அந்துமணி பா.கே.ப.,
வெப்பம் தாங்க முடியவில்லையாம். அதனால், புதுசாக இரண்டு காட்டன் புடவை வாங்கித் தரச் சொல்லி, ஒரு வாரமாய் என் மனைவி படுத்துகிற பாடும், பண்ணுகிற போராட்டமும் - அந்த பாங்க்ஹாஸ்ட் அம்மணி கெட்டாள் போங்கள்...' என்றார் குப்பண்ணா.'அது யார்?' என்றேன்.'பிரிட்டிஷ் தேசத்தில், பெண்களுக்கு ஓட்டுப் போட உரிமை வேண்டும் என்பதற்காகப் பெரிய, பெரிய சத்தியாகிரகங்கள் செய்தவர்...' என்றார்.'பார்லிமென்ட்டின் முன் நின்று, அவரும், அவருடைய தொண்டர்களும், நாள் முழுவதும் கோஷமிட்டுக் கிளர்ச்சி பண்ணுவர். அவர்கள் வந்தவுடனே, போலீஸ் தூக்கிக் கொண்டு போய் விடும். அதை முறியடிக்க புது தந்திரம் கண்டுபிடித்தாள் அந்த அம்மாள்.'கனமான இரும்புச் சங்கிலியை மாட்டிக் கொண்டு ஒரு தொண்டர் வர வேண்டியது. அவரைச் சங்கிலியால் கட்டிப் பூட்டி விட்டுப் போய் விடுவர் மற்றவர்கள்!'போலீஸ்காரர்களால், உடனே அந்த தொண்டரை அப்புறப்படுத்த முடியாதே! பூட்டைத் திறந்து, சங்கிலியை அவிழ்த்து ஆளை விடுவிப்பதற்குள் எத்தனை கத்து, கத்த முடியுமோ, அத்தனையும் கத்தித் தீர்த்து விடுவர்!''சரியான கல்லுடிமங்கத்தனம் தான்!' என்றேன்.'கல்லுளிமங்கத்தனம்... என்று சொல்!' என்றார் குப்ஸ்.'இல்லை... கல்லுடிமங்கன் என்பதே சரி. நம் தெருவில் ஒருவன் பிச்சை கேட்டு வருவான். கை, கால்களில் சலங்கை கட்டியிருப்பான். கையில் ஒரு பெரிய கயிற்றுச் சவுக்கு வைத்திருப்பான். அதனால், தன் உடம்பில் பளீர், பளீர் என்று அடித்தபடி, சலங்கை குலுங்க ஆடியபடி, ஒவ்வொரு கடையிலும் இனாம் கேட்பான்.'அவனுக்குப் பெயர்தான் கல்லுடிமங்கன். கம்பி மேல் வித்தை காட்டுகிறவனுக்கு கழைக் கூத்தாடி என்ற பெயர் போல, இதுவும் ஒரு வித்தைக்காரனுக்குப் பெயர். நாளடைவில் அது கல்லுளிமங்கன் ஆகி விட்டது.'எந்த அடிக்கும், திட்டுக்கும் அசைந்து கொடுக்காதவனை கல்லுளிமங்கன் என்று உதாரணம் சொல்கிறோம்...' என்றேன் நான்!***வருமானவரி துறையின் பிரிவு ஒன்றில், சென்னையில் பணியாற்றியவர், அந்தப் பெண் அதிகாரி... இனிமையாகப் பழகும் குணம் கொண்டவர்... இப்போது வேறு மாநிலத்தில் பணியில் உள்ளார். கடந்த வாரத்தில் சென்னை வந்தவர், போனில் என்னை அழைத்தார்...'ஏம்ப்பா மணி... 'அவுட் ஆப் சைட், அவுட் ஆப் மைண்ட்'ன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு... சென்னையிலிருந்து நான் மாற்றலாகிப் போன பின் கண்டுக்கவே இல்லையே என்னை... ஒரு போன் போட்டுக் கூட பேசக் கூடாதா?' என்றார்.'ஹி... ஹி...' என அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.... அதே நேரம், 'ஏன்... இந்த மேடம் போன் செய்திருக்கக் கூடாதா?' என என் மனம் சொன்னது...'சரி... மதியம் சந்திக்கலாம்... லென்ஸ் மாமாவையும் கூட்டி கிட்டு, சோழா ஓட்டல் லாபியில, 1:00 மணிக்கு வெயிட் பண்ணு... நான் வந்து விடுகிறேன்...' எனக் கூறி போனை வைத்தார்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னமேயே ஆஜரானோம் நானும், லென்ஸ் மாமாவும்... மிகச் சரியாக ஒரு மணிக்கு வேர்க்க, விறு விறுக்க ஓட்டலினுள் நுழைந்தார் அந்த பெண்மணி. எங்கள் அருகே வந்தவர், தன் கை கடிகாரத்தைப் பார்த்தபடி, 'லேட் இல்லையே?' என வினவினார்...'நோ... நோ... மேடம்...' என்றேன். 'உங்கிட்ட எவ்வளவு தடவை, 'மேடம்'ன்னு கூப்பிடாதேன்னு சொல்லி இருக்கேன்... 'மேடம்'ன்னு சொன்னா, வயதான பொம்பள போல இருக்கு... பேர் சொல்லிக் கூப்பிடு...' என்றார்.பாவம் போல முக பாவத்தை மாற்றிக் கொண்டு, 'சரி...' எனக் கூறி, அம்மணியின் தோற்றத்தை நோட்டம் விட்டேன்...நாற்பதைத் தாண்டி விட்ட அம்மணி, மைசூர் சில்க் புடவையில் இளமைத் தோற்றத்துடனேயே காட்சி அளித்தார். தலைமுடி அசாதாரணமான கருப்பில் இருந்தது... அன்று காலை தான் பார்லர் சென்று, 'டை' போட்டு இருப்பார் என நினைத்துக் கொண்டேன்!அந்த நேரத்தில், நண்பர் ரத்னமும் வந்து சேர, 'என்ன... டியூரென்ட்க்குப் போகலாமா?' எனக் கேட்டார். 'அடக் கண்றாவியே... பொட்டப் பொரியுற வெயிலிலேயே உற்சாக பானமா?' என நினைத்தபடி அவர்களைப் பின் தொடர்ந்தேன்.'டியூரென்ட்' என்பது சோழா ஹோட்டலில் உள்ள உ.பா., பாரின் பெயர். உள்ளே நுழைந்து அமர்ந்தோம். எனக்கு தர்பூசணி ஜூசும், மாமா மற்றும் ரத்னம் சாருக்கு இந்தியன் பிரீமியம் விஸ்கியும், மேடத்திற்கு, 'ப்ளடி மாரி' என்ற காக்டெய்ல் உ.பா.,வும் ஆர்டர் செய்தார்.'ப்ளடி மாரி' என்பது ரஷ்யன் ஓட்கா, தக்காளி ஜூஸ், சைனிஸ் சாஸ் ஒன்று, மிளகு, உப்பு, எலுமிச்சை கலந்த பானம்... பெண்கள் மிக விரும்பி அருந்தும், 'கலக்கல்' உ.பா., இது...வரி ஏய்ப்பு எப்படி நடக்கிறது என்பது பற்றி கருத்து பரிமாற்றம் செய்து கொண்டோம்... வரி ஏய்ப்பு நடப்பது தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியாமல், தம் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ள விதம் பற்றி மேடம் விவரித்தார்.பேச்சு எங்கெங்கோ சென்றது... மூன்று, 'லார்ஜ்' உ.பா., முடித்த நிலையில், ஓட்டலில் உள்ள சைனிஸ் ரெஸ்டரன்ட் சென்றோம் உணவு சாப்பிட... அது, 'பபே' ரக உணவகம்... அவரவர் பிளேட்டை தூக்கி உணவு எடுத்து சாப்பிட வேண்டும்...மேடமும், ரத்னம் சாரும், 'செகண்ட் சர்விங்' உணவு எடுக்கப் போக, லென்ஸ் மாமாவிடம், 'இது பைவ் ஸ்டார் ஓட்டல் தானே... இதற்கும் மேல், ஆறு, ஏழு நட்சத்திர ஓட்டல்கள் உண்டு என்கின்றனரே... உண்மையா?' எனக் கேட்டேன்.'உண்மை தான்' என்ற லென்ஸ் மாமா, 'ஓட்டல்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்குவது, அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை தான்!' என்று கூறி, நட்சத்திர அந்தஸ்து பெற, ஓட்டல்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக் கினார்...* மிக நல்ல முறையில் கட்டப்பட்ட, காற்றோட்டமுள்ள, குளியலறை வசதியுடன் கூடிய பத்து அறைகள் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஒற்றை அறையும், 100 சதுர அடியும், இரட்டை அறை, 120 சதுர அடியும் பரப்புடையதாய் இருக்க வேண்டும். டெலிபோன், ரெஸ்டரன்ட், வசதியான சமையலறை ஆகியவை இருக்க வேண்டும். வேலை செய்கிறவர்கள் சுத்தமான ஆடை (யூனிபார்ம்) அணிந்து, ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால், ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும்.* இரண்டு நட்சத்திர ஓட்டல் என்றால், ஒரு நட்சத்திர ஓட்டலில் உள்ள வசதிகளுடன், ஷவருடன் கூடிய குளியல் அறைகள், 25 சதவித அறைகளில் ஏர்கண்டிஷன் வசதி, விசாலமான லவுஞ்ச், ஒவ்வொரு தளத்திலும் டெலிபோன் வசதி, லாண்டரி வசதி ஆகியவை கொண்டிருக்க வேண்டும்.* மூன்று நட்சத்திர ஓட்டல்களில், குறைந்தபட்சம், 20 அறைகளாவது இருக்க வேண்டும். அவற்றில், 50 சதவிகித அறைகள் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும். இரண்டு மாடிகளுக்கு அதிகமாயிருந்தால் லிப்ட் வசதி இருக்க வேண்டும். இவை தவிர, புத்தக ஸ்டால், டிராவல் ஏஜன்ஸி, பாங்க் வசதி, ஒவ்வோர் அறையிலும் டெலிபோன் வசதி, 'ஏசி' செய்த டைனிங் ரூம், பர்மிட் ரூம், நவீன சமையலறை இத்தனையும் இருக்க வேண்டும். மேலும், இந்திய மற்றும் அகில உலக உணவு வகைகள் வழங்கும் வசதி, அனுபவம் மிக்க ஆங்கில அறிவுடைய பணியாளர்கள் போன்றவையும் பெற்றிருக்க வேண்டும்.* நான்கு நட்Œத்திர ஓட்டல்களில், மூன்று ஸ்டார் வசதிகளுடன், அயல்நாட்டு மொழி அறிவுடைய சில பணியாளர்கள், 24 மணி நேரமும் குழாயைத் திறந்தால் வெந்நீர், நடனம் ஆட வசதி கொண்ட பார் இருக்க வேண்டும். குறைந்த பட்ச அறைகளின் எண்ணிக்கை 25.* ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற அத்தியா வசிய தகுதிகள்: நீச்சல் குளம், கருத்தரங்கு நடத்த ஹால், பியூட்டி பார்லர், சலூன், 24 மணி நேர ரூம் சர்வீஸ் மற்றும் ஒற்றை அறை 180 சதுர அடியும், இரட்டை அறை, 200 சதுர அடியும் இருக்க வேண்டும்.நட்சத்திர ஓட்டல்களாய் இருந்தால், வருமான வரியில் சலுகை, அயல் நாடுகளில் விளம்பரம் செய்ய அனுமதி, இறக்குமதி வரிச் சலுகை, கடனுதவி ஆகியவற்றை இந்திய அரசாங்கம் வழங்குகிறது.இதனால் என்ன பயன்? அயல் நாட்டு சுற்றுலாப் பயணிகளால், நமக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணி பணம் தான்!'சரி, மாமா... ஆறு, ஏழு நட்சத்திர அந்தஸ்து பற்றி சொல்லலியே...' என்றேன்.திரு, திருவென விழித்தார்... அவருக்கே தெரியாது போலும்; தெரிந்தவர்கள், எனக்கு எழுதலாமே!***