உள்ளூர் செய்திகள்

ஆசிர்வாதம்!

வழக்கம் போல, அதிகாலை, 3:00 மணிக்கு விழித்து விட்டான், செல்வராஜ். பல ஆண்டு பழக்கம். இத்தனைக்கும் அவன் அம்மா, நள்ளிரவு, 12:00 மணி வரை இருமியபடி, புரண்டு படுத்திருந்தாள். இரண்டு முறை வெந்நீர் சுட வைத்து குடிக்கக் கொடுத்தான். பிறகு தான், இருமல் அடங்கி, துாங்க ஆரம்பித்தாள். ஆஸ்துமாவும், குடிகார புருஷனுடனும், பல ஆண்டுகள் போராடி குடும்பம் நடத்தியவள். இவனையும் பெற்று, நாலு வீடுகளில், வேலைக்காரியாக, கை விரல்கள் தேய துணிகள் துவைத்து, பாத்திரம் கழுவினாள். மகன் பலமுறை வற்புறுத்தியதால், கடந்த மூன்று ஆண்டுகளாக, வீட்டில் ஓய்வில் இருக்கிறாள். ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்தாள், அம்மா. 'இந்த நேரத்தில் விளக்கு போட்டு, குளிக்க வெந்நீர் போட்டுக் கொண்டிருந்தால், அம்மா, கண் விழித்து விடுவாள். அவளின் துாக்கத்தை கெடுக்க வேண்டாம்...' என்று நினைத்தான்.விளக்கின் வெளிச்சத்தில், பீரோவைத் திறந்து, சட்டை, பேன்ட் எடுத்து, பையில் திணித்தான். 'ஹேங்கரில்' இருந்த சட்டையை எடுத்து அணிந்து, வண்டி சாவியுடன் வாசல் கதவைத் திறந்து வெளியேறினான், செல்வராஜ். ஆறு போர்ஷன்கள் கொண்ட வீடு அது. குடியிருப்போரின் இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் வராண்டாவின் சுவரோரம் இருந்தன. அவனது, டி.வி.எஸ்., பிரதான வாசலின் இரும்பு கேட் அருகே இருந்தது. ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து கேட்டின் பூட்டைத் திறந்தான். வண்டியைத் தெருவில் இறக்கிய பின், மீண்டும் கேட்டை மூடி, உள்பக்கமாக பூட்டி, சாவியை உள்ளே வீசினான். குளிர் உடலை துளைத்தது. வண்டியை உயிர்ப்பித்து, வெறிச்சோடிய சாலையில், முகப்பு விளக்கின் ஒளியில், பனியை ஊடுருவி பயணித்தான், செல்வராஜ்.'இன்னிக்கு, அண்ணன்கிட்ட விஷயத்தை சொல்லிடணும்...' என்று, அவன் மனம் நினைக்கும்போதே, ராஜபாண்டியின் முரட்டு மீசையும், சிவந்த கண்களும், நெற்றியில் பளிச்சென தெரியும் சந்தன குங்குமப் பொட்டும், கரகரப்பான குரலும் கண்ணெதிரே வந்தது. அம்மாவுக்கு சுமையாக அவள் உழைப்பில் சாப்பிட பிடிக்காமல், 10ம் வகுப்பு முடித்த கையோடு, இனி படிக்கப் போவதில்லை என முடிவெடுத்தான். 10 ஆண்டுகளாக, ராஜபாண்டியின் ஹோட்டலில் தான் வேலை செய்கிறான், செல்வராஜ். காலம் உருண்டோட, இப்போது அந்த ஹோட்டலில், 'ஆல் இன் ஆல்' அவன் தான். எந்த வேலை செய்யவும் தயங்க மாட்டான். ராஜபாண்டி அவசரமாக வெளியே சென்றிருக்கும் சமயங்களில், கல்லாவில் இருப்பதும் செல்வராஜ் தான். அவன் பாத்திரங்களைக் கழுவினாலும் சுத்தமாக இருக்கும். கல்லாவில் அமர்ந்தாலும், கை சுத்தம். ராஜபாண்டி திட்டினாலும், கோபம் கொள்ளாமல் கூடவே இருந்தான். ஆனால், இன்று அவன் சொல்லப் போகும் செய்தியை எப்படி எதிர்கொள்வாரோ, எப்படி ஏற்றுக் கொள்வாரோ? பல சாலைகளைக் கடந்து, செல்வராஜின் டி.வி.எஸ்., 'மீனாட்சி உணவகம்' என்ற பெயர் பலகையுடன் இருந்த கடையின் முன் நின்றது. சாப்பாட்டு மேஜைகள், நாற்காலிகள் ஓரமாக ஒதுக்கப்பட்டிருந்தன. நடுவில் இரண்டு கோணிப்பைகளில், தக்காளி, வெங்காயம், காய்கள் இருந்தன. 18 முதல் 25 வயதுடைய இரண்டு பேர், வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தனர். இவர்களின் சொந்த ஊர், மதுரை. இங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். செல்வராஜை பார்த்ததும், 'வணக்கம்ண்ணே...' என்றனர். பாத்திரத்தில் வெந்நீரை கொதிக்க வைத்து, பின்பக்கம் இருந்த குளியலறைக்குள் நுழைந்து பல் துலக்கினான். மீண்டும் சிந்தனை, 'அண்ணனிடம் சொல்லிவிட வேண்டும். என்ன சொல்லப் போகிறாரோ?' 'தனியாக ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும்...' என்று, ஓர் ஆண்டாகவே மனதிற்குள் எண்ணம். அதற்காக கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வைத்துள்ளான்.இத்தனை ஆண்டு அனுபவத்தில் எதை எப்படி செய்ய வேண்டும் என்று அத்துபடி. இங்கே வாடிக்கையாக சாப்பிட வரும் சிலரின் பழக்கமும் இருக்கிறது. வங்கியில் பணிபுரியும் லோகேஸ்வரன், 'பேங்க் லோனுக்கு நான் ஏற்பாடு பண்றேன். நான் சொல்ற சர்டிபிகேட், ஆதார் கார்டு எல்லாம் ரெடி பண்ணிக்க...' என்று சொல்லி, ஆறு மாதங்கள் ஆகிறது. இதே சாலையில் எதிர்பக்கம் சில கடைகள் தள்ளி, ஜாகீர் டெய்லர் கடை இருக்கிறது. அவரும் இங்கே வாடிக்கையாளர். ஜாகீர் அண்ணன், தன் கடையை, காலி செய்கிறார். நல்ல இடம், மார்க்கெட் அருகிலேயே இருப்பதால் எப்போதும் கூட்டம் வரும். ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைத்தால், 'பிக் - அப்' ஆகிவிடும். அம்மாவை இன்னும் நன்றாக கவனித்துக் கொள்ளலாம். 'நல்ல விஷயம் தான் செல்வா... எத்தனை காலத்துக்குத்தான் இன்னொருத்தர்கிட்ட சம்பளத்துக்கே இருப்ப? உன் அப்பந்தான் குடிகாரனா, பொறுப்பில்லாம போய்ச் சேர்ந்துட்டான்.'நீயாவது நல்லா வந்து, சொந்தங்களுக்கு மத்தியில் உன் அம்மாவை தலை நிமிர்ந்து நடக்க வை. ராஜபாண்டிகிட்ட சொல்லிட்டியா?' என்று கேட்டார், மளிகை கடை முத்துவேல். 'இன்னும் இல்லைண்ணே, என்ன சொல்லுவாரோன்னு பயமா இருக்கு...' 'நல்ல வேலைக்காரன், கைய விட்டுப் போறான்னா யாருக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். அதெல்லாம் பார்த்தா நீ முன்னேற வேணாமா? ஹோட்டல்ல வேலை செய்யறேன்னு சொல்றதை விட, சொந்தமா ஹோட்டல் வெச்சிருக்கேன்னு சொன்னா, பொண்ணு கொடுக்கவும் முன் வருவாங்க.'நீ தைரியமா பேசு. உனக்கான மளிகைச் சாமான்களை எல்லாம் என்னால எவ்வளவு கொடுக்க முடியுமோ செய்யறேன்...' என்று, ஊக்கப்படுத்தினார்.இன்று, இதுபற்றி பேசிவிட வேண்டும். பேச்சை எப்படி ஆரம்பிப்பது, எப்படியெல்லாம் கொண்டு செல்வது என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்தபடி குளித்து, தயாரானான். ஒவ்வொருவராக வந்து, தங்கள் வேலையைப் பார்த்தனர். அவர்களை மேற்பார்வை பார்த்தபடி, சுறுசுறுப்புடன் வேலைகளை கவனித்தான், செல்வராஜ். ராஜபாண்டி, 5:00 மணிக்கு வந்து, சாமி படங்களுக்குப் பூ வைத்து, பூஜை போட்டு வணங்கினார். சாலையில் மக்கள் நடமாட்டம் மெல்ல மெல்ல கூடியது. ஹோட்டலுக்குள் இருந்து சாம்பார், சட்னி மணம் கமழ ஆரம்பித்தது. அப்போது, கடைக்குள் நுழைந்து கல்லா முன் வந்து நின்றார், ராஜாத்தி அக்கா. 10 ரூபாயை எடுத்து நீட்டினார், ராஜபாண்டி. வாங்கி கொண்டு, அவர் தலையில் கையை வைத்து, கண்களை மூடி ஆசிர்வதித்தார். ராஜாத்தி அக்கா, ஒரு திருநங்கை. எப்போதும் இந்தப் பகுதியில் தான் சுற்றிக் கொண்டிருப்பார். காலையில் கடைகளுக்கு வருவார். பணம் கொடுப்பவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வார். திருநங்கையிடம் ஆசிர்வாதம் பெற்றால் அந்த நாள் சிறப்பாக இருக்கும், வியாபாரம் நன்றாக நடக்கும் என்று நம்பிக்கை. ராஜபாண்டியை ஆசிர்வாதம் செய்து, நகர முயன்ற ராஜாத்தியை, ''அக்கா... இருங்க,'' என்றபடி வேகமாக வந்து, 10 ரூபாயை கொடுத்து தலை வணங்கினான், செல்வராஜ். ''என்னா ராஜு, பொறந்த நாளா?'' என்று கேட்டார், ராஜாத்தி. ''இல்ல, வேற. நினைச்சது நல்லபடியா முடியணும்ன்னு ஆசிர்வாதம் பண்ணுங்க,'' என்றான். கிண்டலாக, ''என்ன கல்யாணமா? 10 ரூபாய்லயே மேட்டரை முடிச்சுடலாம்ன்னு பார்க்கிறயா?'' என்றார். ''நீங்க முதல்ல ஆசிர்வாதம் பண்ணுங்க,'' என்றான், செல்வராஜ். ''என்ன விஷயம்ன்னு சொன்னாதானே... சரி விடு,'' என்று கண்களை மூடி, அவன் தலை மீது கை வைத்து பிரார்த்தனை செய்தார், ராஜாத்தி.காலை பரபரப்பு குறைந்து, 10:00 மணிக்கு மேல், செல்வராஜ் விஷயத்தை சொல்லி முடித்ததும், ராஜபாண்டி முகம் சிறுத்துப் போனது. ''ஏன்டா, இங்கே உன்னை நான் நல்லா வெச்சுக்கலையா? சம்பளம் இன்னும் வேணும்ன்னா கேளு... உனக்கு அனுபவம் பத்தாது. சொந்தமா கடை வைக்கிறது சும்மா இல்ல. காசு கையில வர்ற மாதிரி தான் இருக்கும்.''மளிகை கடை ஆரம்பிச்சு காய்கறி, சிலிண்டர் அது இதுன்னு 'ரொட்டேஷன்'லயே போயிடும். பார்த்துட்டு தானே இருக்கே, தினமும் தலைவலியோடு நான் வீட்டுக்குப் போறதை...''திடீர்னு இப்படி சொன்னா எப்படி? உன்னை நம்பிதானே எல்லாத்தையும் விட்டிருக்கேன். ஒரு மாசத்துல போறேன்னா, இத்தனை வருஷமா, உனக்கு வேலை கத்துக் கொடுத்ததுக்கு என்ன மரியாதை?'' என்று, கேட்டார். ''கடையை காலி செய்கிறார், டெய்லர். நல்ல இடம், இப்போ விட்டா பிடிக்க முடியாது,'' என்றான், செல்வராஜ். ''டெய்லர் கடை ரொம்ப சின்னதாச்சே. நாலு பேருக்கு மேல உட்கார்ந்து சாப்பிட முடியாது. அங்கே கடை ஆரம்பிச்சு எப்படி நடத்துவே? செய்யறதை ஒழுங்கா செய்யணும். கொஞ்ச நாள் பொறு. நல்ல இடமா நானே பார்த்து கொடுக்கறேன்,'' என்று, நைச்சியமாக பேசினார். ''இல்லண்ணே... இப்போதைக்கு என் சக்திக்கு அந்த இடம் போதும். சின்னதா தான் ஆரம்பிக்கப் போறேன்,'' என்றான், செல்வராஜ். ''சொல்றதைப் புரிஞ்சுக்காம பேசற. வெளியே இருக்கிறவன் எதாவது சொல்லி உசுப்பேத்திட்டு போய்டுவான். நாளைக்கு உனக்கு ஒரு கஷ்டம்ன்னா, ஒருத்தணும் வர மாட்டான். சரி, பார்க்கலாம். வேலையைப் பார்,'' என்றார். அவனைப் பார்க்கும் போதெல்லாம் முகம் கடுகடுப்பானது. அவன் மீதுள்ள கோபத்தை மற்றவர்களிடம் காண்பித்தார். இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த கண்ணாமூச்சி தொடர்ந்தது. அவர் இல்லாதபோது, செல்வராஜை சூழ்ந்து கை குலுக்கினர், அங்கு வேலை செய்த பையன்கள்.''நீ ஆரம்பிண்ணே... நானும், உன் கடைக்கே வந்துடறேன்,'' என்றான், ஒருவன். ''அதெல்லாம் வேண்டாம்டா. இப்பவே என் மேல கோபமா இருக்கார். உங்களையும் சேர்த்து கூட்டிட்டுப் போய்ட்டேன்னு சொல்றதுக்கா,'' என்றான், செல்வராஜ்.நான்கு நாட்களுக்கு பிறகு, ''சரி, நீ முடிவெடுத்துட்ட. பட்டா தான் புரிஞ்சுப்ப. உன்னிஷ்டம், எப்படியோ செய். ஆனா, இங்கே வேலை செஞ்சுட்டு, இதே இடத்துல எதிரில் கடை போடறேன்னு சொல்றியே... நீ நல்லா வருவடா,'' என்று, சபித்தார். ''ராஜபாண்டி, என்ன இப்படி சொல்ற. இதே இடத்துல இன்னும் ரெண்டு ஹோட்டல் இருக்கு. அவங்கவங்களுக்கு வர்ற ஆளுங்க வந்துட்டுத்தானே இருக்காங்க? அந்த மாதிரி அவனுக்கு, நாலு பேரு வந்தா, உனக்குன்னு, பத்து பேரு வரப் போறாங்க.''நல்ல பையன், சொந்தமா தொழில் செய்ய ஆசைப்படறான். நீதானே முன்னாடி இருந்து, வழி காட்டி, மனசார ஆசிர்வாதம் பண்ணணும்,'' என்றார், பக்கத்து கடைக்காரர். ''இவன் நல்லா வந்தா எனக்கும் சந்தோஷம் தான். எனக்கு ஒண்ணும் பொறாமை எல்லாம் இல்ல. சரி, வெக்கட்டும்,'' என்றார், அரை மனதுடன். அதன்பின், ஹோட்டல் வைப்பதற்கான வேலைகள் மளமளவென்று ஆரம்பித்தன.அம்மாவின் நினைவாக, 'நாகா உணவகம்' என்று பெயரிட்டான். ராஜபாண்டியிடம், ''ஹோட்டலை, நீங்க தான் திறந்து வைக்க வேண்டும்,'' என்றான், செல்வராஜ்.பெயருக்கு வந்து போலியாகச் சிரித்து, கடையைத் திறந்து வைத்தார், ராஜபாண்டி. மூன்றாம் நாள், காலையில் அங்கே வந்த ராஜாத்தி அக்கா, கண்கள் விரிய மகிழ்ச்சியில், ''டேய் ராஜு, சொந்த கடை வெச்சுட்டியா?'' என்றார். ''ஆமாக்கா. நீ எங்கே திடீர்னு காணாமப் போயிட்ட?'' என்றான், செல்வராஜ். ''எங்க ஆளுங்க ஹைதராபாத்ல இருக்காங்க. ரெண்டு மாசமா அங்கே தான் இருந்தேன்.'' ''அங்கே என்ன பண்ணீங்க?'' ''ஹைதராபாத் கலெக்டரா இருந்தேன். கேட்கற பாரு கேள்வி. எங்கள மாதிரி ஆளுங்கள், ஒரே இடத்துல இருந்தா, வம்பு பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அதான் இங்கே நாலு மாசம். அங்கே ரெண்டு மாசம். பாம்பேல ரெண்டு மாசம்ன்னு திரிஞ்சுட்டே இருப்போம்,'' என்றார், ராஜாத்தி. ''உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் இப்போ பெரிய பெரிய வேலையில் இருக்கறதா, 'டிவி'யில காட்டறாங்களே,'' என்றார், செல்வராஜ் கடையின் தோசை மாஸ்டர்.''இருக்காங்க. அப்படி போறவங்க ஆயிரத்துல ஒருத்தர் தான். அந்த இடத்துக்கு வர்றதுக்கு அவங்க பட்ட அவஸ்தை கொஞ்சமா இருக்காது. மத்தவங்க எல்லாம் எவ்வளவு லோல்படறோம்ன்னு எந்த, 'டிவி'யிலும் காட்ட மாட்டானுங்க...''அந்த கர்மத்தை விடு, ராஜு. உன்னை இப்படி சொந்த ஹோட்டல்ல பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. நீ, நல்லா வருவ. அம்மாவை நல்லா பார்த்துக்க. வர்றவளையும் நல்லா பார்த்துக்க, சரியா?'' என்றார், ராஜாத்தி.''சரிக்கா, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க,'' என்று சொல்லி, 50 ரூபாயை நீட்டினான், செல்வராஜ்.''அய்ய, காசு எதுக்கு? என் தம்பி நீ. என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு,'' என்றபடி தலையில் கை வைத்து, கண்களை மூடி பிரார்த்தித்தார்.கலங்கிய கண்களுடன், ''தம்பி கொடுக்கறேன் வாங்கிக்கங்க,'' என்று கையில் திணித்தான், செல்வராஜ். ''ம்ஹூம்... சரி, 10 ரூபாய் கொடு,'' என்றார். ''நம் ஹோட்டல், 'டேஸ்ட்' எப்படி இருக்குன்னு, சாப்பிட்டு சொல்லுங்க?'' என்றான், செல்வராஜ். ''அதுக்கென்ன, இவ்வளவு சீக்கிரம் சாப்பிட மாட்டேன். எடுத்து வை, வசூலை முடிச்சுட்டு வந்து சாப்பிடறேன்,'' என்றபடி நகர்ந்தார். திடீரென, ''ராஜாத்தி அக்கா... அக்கா...'' என்று அழைத்தவாறு ஓடினான், செல்வராஜ். ''என்ன ராஜு?'' ''என் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்துடறியா?''''என்ன தம்பி தமாஷ் பண்ற!''''தமாஷ் இல்லக்கா. சப்ளை, கல்லா ரெண்டையுமே நான் பார்க்க வேண்டியிருக்கு. நீ கல்லாவில் உட்கார்ந்து, 'டோக்கன்' கொடுத்து, காசை வாங்கி போடு. விருப்பம் இருந்தா, 'சப்ளை' பண்ணு.''''நான் கடையில இருந்தா சரியா வராது, ராஜு. நாலு பேர் சாப்பிட வர்ற இடம். எல்லாரும் ஒரே மாதிரியாவா இருப்பாங்க. சிலர் யோசிப்பாங்க, சிலர் சங்கடப்படுவாங்க.''''நீ என்ன சேத்துல புரண்டுட்டு வந்து, அழுக்கோடவா, 'சப்ளை' பண்ணப் போற? தலை நிறைய பூ வெச்சுக்கிட்டு, சினிமாவுல வர்ற கிராமத்து, 'ஹீரோயினி' மாதிரி இருக்க.''ராஜபாண்டி அண்ணன்கிட்ட தனியா போறேன்னு சொன்னதும், அப்படியே மாறிட்டார். காலம் முழுக்க அவர்கிட்ட வேலைக்காரனாவே இருக்கணும்ன்னு நினைக்கிறார் போல. அது தப்பு தானே?''இப்ப நீங்க ஆசிர்வாதம் செஞ்சதும், காலம் முழுக்க உங்களுக்கு, 10 ரூபாய் கொடுத்து, பிச்சை எடுக்கிறவங்களாவே தான் நானும் வெச்சுருக்கப் போறேனோன்னு நினைச்சேன். இதுவும் தப்புதானே? நீங்க, என் ஹோட்டலில் வந்து சாப்பிட வேணாம். உங்களுக்கு, என் கடையில் வேலை. வாங்க,'' என்றான், செல்வராஜ். ''இன்னிக்கேவா?'' என்று திகைத்தார், ராஜாத்தி.''இந்த நிமிஷத்தில் இருந்தே,'' என்று, ராஜாத்தி கையைப் பிடித்து அழைத்து சென்றான், செல்வராஜ். நெகிழ்ந்த குரலில், ''தம்பி...என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கறதா சொல்லிட்டு, இப்போ நீ, என்னை ஆசிர்வாதம் செஞ்சுட்டியே,'' என்றார், ராஜாத்தி.- கே. யுவராஜன்வயது: 45படிப்பு: பிளஸ் 2பணி: 'அலை' என்ற பழங்குடியினர் பிள்ளைகளுக்கான தொண்டு அமைப்பு நிறுவி, சேவை செய்வது.சொந்த ஊர்: ஆரணி. இதுவரை, நுாற்றுக்கும் மேற்பட்ட, குழந்தைகளுக்கான அறிவுரை கதை மற்றும் சிறுகதைகளும் எழுதியுள்ளார்.பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வியறிவு கிடைக்க செய்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி சிறந்த நிலைக்கு கொண்டு வருவதே லட்சியம்கதைக்கரு பிறந்த விதம்: கேலி மற்றும் அச்சுறுத்தல்களுக்கு நடுவே, இச்சமூகத்தில் போராடி, வாழ்ந்து வரும், மூன்றாம் பாலினத்தவர் சிலரிடம் பேசியபோது, உருவான கதைக் கரு இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !