நூற்றாண்டு நாயகன் ஜெமினி கணேசன்! (3)
பேச்சில், சிரிப்பில், செயலில், வாழ்வில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவராலும் கொண்டாடப்பட்ட கலைஞர் தான், ஜெமினி கணேசன்.'காதல் மன்னன்' என்று அழைக்கப்பட்ட, ஜெமினி கணேசன், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொண்டது, சூழ்நிலையின் நெருக்கடி தான். திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவில் தான், அவர் இருந்தார் என்பதே நிஜம்! தான் படித்த கல்லுாரியிலேயே, பேராசிரியராக சேர்ந்தார், ஜெமினி. அவருக்கு, அலமேலு என்ற ஆச்சாரமான, குடும்பத்துக்கேற்ற குணவதியை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார், அம்மா கங்கம்மாள். தன் மேல், அம்மா வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்க விரும்பவில்லை. 'இந்த வேலையில் இருந்து கொண்டே, எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்பினேன். அதற்குள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துட்டியேம்மா...' என்றார்.இதைக் கேட்டு கொண்டிருந்த அவரது மாமனார், 'மாப்ளே... நான், உங்களை டாக்டருக்கு படிக்க வைக்கிறேன்...' என்று, வாக்கு கொடுக்க, மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு சம்மதம் சொன்னார், கணேசன்.ஜூன் 30, 1940ல், கணேசன் - பாப்ஜி திருமணம், இனிதே நடந்தது.மகிழ்ச்சி, வாசல் வழியாக நுழையும்போது, துயரம், ஜன்னல் வழியாக நுழையும். கணேசன் விஷயத்திலும் அப்படித்தான். திருமணமான சில மாதங்களில், மாமனார் காலமாகி விட்டார். அதனால், கணேசனின் டாக்டர் கனவு கலைந்தது. அந்த கனவை, தன் மகள்கள், கமலா செல்வராஜ், ஜி.ஜி., ஸ்ரீதரன் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். அடுத்து, அவரது கனவு, சினிமா. ஜெமினி நிறுவனத்தில், வேலை கேட்டு விண்ணப்பித்தார்.ஒரு கோடை விடுமுறையில், புதுக்கோட்டை இல்லத்திற்கு கணேசன் சென்றிருந்த போது, இன்ப அதிர்ச்சி தரும் கடிதம் ஒன்று, ஜெமினி நிறுவனத்திலிருந்து வந்திருந்தது.ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிலையில், கல்லுாரி விரிவுரையாளர் வேலைக்கு, 'குட் பை' சொன்னார். அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்று, ஆகஸ்ட், 1946ல், ஜெமினி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளர், கே.ராம்நாத்துக்கு, உதவியாளராக சேர்ந்தார், கணேசன். மாதச் சம்பளம், 150 ரூபாய். 'என்னுடைய கனவு, கேமராமேன் அல்லது இயக்குனர் ஆவது...' என, ராம்நாத்திடம் கூறினார். 'ஒளிப்பதிவு, இயக்கம் இவை எல்லாவற்றையும் விட, உனக்கு, நடிப்புத் துறையில் தான் எதிர்காலம் இருக்கிறது. நல்ல நடிகராக, ஒரு வழி சொல்கிறேன். இங்கே, நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவர், ஆணோ, பெண்ணோ, அவர்களை நன்றாக பார். அவர்களுடன் பேசி, குரல், நடை, உடை, பாவனைகளை கவனி. இதுவே, உனக்கு நடிப்பு பயிற்சி மாதிரி அமையும்...' என்றார், ராம்நாத். ராம்நாத்தின் சிபாரிசில், 'ஜெமினி புரொடக் ஷன் எக்சிகியூட்டிவ்' உத்தியோகத்தின் ஒரு பகுதியான, 'காஸ்டிங்' உதவியாளர் பொறுப்பு, கணேசனிடம் கொடுக்கப்பட்டது.அன்று முதல், ஜெமினி ஸ்டுடியோவில் நடிக்க வாய்ப்பு தேடி வருபவர்கள், முதலில், கணேசனை சந்திக்க வேண்டும். அவரிடம் விபரம் கூறி, நடித்துக் காட்டி, புகைப்படங்கள் கொடுத்து செல்ல வேண்டும். அவர்களின் தகுதி, திறமைகள் குறித்து, விண்ணப்பங்களில் பின் குறிப்பு எழுதி, 'பைலில்' வைத்து அனுப்ப வேண்டும். இது தான், கணேசனின் வேலை.இப்படி, இவரிடம் நேர்காணலுக்கு வந்தவர்களில், சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி, கே.பாலசந்தர், சாவித்திரி போன்ற ஜாம்பவான்களும் உண்டு.ஒருநாள், மூன்று அழகிய இளம்பெண்கள், கணேசனின் வரவேற்பறையை கடந்து சென்றனர். நல்ல உடலமைப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருந்தனர்.அப்போது அங்கு வந்த, சுவராஜ் என்ற காஷ்மீர் வாலிபன், 'கணேஷ்... இவர்கள் தான், திருவாங்கூர் சகோதரிகள் - லலிதா, பத்மினி, ராகினி. அருமையாக நடனமாடக் கூடிய அழகிகள். பிரபல நடன மேதை, உதயசங்கர் எடுக்கும் நாட்டிய படமான, கல்பனாவில் என்னுடன் நடிக்கின்றனர்...' என்றார். 'பெண்கள் விஷயத்தில், நான் ரிஷ்ய சிருங்கர் மாதிரி, ரொம்ப சங்கோஜி. மாமன் மகள் என்ற படத்தில், இயக்குனர், ஆர்.எஸ்.மணி கேரக்டரை போல், பெண்கள் என்றாலே, காத துாரம் ஓடி ஒளிவேன்...' என்றார், கணேசன். பெண்கள் என்றாலே ஒதுங்கிப்போன, சங்கோஜியான, கணேசனை, ஒரு நடிகை, துரத்தி துரத்தி காதலிக்கப் போகிறார் என்பது, அப்போது அவருக்குத் தெரிய நியாயமில்லை. ஜெமினி நிறுவனம், மிஸ் மாலினி என்ற படத்தை எடுக்க துவங்கியது. அந்த படத்தின், 'ஹீரோ' வேடத்திற்கு நடிகரைத் தேடும்போது, கணேசனுக்கு, 'மேக் - அப் டெஸ்ட்' பார்த்தனர்.'நாம, 'ஹீரோ' ஆக போகிறோம்...' என்று, உற்சாகத்தில் இருந்தார், கணேசன். ஆனால், மிஸ் மாலினி படத்தில், அவருக்கு, சிறிய வேடம் தான் கிடைத்தது. ஜாவர் சீதாராமனின் உதவியாளராக, உதவி இயக்குனர் வேடத்தில் நடித்தார். இது தான், அவரது முதல் படம். இதில் தான், ஆந்திராவில் புயல் கிளப்பிய பிரபல நடிகை புஷ்பவல்லி, மாலினி வேடத்தில் நடித்தார்.அந்த ஆந்திர புயல், ஜெமினி கணேசன் வாழ்வில் கரை ஒதுங்கி, காதல் சூறாவளி கிளப்பியது— தொடரும்