ஏ.வி.எம்., சகாப்தம் (4)
முதல் முறையாக, உலக திரைப்பட விழா, 1952ல், சென்னையில் நடந்தது. எல்லா திரைப்பட அரங்குகளிலும், தினமும் நான்கு காட்சிகள் என, பல மொழி படங்கள் திரையிடப்பட்டன.சென்னையில், முதல் முறையாக உலக திரைப்பட விழா நடந்ததால், அனைத்து தியேட்டர்களிலும், திரை உலகினர் அலை மோதினர். அந்த விழாவில், பைசைக்கிள் திவீஸ் என்ற இத்தாலி மொழி படம், ரஷோமான் மற்றும் யாகிவாரிஷோ ஆகிய ஜப்பான் மொழி படங்கள் இரண்டும் தான் மிகவும் பேசப்பட்டன. ரஷோமான் படத்தை, இந்திய திரை உலகமே வியந்து பாராட்டியது. இதை இயக்கியவர், உலக அளவில் பேசப்பட்ட, 'அகிரா குரஸோவா...'என் தந்தையை பார்க்க அலுவலகம் வந்தார், வீணை எஸ்.பாலசந்தர். இவர், ஏற்கனவே, பொம்மை மற்றும் கைதி திரைப்படங்களை இயக்கி இருந்தார். ரஷோமான் படத்தை, என் தந்தை, ஏற்கனவே ஜப்பானில் பார்த்திருந்தார், 'ரஷோமான் கதை பாணியிலேயே, நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால், ஏவி.எம்., பேனரில் எடுக்கலாம்...' என்றார், பாலசந்தர். கதையை கேட்டதும், தந்தைக்கும் பிடித்து போகவே, சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டு, சில நாட்களிலேயே, 1,000 அடி, 'பிலிம்'களில் காட்சிகளை எடுத்திருந்தார், பாலசந்தர். எப்போதுமே சில படங்களின் காட்சிகளை எடுத்த வரை போட்டு பார்த்து, அதில் ஏதாவது குறை இருந்தால், சரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார், என் தந்தை.தான் எடுத்த காட்சிகள் வரை போட்டு காட்டினார், பாலசந்தர். காட்சிகளை பார்த்தவர், 'நீங்கள் எடுத்த காட்சிகள் முழுவதையும் மீண்டும் படம் பிடிக்க வேண்டும். ஏனென்றால், என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, இப்போது பார்த்த காட்சிகளில் இல்லை. மேலும், நீங்கள் மிகவும் நம்பிய நடிகர், கல்கத்தா விஸ்வநாதனின் நடிப்பும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை...' என்றார், தந்தை.'ஒரு சிறந்த வங்காள நடிகர். மேடையிலும், திரையிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உண்டு...' என்று வாதிட்டார், பாலசந்தர்.என் தந்தை யோசித்து சொல்வதாக கூறி, இரண்டு நாட்கள் கழித்து, 'சிவாஜி கணேசனை நாயகனாக போட்டு எடுங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் சொன்ன கதை போல, படம் நன்றாக அமையும்... மேலும், ஜாவர் சீதாராமனை வைத்து கதையில் சிறிய மாற்றத்தை செய்யுங்கள்...' என்றார்.அவ்வாறே வேண்டிய மாற்றங்களை உடனே செய்து படமாக்கினார், பாலசந்தர். முதலில் அந்த படத்துக்கு, ஒருநாள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின், ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுத, சிவாஜிகணேசன் நடித்தபோது, அந்த நாள் என்று பெயர் சூட்டப்பட்டது. அன்றைய சினிமாவில் பாடல்கள் இல்லாமல், திரைப்படம் எடுப்பது மிகவும் அரிது. பாடல்களே இல்லாமல் உருவான, அந்த நாள் ஒளி அமைப்பிலும், கேமரா நகர்வுகளிலும் புதிய பாதையை வகுத்தது. வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில், வாழ்க்கை என்ற திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்ட தந்தை, பெண் என்ற திரைப்படத்தையும், மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுக்க தீர்மானித்தார். மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருந்த நடிகைகளான, வைஜெயந்தி மாலாவும், அஞ்சலிதேவியும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாயினர்.ஒரே கதையை, மூன்று மொழிகளிலும் திரைப்படம் எடுக்கும்போது, முதலில், தமிழ், தெலுங்கு, அதன்பின், இந்தி என்று தனித் தனியாக தான் எடுத்தார். இப்படி எடுக்கும்போது, நாட்கள், கால்ஷீட் மற்றும் செலவுகள் அதிகமானது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர், பெண் திரைப்படத்தை, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்க முடிவு செய்தார். தெலுங்கில் இதன் பெயர், சங்கம்; இந்தியில், லடுக்கி.வைஜெயந்தி மாலா மற்றும் அஞ்சலிதேவி இருவரும் கதாநாயகியர். மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு, அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருந்தவர்களும், சாதாரண கதாபாத்திரங்களுக்கு, பொதுவான நடிகர்கள் என்று ஒப்பந்தமாயினர்.இந்தி மொழி நன்கு தெரிந்தவரும், அப்போது, தமிழில் பிரபலமானவருமான, எம்.வி.ராமன் தான் இயக்குனர். மிகவும் குறுகிய கால்ஷீட்டில், இந்த படத்தை விரைந்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு படப்பிடிப்பை துவக்கினர்.தமிழில் ஒரு காட்சி படமாக்கப்படுகிறது என்றால், ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா மற்றும் அஞ்சலிதேவி கூட்டணியில் எடுக்கப்படுகிற, 'ஷாட்' ஓ.கே., ஆனதும், அதே, 'ஷாட்'டில் தெலுங்கு மற்றும் இந்தியில் அந்தந்த கதாநாயகனுடன், வைஜெயந்தி மாலாவும், அஞ்சலிதேவியும் நடிப்பர்.முதலில் இந்த படப்பிடிப்பு முறை பார்ப்பதற்கு ஆர்வமாகவும், வித்தியாசமாகவும், செலவும் மிச்சமாவதை போல் தோன்றியது. ஆனால், இந்த முறையில் திரைப்படம் எடுப்பதில், சிரமங்கள் அதிகமாகின.ஒரு காட்சியை படம் பிடிக்கும்போது, சம்பந்தப்பட்ட மூன்று மொழி நடிகர் - நடிகையர்களும் ஒரே நேரத்தில் செட்டில் இருக்க வேண்டிய நிலை. தவிர்க்க இயலாமல், யாராவது வர முடியாமல் போனால், அனைத்து பணிகளும் நின்று விடும். இப்படி தான், பெண் படப்பிடிப்பில் பிரச்னைகள் உருவாகின.இயக்குனர், எம்.வி.ராமனும், 'என் ஒப்பந்த தேதி முடிந்து விட்டது. ஒப்பந்த நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த வேண்டுமானால், எனக்கு அதிகப்படியான சம்பளம் வேண்டும்...' என்று கேட்க ஆரம்பித்தார்.— தொடரும்.ஏவி.எம்.குமரன்