உள்ளூர் செய்திகள்

சந்திரபாபு (29)

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரபாபு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்ற போது, அவரது வார்டில் சிகிச்சை பெற்று வந்த முகம்மது உமர் என்பவர் ஒரு பத்திரிகையில் எழுதியது...சந்திரபாபுவிற்கு எதிர் கட்டிலில், சாரி என்ற மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் மஞ்சள் காமாலை நோயிற்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் எப்போது ஜூஸ் சாப்பிட்டாலும், சந்திரபாபுவிற்கு முதுகை காட்டி, திரும்பிக் கொண்டு தான் குடிப்பார். ஒருமுறை, சாரியைப் பார்க்க, அவரது நண்பர் ஒருவர் வந்திருந்தார்; அவரைக் கூப்பிட்ட சந்திரபாபு, 'ஏன் ஐயா... உங்க நண்பரை பாக்க, வெறும் கையுடன் வந்திருக்கிறீர்... அவர் தான் எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாரே... கொஞ்சம் போண்டா வாங்கி வந்திருக்கக் கூடாதா...' என்று கிண்டல் செய்தார். அதன்பின், முதுகை காட்டிக்கொண்டு ஜூஸ் குடிப்பதில்லை, சாரி. சந்திரபாபு வார்டுக்கு வந்த புதிதில், அவரை பரிசோதிக்க வந்த டாக்டர், 'என்ன பண்ணுகிறது?' என்று கேட்டார். அதற்கு, கை ஜாடையில் இரு தோள் பட்டைகளை காண்பித்து, வேடிக்கை காட்டினார், சந்திரபாபு. வெறுத்துப் போன டாக்டர், 'வாயை திறந்து என்னன்னு சொல்லாத வரை, உனக்கு வைத்தியம் செய்யப் போறதில்ல; வீட்டுக்கு அனுப்பிச்சுடுவேன்...' என்று எச்சரித்து, வாயிலை நோக்கி சென்றார். அப்போது, 'டாக்டர்...' என்று கத்தினார், பாபு.டாக்டர் திரும்பி வந்து, 'என்ன, இப்போது சொல்லுங்க...' என்று கேட்டபோது, மீண்டும் அதே ஜாடை; இவ்வாறு, மூன்று முறை டாக்டரை அலைக்கழித்ததில், ஒரு கட்டத்தில் டாக்டருக்கே சிரிப்பு வந்துவிட்டது. கடைசியாக, சிரித்தவாறு, தன் நோய் பற்றி டாக்டரிடம் விளக்கினார், சந்திரபாபு. ஒருமுறை, எனக்கு சாப்பாடு வந்தபோது, 'எனக்கு பசியாக இருக்குது; உங்க சாப்பாட்டை நான் சாப்பிடுறேன்...' என்று கேட்டுக் கொண்டதால், நானும் சம்மதிக்க, என் டிபன் கேரியரை காலி செய்தார்.ஒருநாள், எதற்கோ அவருக்கு கோபம் வந்துவிட்டது. இரவு, ஒரு மணிக்கு, 'வீட்டுக்கு போகப் போகிறேன்...' என்று அமர்க்களம் செய்தார். அவரிடம், 'நீங்க இம்மாதிரி மற்றவர் துாக்கத்தை கெடுத்து, ரகளை பண்ணுவது நன்றாக இல்ல; நீங்க வீட்டுக்கு போகலாம். ஆனா, நாளை காலையில் எல்லா பத்திரிகைகளிலும், 'நள்ளிரவில், ஆஸ்பத்திரியிலிருந்து சந்திரபாபு ஓடி விட்டார்...' என்று செய்தி வரப்போகிறது; உங்களுக்கு தான் அவமானம்...' என்று கோபமாக கூறினேன்.'நீ சொல்வதும் சரிதான்; பேப்பரில் அந்த மாதிரி செய்தி வரக் கூடாது...' என்று தன்னைத்தானே சமாதானம் செய்து, மீண்டும் படுக்கைக்கு வந்தார்.அவர் சிகிச்சை முடியும் முன், நான், 'டிஸ்சார்ஜ்' ஆகிவிட்டேன்; மற்றவர்களை போல, அவரிடமும் விடைபெற்ற போது,'பாய், போய் வாங்க... திரும்பவும் இங்கே வராதீங்க...' என்றார், வேடிக்கையுடன்!மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மது அருந்தியதால், சந்திரபாபுவின் உடல்நிலை மிகவும் மோசமானது.மார்ச் 7, 1974, இரவு, ரத்த வாந்தி எடுத்தார்; அறையை சுத்தம் செய்தார், அவர் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி. 'நான் துாங்கப் போறேன்; நீ கவலைப்படாமல் போய் படு...' என, கிருஷ்ணமூர்த்தியிடம் கூறி, உறங்கச் சென்ற சந்திரபாபு, மீண்டும் எழவில்லை. மார்ச் 8, 1974 - அதிகாலையில் அவர் உயிர் பிரிந்திருந்தது. அப்போது அவருக்கு வயது, 46!அதிகாலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டு தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசிய எம்.எஸ்.வியிடம், 'அண்ணே, சந்திரபாபு இறந்துட்டாரு...' என்றார், கிருஷ்ணமூர்த்தி. உடைந்து போனார், எம்.எஸ்.வி.,சந்திரபாபுவின் வீட்டுக்கு, எம்.எஸ்.வி.,யும், அவர் மனைவியும் விரைந்தனர். கண்ணீரோடு நின்றிருந்த கிருஷ்ணமூர்த்தி, 'அண்ணே... சந்திரபாபு இறக்குறப்போ உங்களத்தான் நெனைச்சுகிட்டிருந்தாரு... சாகுறதுக்கு முன், 'நான் செத்தத வேற யாருகிட்டயும் சொல்லக் கூடாது; முதல்ல, விஸ்வநாதன்கிட்ட தான் சொல்லணும். அவன்தான் என் உடலை எடுத்துட்டு போய் அடக்கம் செய்யணும்'ன்னு சொன்னார்...' என்று அழுதார்.அப்போது, நடிகர் சங்க தலைவராக இருந்த சிவாஜிகணேசன், நடிகர் சங்கத்தில், இறுதி மரியாதைக்கு சந்திரபாபுவின் உடலை வைக்க ஏற்பாடு செய்தார். நடிகர் - நடிகையர் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.வாலாஜாபாத்தில் இருந்த சந்திரபாபுவின் தந்தையும், தாயும், சென்னைக்கு வந்து தன் மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டனர்.அப்போதைய முதல்வர் கருணாநிதி, சந்திரபாபுவின் தந்தைக்கு அனுதாப செய்தி அனுப்பினார். பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து, சந்திரபாபு உடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், 'சந்திரபாபு சிறந்த கலைஞர்; நாட்டிற்காக தியாகம் செய்த பரம்பரையில் வந்தவர். அவருடைய மறைவு வருந்தத் தக்கது. அவருடைய பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...' என்று, தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.சந்திரபாபு எப்போதும் உபயோகிக்கும், 'சேனல் 5 பெர்பியூமை' வாங்கி வந்து அவர் உடலில் தெளித்து, அழுதார், சிவாஜி.அச்சமயம், மொரிஷியசில் இருந்த எம்.ஜி.ஆர்., - சந்திரபாபுவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. சந்திரபாபுவின் உடல், சாந்தோம் சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சடங்குகள் முடிந்த பின், விஸ்வநாதனின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின், பட்டினப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு எடுத்துச் சென்றனர். சந்திரபாபுவின் திருமணத்தை நடத்தி வைத்தவர், ஆர்ச் பிஷப் அடைக்கலம்; அவரே, சந்திரபாபுவின் இறுதிச் சடங்கையும் செய்ய வேண்டியதாயிற்று. அப்போது, பிஷப் அழுததைப் பார்த்து பலரும் கண் கலங்கினர். கல்லறை தோட்டத்தில் தனக்காக ஒதுக்கி வைத்திருந்த இடத்தை சந்திரபாபுவுக்காக விட்டுக் கொடுத்தார், பிஷப்.சந்திரபாபு அடிக்கடி சொல்வது இதுதான்...'என்னை, முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை; ஏன், என் பெற்றோர் கூட என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஆகவே, மற்றவர்கள் யாராவது என்னை புரிந்துகொண்டதாக சொன்னால், நம்புவதற்கு கடினமாகவும், அதேசமயம் சிரிப்பும் வரும்...' என்பார். — தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.முகில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !