பார்க்க வேண்டிய நகரம் பாங்காக்! (1)
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். அவை, ஆசைப்படுவோரின் பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழலை பொறுத்து நிறைவேறவும், நிறைவேறாமல் போகவும் வாய்ப்புண்டு.இதற்கு நானும் விதிவிலக்கல்ல. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை. இந்நிலையில், பன்னாட்டு நிறுவனம் ஒன்று, தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு, பத்திரிகையாளர்களை அழைத்து சென்றது. அவர்களுடன் சென்று வர வாய்ப்பளித்தார், 'பாஸ்!' அப்போதே மனம் சிறகடித்து, தாய்லாந்துக்கு பறக்க துவங்கியது. பயண நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன்; அந்த நாளும் வந்தது.வெளிநாடு செல்வதற்கு தேவையான, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் ஆகியவற்றுடன், தேவையான உடமைகளை எடுத்துக் கொண்டேன். அதிகாலை, 1:30 மணிக்கு விமானம். பரிசோதனை எல்லாம் முடிக்க வேண்டும் என்பதால், இரவு, 10:00 மணிக்கு, விமான நிலையம் சென்றேன். ஒரு மணி நேரத்தில், அனைத்து சோதனைகளையும் முடித்து, காத்திருப்பு அறையில் சென்று அமர்ந்தேன். சிறிது நேரத்தில், என்னுடன் பயணம் செய்யும் மற்ற பத்திரிகையாளர்களும் வந்து சேர்ந்தனர்.அதிகாலை, 1:15 மணிக்கு, விமானத்தில் ஏற, அழைத்து சென்றனர். ஜன்னலோர இருக்கை கிடைத்தது. அதிகாலை, 1:50 மணிக்கு, கால தாமதமாக புறப்பட்டது, விமானம். இருளாக இருந்தால், எதையும் ரசிக்க முடியவில்லை. கண்களை மூடினேன்.உணவுக்காக எழுப்பினர். சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா, அரிசி சாதம், பருப்பு மசியல், பப்பாளி, கொய்யா பழத் துண்டுகள், ஒரு பன், பாயசம் ஆகியவற்றை, உணவாக தந்தனர்; சுவையாகவே இருந்தது. உண்டு முடித்த பின், துாக்கம் கலைந்து விட்டது.சீட்டின் எதிர் இருக்கையில் பொருத்தப்பட்டிருந்த, 'டிவி' திரையில், விமானம் செல்லும் உயரம், வேகம், பயண நேரம் போன்ற விபரங்கள் மின்னின. அவற்றை ஆவலுடன் பார்த்தேன். 'சீட்' கைப்பிடி அருகே, 'ரிமோட்' இருந்தது. அதை எடுத்து, 'டிவி'யில், வரும் நிகழ்ச்சிகளை ஆராய்ந்தேன். அதில், திரைப்படங்கள், பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. அவற்றை பார்க்க மனமின்றி, மீண்டும் கண்களை மூட, சிறிது நேரத்தில், பாங்காங் வந்து விட்டதாக அறிவித்தனர். விமானத்தில் விளக்குகள் ஒளிரத் துவங்கின. மூன்று மணி நேர பயணத்தில், தாய்லாந்தின் தலைநகரான, பாங்காக்கில் உள்ள, 'ஸ்வர்ணபூமி' விமான நிலையத்தை அடைந்தோம். முன்னதாக விமானத்தில், ஒரு விண்ணப்ப படிவத்தை வழங்கினார், விமான பணிப்பெண். அவற்றை வாங்கிய நண்பர், அது எதற்கு எனத் தெரியாமல், பையில் வைத்துக் கொண்டார். விண்ணப்பத்தை நிரப்பி, தாய்லாந்து விமான அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்பது, வரிசையில் நின்றபோது தான் தெரிந்தது. வேகமாக அதை நிரப்பி தந்தேன். ஆனால், அங்கிருந்த பெண் அதிகாரி, எதையும் பார்க்காமல், அதன் மீது, 'சீல்' வைத்து, 'நீங்கள் செல்லலாம்...' என்றார். அடுத்திருந்த நபர், எங்களை புகைப்படம் எடுத்து, இரு கை விரல்களின் ரேகைகளைப் பதிவு செய்தார். அதன்பின் செல்ல அனுமதித்தனர்.'சீலிடப்பட்ட அனுமதி சீட்டை, பாதுகாப்பாக வைத்திருங்கள். திரும்ப செல்லும்போது, அந்த அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே, விமானத்தில் அனுமதிப்பர்...' என, உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, பாதுகாப்பாக பையில் வைத்துக் கொண்டேன். விமான நிலையத்தில், தேவர்களும், அசுரர்களும், மேரு மலையை மத்தாக்கி, 'வாசுகி' பாம்பை கயிறாக வைத்து, பாற்கடலை கடைந்த காட்சி, சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. அதை ரசித்தபடியே வெளியேறினோம்.எங்களை வரவேற்க தயாராக இருந்தார், வழிகாட்டி. அவருடன் காரில், பாங்காங் நகரில் உள்ள, நட்சத்திர ஓட்டலுக்கு சென்றோம். குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டோம்.காலை உணவை முடித்ததும், தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற, 'மிதக்கும் சந்தை'யை காண சென்றோம். பாங்காக்கில் இருந்தாலும், சென்னையில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது, வெயில். போக்குவரத்து நெரிசல், சென்னை, அண்ணா சாலையை நினைவுப்படுத்தியது.— தொடரும்.ம. அறம்வளர்த்த நாதன்