முதலமைச்சர் தங்கமணி!
நவீன உடற்பயிற்சி கூடம் -நாட்டுப்புற பாடல்களை கேட்டவாறே, உடற்பயிற்சி செய்தான், தங்கமணி. வயது, 48; உயரம், 6 அடி, 2 அங்குலம். தலைகேசம், க்ளோஸ்கட் செய்து, டை அடிக்கப்பட்டு, வழித்து சீவப்பட்டிருந்தது. பேஷியல் செய்யப்பட்ட, 'மொழு மொழு' முகம்; வாய்க்குள் எதையோ அதக்கி வைத்தாற் போல் உப்பிய கன்னங்கள்; பேச்சில் கிராமிய தமிழ் உச்சரிப்பு. ''வணக்கம் சின்ன மருத்துவர் அய்யா,'' என்றபடியே வந்தார், மேடுவெட்டி புரு.''வணக்கம் பெரியப்பா...'' அப்பாவை விட மூத்தவர் என்கிற மரியாதை வழிந்தது.''தம்பி... இன்னைக்கு காலை, 10:00 மணிக்கு முதல்வராக பதவியேற்க போறீங்க...''''ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடக்குதா?''''மைலாபுர தோட்டத்தில் தான் பதவியேற்பு விழா நடக்க இருக்கு... ஏற்பாடுகள பிரமாதமாக செய்துட்டேன்.''''நன்றி பெரியப்பா!''''தம்பி... உங்களப் பாக்கயில ஒரு விஷயத்த சொல்லாம இருக்க முடியல... இந்திய முதல்வர்கள்லயே, 'சிக்ஸ்பேக்' முதல்வர் நீ தான். ரஷ்ய அதிபர் புடின் போல என்னா ஒரு உடல் அமைப்பு உனக்கு... இன்னும், 50 வருஷத்துக்கு நீ தான் தமிழக முதல்வர்!''புன்னகைத்தான் தங்கமணி.குளித்து முடித்து, புல் சூட்டுக்கு மாறினான். கால்களில், ஷூ மின்னியது. உடலில், டியோடரன்ட் பீய்ச்சி, வாய்க்குள் மவுத், 'ஸ்ப்ரே' அடித்தான்.அப்பாவும், அம்மாவும் அருகில் வந்து நிற்க, அவர்களின் கால்களில் விழுந்து வணங்கியவன் எழுந்து, மேடைக்கு நடந்தான்.பதவியேற்பு வைபவத்தை நேரடியாக ஒளிபரப்ப, கிக்கிள், 'டிவி'க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.சிறப்பு விருந்தினர்கள் முன் வரிசை இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். கட்சி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் வந்திருந்தனர்.தங்கமணியின் தந்தை, ஒரு பத்திரிகையாளரிடம் பேசியபடி அமர்ந்திருந்தார்.''நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாங்கள், 205 சீட்டுகள் வென்று, 48 சதவீத ஓட்டு பெற்றுள்ளோம். 205 இடங்களிலும் எங்கள எதிர்த்த அனைத்து கட்சி வேட்பாளர்களும், டெபாசிட் இழந்துட்டாங்க...'' என்றார்.''மீதி, 29 தொகுதிகள்ல, உங்க வேட்பாளர்களை ஏன் வாபஸ் பெற்றீங்க?''''எதிர்க்கட்சி வேணுமில்ல, அதுக்குதான்; அ.கி.மு.க.,வுக்கும், வெகுஜன மறுவாழ்வு கூட்டணிக்கும் தலா, 10 இடங்கள், கி.மு.க., கூட்டணிக்கு, ஐந்து இடங்கள், சுயேச்சைக்கு, இரண்டு இடங்கள் விட்டுக் கொடுத்துள்ளோம்.''''உங்க பெருந்தன்மை, எந்த கட்சி தலைவருக்கும் வராது!''பதவியேற்பு உறுதிமொழியை ஆளுநர் வாசிக்க, மீண்டும் கூறினான் தங்கமணி. முதல்வராக பதவியேற்கும் கோப்பில் கையெழுத்திட்டான்.மேடுவெட்டி புரு உட்பட அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றனர்.பதவியேற்பு விழா முற்று பெற்றதும், தலைமைச்செயலர், தமிழக காவல்துறை தலைவர் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும், பூங்கொத்து கொடுத்து, தங்கமணியை வாழ்த்தினர்.மைலாபுர தோட்ட அலுவலகத்தில் அமர்ந்து, கோப்புகளை வரவழைத்தான் தங்கமணி.முதல் கோப்பு, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பானது.'பூரண மதுவிலக்கை அமல்படுத்துகிறேன்...' என எழுதி, கையெழுத்திட்டான் தங்கமணி.தமிழகத்தை, 'பசுமை தாயகம்' என அழைக்கக்கோரும் தீர்மானத்திலும், 'ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமானது' என அறிவிக்கும் மசோதாவிலும், 'இனி தமிழக மக்களுக்கு எப்பெயரிலும் இலவசங்கள் வழங்கப்பட மாட்டாது' என்கிற தீர்மானத்திலும், தமிழகத்தின் தலைநகராக மைலாபுரத்தை அறிவிக்கும் தீர்மானத்திலும் கையெழுத்திட்டான்.ப்ளாஷ்கள் மின்னி, கிளிக்... கிளிக் சத்தங்கள் தொடர்ந்தன.பத்திரிகையாளர் சந்திப்பு துவங்கியது.''நீங்கள் பார்ப்பதற்கு ஒரு முதல்வர் மாதிரி இல்லை; மெகா கார்ப்பரேட் போல் காட்சியளிக்கிறீர்கள்.''''நன்றி!''''புதிதாக என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வர இருக்கீங்க?''''பாட்மின்ட்டன் விளையாட்டை, பள்ளிகளில் கட்டாயமாக்கப் போகிறேன்.''''அப்புறம்...''''இளங்கலை மருத்துவம் முடிக்கும் மருத்துவர்கள் அனைவரும், கட்டாயம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என சட்டம் கொண்டு வர போகிறோம்.''''நல்லது.''''எங்கள் கட்சியை ஸ்தாபித்த காலகட்டத்தில் நடந்த பல வன்முறைகளில், எங்கள் கட்சியை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் இறந்து போயினர். அவர்களை, 'தியாகி' என அறிவித்து, அவர்களின் வாரிசுகளுக்கு உதவி தொகை வழங்கப் போகிறோம்.''''பலே பலே!''''எயிம்ஸ் தரத்தில் மருத்துவமனைகளை தாலுக்காவுக்கு தாலுக்கா கொண்டு வருவேன்.''''கிரேட்!''''இனி தமிழக தேர்தல்களில், கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை தடை செய்யும் தீர்மானம் கொண்டு வருவேன்.''''சூப்பர்!''''முதல்வர் பதவி, இனி, 'சின்ன பிரதமர்' என அழைக்கப்படும்.''''மத்திய அரசு ஒத்துக்குமா?''''ஒத்துக்க வைப்போம்; உடற்பயிற்சி, கல்லூரி மற்றும் பணி இடங்களில் கட்டாயமாக்கப்படும். 'சிக்ஸ்பேக்' இளைஞர்களுக்கு கல்வியிலும், பணியிலும் முன்னுரிமை வழங்கப்படும்.''''வாவ்!''''காதல் திருமணங்கள் தடை செய்யப்படும். யாரும் ஜாதி விட்டு ஜாதி, மதம் விட்டு மதம் திருமணம் செய்யக்கூடாது. இரு தரப்பு பெற்றோர் சம்மதம் தந்தால், அக்காதல் திருமணம் மட்டும் அனுமதிக்கப்படும்.''''தைரியமான முடிவு.''''காதலை ஆதரித்து வரும் தமிழ் சினிமாக்கள், தணிக்கை குழுவை தாண்டாது தடை செய்யப்படும்.''''அதிரடி முடிவு.''''பத்திரிகையாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி; இனி அடிக்கடி சந்திப்போம். உங்கள் எல்லாருக்கும், மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட்டு விட்டு போங்கள்.''பத்திரிகையாளர் கூட்டம் கலைந்தது.கட்சி உறுப்பினர்கள் கூடி, தங்கமணியை கை குலுக்கி, வாழ்த்தினர். அவர்களிடம், ''மாதம் ஒருமுறை, மாவட்டம் தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும். கட்சி உறுப்பினர்கள், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.''''சரி சின்ன அய்யா.''''குடியை நிறுத்தும் நம் கட்சி உறுப்பினர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும்.''''நன்றி அய்யா.''''தினம் ஒரு மணி நேரம், அரசு மருத்துவமனையில் நானும், என் தந்தையும், இலவச மருத்துவ சேவை செய்யப் போகிறோம். ஆங்கில மருத்துவத்துக்கு தரப்படும் முக்கியத்துவம், இனி சித்த மருத்துவத்துக்கும் தரப்படும். ஜெனிரிக் மருந்துகளை, குறைந்த விலையில் தயாரிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கல்லூரிகளில் காதல் செய்யாமலிருக்க, கட்டாய மனநல ஆலோசனை வழங்கப்படும். 25 ஆண்டுகளுக்கு மேல், கட்சியில் உறுப்பினர்களாக இருப்போருக்கு, 'பிளாட்டினம் கார்டு' வழங்கப்படும். பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு சூடு போடப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவருக்கு, மரணதண்டனை அறிவிப்போம்,'' என்றார் தங்கமணி.''ஓவரா சட்ட திட்டங்கள் போட்டா, உங்கள சர்வாதிகாரின்னு சொல்லி, அடுத்த தேர்தல்ல, மக்கள் நம்மை கவுத்திருவாங்க!''''அந்தக்கவலை உங்களுக்கு வேணாம்; நான் பாத்துக்கிறேன். எல்லாரும் இருந்து, சாப்பிட்டுட்டு போங்க,'' என்று கூறி, மனைவி, மக்களுடன் கோவிலுக்கு சென்றான், தங்கமணி.பின், மதிய உணவு முடித்ததும், தொகுதி உலா சென்றான்.மாலை, 7;00 மணிக்கு அலுவலகத்தில் அமர்ந்து, கோப்புகளை பார்த்து கையெழுத்திட்டான். இரவு, 9:00 மணி ஆனதும், காவல்துறை சமர்ப்பிக்கும், தினசரி குற்ற அறிக்கையை படித்தான்.இரவு, 11:00 மணிக்கு தூங்கச் சென்றான் தங்கமணி.மைலாபுர தோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில், மேடுவெட்டி புரு நின்றிருந்தார். அவர் முன், நீண்ட வரிசையில், மக்கள் நின்றிருந்தனர். ''உண்மையில் நம்ம கட்சி, ஒரு இடத்துலையும் ஜெயிக்கல. வாங்கினது 3 சதவீத ஓட்டு; முதல்வர் ஆகிடுவோம் என்கிற நம்பிக்கையில் இருந்த தங்கமணிக்கு, தேர்தல் முடிவுகள், பலத்த இடி. தங்கமணியை திருப்திபடுத்த தான், இன்னைக்கி பதவியேற்பு நாடகம் போட்டோம். கவர்னராய் நடிச்சவருக்கு, 2,000 ரூபாய் சம்பளம். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி,'' என, பணம் வினியோகிக்க ஆரம்பித்தார் மேடு வெட்டி புரு.ஜாஸ்மின்