சந்திரபாபு (17)
திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய காலத்தில் இருந்தே, தன் குடும்பத்தினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை, சந்திரபாபு. புகழ் பெற்று விளங்கிய சமயத்தில் கூட, அவரது வீட்டில் சினிமாக்காரர்களைத் தான் பார்க்க முடியுமே தவிர, குடும்பத்தினரைக் காண முடியாது. சில காலம் பெற்றோரைத் தன்னுடன் வைத்திருந்தார். ஆனால், அவர்களையும் ஒரு நாள், கோபத்தில், வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். காரணம், அப்போது, சென்னையில், பீமண்ண முதலி கார்டன் தெருவில், சந்திரபாபு வசித்த வீட்டின் கீழ்த்தளத்தில், ஒரு மாதம் குடியிருந்தார், இந்தியாவின் துணை ஜனாதிபதி, வி.வி.கிரி. மாமன் மகள் படத்தில், சந்திரபாபு நடித்துக் கொண்டிருந்த சமயம் அது... கிரி வீட்டை காலி செய்து போன சில நாட்களில், அங்கே, இன்னொரு குடும்பம் குடி வந்தது. சந்திரபாபுவின் குடும்பத்தினருக்கு அவர்களை அறவே பிடிக்கவில்லை. ஆனால், அவ்வீட்டில் இருந்த ஓர் இளம் பெண் மட்டும், சந்திரபாபு வீட்டைக் கடந்து போகும் போதெல்லாம், தவறாமல் வணக்கம் சொல்வாள். பதிலுக்கு, சந்திரபாபுவும் வணக்கம் சொல்வார்.ஒரு நாள், சந்திரபாபுவுக்கு நல்ல காய்ச்சல்; விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பெண், ஓர் அனுதாபத்தில், சந்திரபாபுவைப் பார்த்து விசாரித்து விட்டுப் போகலாம் என்று, சந்திரபாபுவின் அறைக்கு வந்து பேசிவிட்டுத் திரும்ப, அங்கே சூறாவளி கிளம்பியது.'என் பையனை மயக்க வந்திட்டியா...' என்று, சந்திரபாபுவின் பெற்றோர் சீற, அங்கிருந்து அழுது கொண்டே வெளியேறிய அந்தப் பெண், தன் வீட்டினரிடம், நடந்ததைச் சொல்லி விட்டாள்.'எங்க பெண்ணைப் பார்த்து, எப்படி நீங்க அப்படிச் சொல்லலாம்...' என்று அவர்கள் கீழிருந்து உரக்கக் கத்த, பதிலுக்கு இவர்கள் மாடியில் இருந்தபடியே கத்த, வெளியே கூட்டம் கூடிவிட்டது. சந்திரபாபுவுக்கு மெல்ல விஷயம் விளங்க, கோபம் தலைக்கு ஏறியது.தன் தந்தையிடம் சென்று, 'நீங்க பெரிய தேச பக்தர்; வயதானவர்; அனுபவசாலி. அம்மாவும், அக்காவும் அப்படிப் பேசலாமா... பேசினாலும் அதைத் தடுத்திருக்க வேணாமா... பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நீங்களும் கத்துவதா...' என்று கோபப்பட்டார்.தன் அம்மாவிடம் சென்று, 'உன் பெண்ணை இப்படி ஒருத்தி சொன்னால், உனக்கு எப்படி இருக்கும்...' என்று கேட்டார்.தன் அக்காவிடம் சென்று, 'நீயும் ஒரு பெண்; அவளும் ஒரு பெண். ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணோட மனசை நோக வைக்கலாமா...' என்று கத்தினார்.அத்துடன், அந்தப் பெண்ணை மேலே வரச் சொல்லி, அவரிடம் தன் பெற்றோரையும், சகோதரியையும் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அந்தப் பெண் கீழே இறங்கிச் செல்ல, 'அவளைப் பின்பற்றி, நீங்களும் இப்போதே இங்கிருந்து போய் விடுங்கள்...' என்று, தன் பெற்றோரையும், சகோதரியையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார், சந்திரபாபு.தம் வாழ்வில், அவர் வெளிப்படுத்திய அதிகபட்ச கோபம் இது தான்.கீழ் வீட்டில் இருந்த அந்தப் பெண் தான், பின்னாளில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கிய, விஜயகுமாரி!சந்திரபாபுவின் சகோதரர்கள் சிலர், சில காலம் அவருக்கு உதவியாக இருந்தனர். தன் கடைசி சகோதரரான, பெஞ்சமின் மீது, அவருக்கு தனிப் பாசம் உண்டு. தன்னை விட, 20 வயது இளையவரான பெஞ்சமினை, சந்திரபாபு தான் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார்.அதேபோல், தன் இளைய சகோதரிகளில் ஒருவரான, நோபிள் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். 16 வயதான நோபிள், செங்கல்பட்டில் படித்துக் கொண்டிருந்தார். தான் ஒரு வாலிபனை காதலிப்பதாக, தன் அண்ணனிடம் சொன்ன போது, 'தைரியமாக இரு; நான், உனக்கு உதவி பண்ணுறேன். அம்மா, அப்பாவிடம் சொல்ல வேணாம்; சமயம் வரும்போது பார்த்துக்கலாம்...' என்றார், சந்திரபாபு. பின், ஒரு நாள், நோபிளை வரவழைத்து, 'உன் கல்யாணம் நல்லபடி நடக்க வாழ்த்துகிறேன்; இதை வைத்து, தங்கச் சங்கிலி வாங்கிக் கொள்...' என்று சொல்லி, 300 ரூபாய் கொடுத்தார்.இவ்விஷயம், சந்திரபாபுவின் மூத்த சகோதரருக்குத் தெரிந்துவிட, அவர் அந்தப் பணத்தை தங்கையிடமிருந்து வாங்கிக் கொண்டதோடு, கண்டிக்கவே, மனம் உடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார், நோபிள். தான், மிகவும் நேசித்த ஒரு சகோதரியை இழந்ததில் மேலும் மனம் உடைந்து போனார், சந்திரபாபு.வாழ்க்கையில், புதிது புதிதாக நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல், சந்திரபாபுவுக்கு உண்டு. 'நான், என்னை விட சற்று உயர்ந்த அறிவாளிகளுடன் பழகுவதையே விரும்புகிறேன்...' என்று, அடிக்கடி கூறுவார். அப்படி, அவர் பழகியவர்களில் ஒரு பெண்மணி முக்கியமானவர். இவரைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தாலும், இவர் யார் என்ற விபரமோ, பெயரையோ குறிப்பிடவில்லை. ஒரு நண்பரின் மூலம் சந்திரபாபுவுக்கு அறிமுகமானார், அந்தப் பெண்மணி. வார்த்தைகளால், செயல்களால் பிறரை ஆச்சரியப்பட வைக்கும், சந்திரபாபுவையே அசர வைத்தவர், அப்பெண். ஒருமுறை, அப்பெண்ணிடம் சந்திரபாபு உரையாடிக் கொண்டிருந்த போது, 'பிளேகரிசம்' என, ஆங்கிலப் பதத்தை தவறாக உச்சரித்து விட்டார்.உடனே, சந்திரபாபுவின் கன்னத்தில் அறைந்த அந்தப் பெண்மணி, 'அது 'பிளேகரிசம்' இல்ல; 'பிளேஜரிசம்'ன்னு உச்சரிக்கணும்...' எனத் திருத்தினாராம்.ஆங்கில நாவல்கள், இலக்கியங்கள் பற்றி நீண்ட நேரம், சந்திரபாபுவுடன் பேசிக் கொண்டிருப்பாராம் அப்பெண். ஒரு நாள் திடுதிடுப்பென்று பெரிய ஓவியரின் பெயரைச் சொல்லி, 'உங்களுக்கு அவரை தெரியுமா?' என, சந்திரபாபுவிடம் கேட்டுள்ளார்.'தெரியாது...' என, சந்திரபாபு சொன்னவுடனே, அந்தப் பெண்மணி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?— தொடரும்.- முகில்நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை