மனக்கவலை மாற்றல் எளிது!
மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர். மன்னிக்க வேண்டும் ஐயனே! மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனே!கவலை என்பதை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். முதலாவது, தீர்வு உள்ளது; இரண்டாவது, தீர்வு அற்றது.உயிர் இழப்பு என்பது மட்டும் தான், கவலைகளுள் தீர்வு அற்றதாக இருக்கிறது. ரத்த உறவுகளை, நெருங்கிய சொந்த பந்தங்களை, உயிர் நட்பைப் பிரிந்து வாடுகிற போது, ஒரு தீர்வும் இல்லை; இழந்தால் இழந்தது தான்!இந்த மோசமான இழப்பை கூட, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நம் மதங்கள் சொல்லி தந்து விட்டன.'இறந்தவர்களுக்காக அழாதே... அவர்கள் இந்த உலக துன்பங்களிலிருந்து விடுபட்டு விட்டனர்...' என்று ஒரு மதம் சொல்கிறது.மற்றொரு மதமோ, 'பிறப்பும், இறப்பும் வாழ்வின் இருநிலைகள்; தவிர்க்க முடியாதவை. அழுது தீர்த்து, கண்ணீர் உகுத்து, உன் மனத் துன்பக் கட்டியை கரைத்து, வெளியே ஓடவிடு...' எனக் கூறுகிறது.இன்னொரு மதம், 'இது இறைவனது அழைப்பு; எவரும் தடுக்க முடியாது. அவனது விருப்பம் அதுவென்றால், நீ என்ன செய்துவிட முடியும்!' என்கிறது.மரணத்திற்கு வேறு மனச் சமாதானங்களே கிடையாது. இதை தத்துவார்த்த பார்வைகளால், அவரவர் பின்பற்றும் மத வழிகளால், பகுத்தறிவு சிந்தனையால் வென்று, வெளிவந்து விட முடியும்; வெளிவர வேண்டும். வேறு வழியே இல்லை.இரண்டாவது வகை கவலையை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, தீர்வு உள்ள கவலையை தொலைவதால், வரும் கவலையை முதலாவதாகவும், இழப்பதால் வரும் கவலையை இரண்டாவதாகவும் கொள்வோம். எந்த ஒரு பொருள் மீதும் (கரன்சிகள் உட்பட) அளவு கடந்த ஈடுபாடு கூடாது; ஈடுபாடு அதிகரிக்க அதிகரிக்க, கவலையின் விகிதாசாரமும் உயர்ந்து கொண்டே போகும்.'மொபைல் போன் தொலைந்து விட்டது...' என்று ரொம்பவும் கவலைப்பட்டார் நண்பர் ஒருவர். ஒரு மாதம் கழித்து பார்த்தேன். 'புது செல் வாங்கிட்டேன்; இதுல நிறைய வசதி இருக்கு. ரொம்ப புடிச்சுப் போச்சு; பழைய போனோட படு அவதி...' என்று சொல்லி சிரித்தார்.எல்லாவற்றிற்கும் மாற்று இருக்கிறது. இவர் கடந்து வந்த ஒரு மாத காலம் மட்டுமே கஷ்ட காலம். இக்கஷ்ட காலத்தை மனப்பக்குவத்தால் கடக்கும் கலையை கற்றுக் கொண்டுவிட்டால் போதும்; தொலைந்த பொருளால் நமக்கு துன்பம் வராது.ராசி பேனா, ராசியான பர்ஸ், ராசியான வாகனம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது. நாமாக ஏற்படுத்தி கொள்ளும் மன சவுகரியங்களே இவை. எது தொலைந்தாலும், மனதால் தலை முழுகி, மாற்று ஏற்பாடு செய்து விடுங்கள், போதும்.அடுத்து, சொத்து இழப்பு... 'என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு...' என்கிறது கீதை. புறப்பட்டுப் போகும் போது, அருணாக் (அரைஞாண்) கயிற்றைக்கூட, அறுத்து விடுகிற இந்த வாழ்க்கையில், நாம் அவற்றின் தற்காலிக உரிமையாளர்களே! வரவும், செலவும் வாழ்வில் தவிர்க்க இயலா கணக்குகள்.'புத்திசாலித்தனத்தால் நிறைய சம்பாதித்தோம்; ஒரு மடத்தனத்தால் சற்று இழந்தோம். போகட்டும் விடு...' என்று, நம் மனதை நாமே தேற்றி கொள்ள வேண்டியது தான். இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை, தன்னம்பிக்கை உணர்வு, தத்துவார்த்தப் பார்வை கொண்டு நிரப்புங்கள்.மீட்டெடுக்கப்பட்ட சாம்ராஜ்யங்களையும், மீண்டெழுந்து சிம்மாசனங்களில் அமர்ந்த மனிதர்களையும், நினைவிற்கு கொண்டு வாருங்கள்.செருப்பு தொலைந்து போனவர்கள், கால்களற்ற மனிதர்களை பார்த்து, சமாதானம் அடைந்த கதையாய், ஒவ்வொருவரும் மனம் தேறி, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமே தவிர, உருகி உருகி உருக்குலைந்து போய்விடக் கூடாது.சட்டத் திருத்தம் போல, கவலைகளைப் பற்றிய பார்வைகளில், நமக்குள் சிறுசிறு திருத்தங்களை செய்து கொண்டால் போதும், மனக்கவலை மாற்றல் எளிது!லேனா தமிழ்வாணன்