் முதுமை அடையறதில்லேன்னு சொன்னியே, அது எப்படி சாத்தியம்?'ன்னு கேட்டார்.'முதுமை வர்றதுக்கு முன்னாடியே அவன் செத்துப் போயிடுவான் சார். அப்புறம் எப்படி அவனை முதுமை நெருங்கும்...'ன்னு கேட்டார், இவர்.'நியாயம் தான்...'னு சொல்லிபுட்டு இவரு திரும்பி வந்துட்டார்.இந்தக் கதையிலிருந்து வியாபாரத் தந்திரம்னா என்னங்கறதையும், புகைப்பழக்கம் எவ்வளவு கெடுதல்ங்கறதையும் புரிஞ்சுக்கலாம்.எந்த நேரமும் நிறுத்தாம சிகரெட் பிடிக்கிற, 70 வயது ஆன ஒருத்தர், அந்த வயசுல அதை கைவிட்டுடறார்ன்னு வச்சுக்குங்க... அதன்பின், அவர் அதிக நாள் வாழ்வாராம்.இவ்வளவு காலம் புகைச்சிட்டோம்; இனிமே நிறுத்தி என்ன பிரயோஜனம்ன்னு நினைக்க வேண்டியதில்ல.அமெரிக்காவுல, இதைப் பத்தி சோதனையெல்லாம் பண்ணிப் பார்த்திருக்காங்க.ஏற்கனவே பிடிச்ச சிகரெட், வயசான காலத்துல கெடுதல் பண்ணும்ன்னு நினைக்க வேண்டியதில்ல. எப்ப வேணாலும் அதைக் கைவிடலாம். எந்த நேரம் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டாலும், அதுக்கப்புறம் நல்லபடியா வாழலாம் என்ற முடிவுக்கு வந்துட்டாங்க, நிபுணர்கள்.'இவ்வளவுலாம் சொல்லியும், யார் சார் கேட்கறாங்க இந்த காலத்துல?' என்று அலுத்துக் கொண்டார், மருத்துவர்.அவர் சொல்லி முடிக்கவும், அதுவரை, 'உம்' என்று இருந்த மாமா, என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தார்.'நீங்கள் பேசிக் கொண்டிருந்த சினிமா சங்கதிகளுக்கு, இது எவ்வளவோ தேவலை...' என்று மனதில் நினைத்தபடி, 'தாய் காம்போ' சைவ உணவை ஒரு பிடி பிடித்தேன்.