உள்ளூர் செய்திகள்

சதுர்த்தி ஸ்பெஷல்!

விநாயகர் நிவேதனம்!

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது. மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்பதை விளக்குகிறது.அவல், பொரி: ஊதினாலே பறக்கக் கூடியவை இப்பொருட்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என கூறுகிறது.

பிள்ளையார் வழிபாடு!

கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் மட்டுமே இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.ஆனால், விநாயகரை மட்டும் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மாக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள்; முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள்; தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் வடிவமைத்து வழிபடலாம்.

21 எண்ணிக்கை!

விநாயக சதுர்த்தி அன்று, 21 மலர்கள், 21 இலைகள், 21 பழங்கள் வைத்து வழிபட, நம் பாவங்கள் மற்றும் தோஷங்கள் நீங்கி, சகலவிதமான சவுபாக்கியங்களையும் பெறலாம். மல்லி, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, சம்பங்கி, தாமரை, செண்பகம், பாரிஜாதம் - பவளமல்லி, அரளி, வில்வபூ, மனோரஞ்சிதம், தும்பைபூ, எருக்கம்பூ, தாழம்பூ, மாதுளைபூ, மாம்பூ, செம்பருத்தி, ரோஜா, நந்தியாவட்டை, ஊமத்தை, கொன்றை என, 21 மலர்களால் விநாயகரை பூஜிக்க பேராற்றலும், வாழ்வில் சந்தோஷமும் பெருகும்.அதேபோல், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், எலந்தம், பிரப்பம், நாவல், சாத்துக்குடி, கொய்யா, மாதுளை, அன்னாசி, சப்போட்டா, சீதா, விளாம்பழம், திராட்சை, பேரிக்காய், கரும்பு, அத்தி, சோளம், உலர் பழங்கள், கமலா ஆரஞ்சு மற்றும் பேரீச்சம் ஆகிய, 21 பழங்களால் விநாயகரை பூஜிக்க வேண்டும்.

அருள்மிகு கற்பக விநாயகர் கோவில்!

தமிழகத்தின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள், கற்பக விநாயகர் கோவிலும் ஒன்று. இக்கோவில் காரைக்குடிக்கும், புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.இரு கைகளுடன் மூலவர் கற்பக விநாயகர், 6 அடி உயரத்தில், வலம்புரி நிலையில் காணப்படுகிறார்.இங்கு, மூன்று லிங்கங்கள், மூன்று பெண் தெய்வங்கள் ஒரு சேர அமர்ந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனர். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு.விநாயகருக்கு, சதுர்த்தியன்று, 18 படி அளவு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது.விநாயகரின் ஆறு படை வீடுகளில் கற்பக விநாயகர் சன்னதி, ஐந்தாவது படை வீடு.விநாயகருக்கு தேர் திருவிழா நடைபெறும் ஒரு சில இடங்களில், பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படுகிறது.மனம் போல் வேண்டுவன அனைத்தும் தருவதால், இவருக்கு கற்பக விநாயகர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா. விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன், 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அறிவு ஒளி தரும் விநாயகராக, இவர் இருக்கிறார். இவரை மனதார தொழுதால், கல்வியும், ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) படைத்து வழிபடுகின்றனர், பக்தர்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில், கணபதி ஹோமம் செய்கின்றனர். மேலும், அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.திருப்பத்துார் - குன்றக்குடி பேருந்துகளில் பயணித்தால், பிள்ளையார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோவிலை எளிதில் அடையலாம்.

தேங்காய் கொழுக்கட்டை!

மேல் மாவு செய்வது எப்படி?இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போதே, அதில், இரண்டு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாக துாவி கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறும்போதே ஒரு சிட்டிகை உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளவும்.மாவு கெட்டியானவுடன் அதை ஈரத்துணியில் மூட்டை கட்டி வைக்கவும். 10 நிமிடம் கழித்து இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கைகளில் எண்ணெய் தொட்டு, கிண்ணம் போல செய்யவும்.பூரணம் தயாரிப்பது எப்படி?இரண்டு கப் வெல்லத்தை, ஒரு கப் நீரில் கரைத்து வடி கட்டி, பாகு காய்ச்சவும். பாகில் குமிழ் குமிழாக வரும்போது, இரண்டு கப் தேங்காய் துருவல், சிறிதளவு ஏலக்காய் துாள், சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து, ஐந்து நிமிடம் கிளறி கீழே இறக்கவும். இந்த பூரணத்தை மேல் மாவினுள் வைத்து, ஆவியில் வேக வைக்கவும்.

உப்புமா கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்: அரிசி ரவை - இரண்டு கப், தண்ணீர் - இரண்டு கப். கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி. பெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - இரண்டு, துருவிய தேங்காய் - கால் கப், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.செய்முறை: எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு தளதளவென கொதிக்க விடவும். இதில் அரிசி ரவையை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவலை போட்டு கிளறி கீழே இறக்கவும். இந்த உப்புமாவை கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைக்கவும்.

கொண்டைக்கடலை கார சுண்டல்!

தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப் (முதல் நாள் இரவே ஊற வைத்தது.)காரப்பொடி தயாரிக்க: தனியா - ஒரு மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 6, மிளகு - கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி. இந்த நான்கையும் எண்ணெயில் வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.தாளிக்க: எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்.செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை குக்கரில் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, அத்துடன் வேக வைத்த கடலையை சேர்க்கவும். இதனுடன் தயார் செய்து வைத்துள்ள காரப்பொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.

கணபதியின் ஆயுதங்கள்!

ஸ்ரீவிநாயகப் பெருமான் பல ஆயுதங்களை தன்னகத்தில் கொண்டிருப்பவர். அவை: பாசம், அங்குசம், வேதாளம், தந்தம், வில், அம்பு, சக்கரம், கத்தி, கேடயம், கதாயுதம், தண்டம், சூலம், நாக பாசம், சம்பட்டி, மழு, குந்தாலி, கொடி, கமண்டலம், பரசுபுஷ்பாணம், நட்டுவாங்கம், தீ, அகல், சாமரம், கரும்பு வில், சங்கம், கோடாரி, அட்சர மாலை மற்றும் வீணை.

காஞ்சிபுரம், ஓணக்காந்தன்

தளியில் கருவறை மண்டபத்தின் நுழைவாயிலில் சுவரின் முகப்பில் விநாயகர் திருவுருவம் உள்ளது. அவரது அருகில் சென்று, நம் செவியை வைத்தால், ஓங்கார ஒலியைக் கேட்கலாம். பல்லாண்டு காலமாக மக்கள் கேட்டு மகிழ்ந்து, வியந்த வண்ணம் உள்ளனர்.

பஞ்சமுக விநாயகர்!

சென்னை, திருவொற்றியூர் தியாகேசுவர் கோவிலில் சிங்க வாகனத்துடன் ஐந்து தலைகளும் ஒரே வரிசையில் கொண்ட பஞ்சமுக விநாயகர் உள்ளார். நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவிலில் சிங்க வாகனத்துடன் ஐந்து தலைகளும், நான்கு திசையில் நான்கு, மேலே ஒரு தலையுமாக பஞ்சமுக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

வெள்ளை விநாயகர்!

விநாயகரை, மாவு வெல்லத்தில் பிடித்து மக்கள் வழிபடுவது போல, கடல் நுரையால் தேவர்கள் உருவாக்கிய விநாயகரே திருவலஞ்சுழி விநாயகர். இவருக்கு பச்சைக் கற்பூரம் துாவுவதை தவிர வேறு அபிஷேகம் கிடையாது. இக்கோவில், கும்பகோணத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !