அதிகபிரசங்கியா நீங்கள்?
புராணங்கள், உண்மையா, கட்டுக்கதைகளா என்று, கேட்போர் உண்டு. வியாச பகவான், பதினெட்டு புராணங்களை எழுதியிருக்கிறார் என்றும், வேதத்தை நான்காகப் பிரித்தார் என்றும், புராணங்கள் கூறுகின்றன. வேதத்தை பலர் அப்பியாசம் செய்து, வருகின்றனர். புராணங்களை படிப்பதால், பல நீதிக் கருத்துகளை நாம் தெரிந்து கொள்கிறோம். பிரம்மாவின் சபைக்கு, தேவலோகத்திலுள்ள அத்தனை பேரும் வந்திருந்ததுடன், பகவான் நாராயணனும், நாரதரும் வந்தனர். இவர்களை கண்ட பிரம்மா, ஓடி வந்து, நாரதரை மட்டும் வரவேற்று உபசாரம் செய்தார். நாராயணனை, கண்டுகொள்ளவில்லை. இதைக்கண்ட நவப்ரஜாபதிகள் எனப்படும், ஒன்பது பேர்களும், பிரம்மாவை வணங்கி, 'தாங்கள் இப்போது செய்த காரியம் சரிதானா? நாரதர் தங்கள் பிள்ளையல்லவா... அப்படியிருக்க, தகப்பனாராகிய நீங்கள், உங்கள் பிள்ளை நாரதரை வணங்கி, வழிபாடு செய்வது சரிதானா? சிறியவர் தானே, பெரியவருக்கு மரியாதை செய்வது வழக்கம். அப்படியிருக்க, பெரியவராகிய தாங்கள், சிறியவராகிய நாரதரை வணங்கியது சரிதானா...' என்று கேட்டனர். பிரம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. 'என்னுடைய செய்கையில், குற்றம் கண்டுபிடித்த நீங்கள், பூலோகத்தில், மனிதர்களாக பிறக்கக் கடவது...' என்று, சாபம் கொடுத்து விட்டார்.தேவலோகத்தில் குற்றம் செய்துவிட்டால், பூலோகத்தில், மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது தான், கடுமையான தண்டனை. பூலோகத்தில் மனிதன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே! அதனால், அப்படியொரு தண்டனை. பிரம்மாவினால், சாபம் அடைந்த நவப்ரஜாபதிகள், வேதனைப்பட்டு, நாரதரை சந்தித்தனர். 'எங்களுக்கு, இப்படி சாபம் வந்து விட்டதே... பூலோகத்தில் நாங்கள் எங்கே போய் வசிப்பது, என்ன செய்தால் சாப விமோசனம் கிடைக்கும்...' என்று கேட்டனர்.அதற்கு நாரதர், 'பூலோகத்தில், பரசுராம ஷேத்திரத்தில், கண்வ மகரிஷியின் ஆசிரமத்துக்கு அருகில், ஓர் அரசமரம் உள்ளது. அது, சகல சுபிட்சங்களையும் நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் உள்ளது...' என்றார். 'நீங்கள் சொல்லும் இடத்துக்கு போகிறோம். ஆனால், அங்கு, எந்த இடத்தில், நாங்கள் தங்குவது... நாராயணனைக் குறித்து தவம் செய்வதென்றால் தினமும், ஸ்நானம், அனுஷ்டானம் எல்லாம் செய்ய வேண்டுமே... அதற்கு வசதி இருக்க வேண்டுமே...' என்றனர். நாரதரும், 'இதோ என் மரவுரியை வீசுகிறேன். அது விழும் இடம், உங்களுக்கு ஏற்ற இடம். அங்கே பல புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. அதில், ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடித்து, தவத்தில் ஈடுபடுங்கள்...' என்று சொல்லி, மரவுரியை வீசியெறிந்தார்.பின், நவப்ரஜாபதிகள் அவ்விடத்தை அடைந்து, தவம் செய்து, சாப விமோசனம் பெற்றனர் என்பது கதை. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், மகான்கள், முனிவர்கள், மற்றும் பெரியோர் செய்யும் எந்த காரியத்தையும், குறை சொல்லி, குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது. அவர்கள் செய்யும் காரியத்துக்கு, ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும் என்று நினைத்து, வாய் மூடிக் கேட்டுக் கொள்ள வேண்டும். அதிக பிரசங்கித்தனமாக பேசினால், வம்புதான்.கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!தன்னை வணங்கும் மனிதனைத் தவிர, வேறு எந்த ஜீவராசியையும், சிரிக்கவோ, பிச்சை எடுக்கவோ தெரியாமல் படைத்த கடவுளின் உள் நோக்கம் என்ன?மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு பரிசை, கடவுள் நமக்கு கொடுத்திருக் கிறான்; அதுதான் ஆறாவது அறிவு. அந்த அளவுக்குத் தண்டனையையும், தந்தாகத்தானே வேண்டும். இந்தக் கேள்வியை, மனிதனைத் தவிர வேறு எந்த விலங்காவது கேட்குமா? வைரம் ராஜகோபால்