ஒப்பிடுவது என் ஒர்க்அவுட் ஆவதில்லை!
மேற்கண்ட ஆங்கில தலைப்பிற்காக, தமிழ் நெஞ்சங்கள் பொறுப்பார்களாக!என் பெரியம்மா மகனும், நானும், ஒரு காலகட்டத்தில், ஒரே வீட்டில் வளர்ந்தோம். அவர் கணக்கில் புலி; அடியேன் புளி! எனவே, அடிக்கடி எங்களை பற்றிய ஒப்பீடு நிகழும்.இப்படி ஒப்பீடு நிகழ்ந்த போதெல்லாம், எனக்குள் நன்மை நிகழ்ந்ததா என்றால், இல்லை. மாறாக, வேறு இரு விஷயங்கள் வளர்ந்தன. என் ஒன்று விட்ட சகோதரன் மீது, எனக்கு பொறாமையும், கடுப்புமே உருவாயின. இதோடு விட்டதா... ஒப்பிட்டு பேசிய பெரியம்மா மீது, கோபம் வளர்ந்தது.பசுமரத்தாணியாய் பதிந்து இருக்க வேண்டிய இந்த ஒப்பீட்டின் பலன், இந்த இளம் வயதிலேயே, 'ஒர்க் கவுட்' ஆகவில்லை என்கிற போது, எதையும் நிராகரிக்கிற மனம் உருவாகிவிட்ட வளர்ந்த பருவத்தில், எப்படி இந்த ஒப்பீட்டு முறை வேலை செய்யும்?ஆம்... ஒப்பிடும் முறை, எக்காலத்திலும், வேலை செய்வது இல்லை. ஒரே கருப்பையில் தோன்றிய இரட்டை குழந்தைகள் கூட ஒப்பிட தகுதியற்றவர்களே! பார்ப்பதற்கு அச்சு அசலாக இருக்கும் இவர்களுக்குள் கூட, பெற்றோரால் வேறுபாடு காண முடிகிற போது, மனம் எவ்வளவு கோணல் கோணும்; நீளம், அகலம் வேறுபாடு எவ்வளவு காணும்!ஒரு வீட்டின் இரு மாப்பிள்ளைகள் அல்லது மருமகள்கள் ஒப்பிடத்தக்கவர்கள் அல்லர்; ஒரு நிறுவனத்தின் இரு ஊழியர்களும் ஒப்பிடப்பட முடியாதவர்களே; ஒரு வீட்டின் இரு குடித்தனக்காரர்களை ஒப்பிடுவதும் அறிவீனமே!ஒரே படகில் பயணம் செய்பவர்கள் கூட, ஒன்றாகி விட மாட்டார்கள். 'தாயும், மகளும் ஒன்று என்றாலும், வாயும், வயிறும் வேறு' என்கிற பழமொழி, இக்கருத்திற்கு வலு சேர்க்கிற போது, எதற்கு இனி ஒப்பீடு!ஒப்பீடுகள், ஒப்பிடப்படுபவர்களை கோபத்திற்கும், வருத்தத்திற்கும் உள்ளாக்குகின்றன. இந்த ஒப்பீட்டில், தர்க்கமே இல்லை என்றே ஒப்பிடப்படும் ஒவ்வொருவரும் கருதுகின்றனர்.ஒப்பிடுவதை பொறுத்தவரை, குறிப்பாக, பெண்கள் ரொம்பவே கடுப்பாவது நிஜம்!யாரோடும் தாம் ஒப்பிடப்படுவதை, இவ்வுலகம் விரும்பவில்லை என்பதால், ஒப்பிடுவதற்கு இனி, முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.ஒவ்வொரு மனிதனும், தான் வளர்கிற, வளர்க்கப்படுகிற சூழலால், களங்களால், படித்த படிப்பால், கற்(காத)ற கல்வியால், பொருளாதர ஏற்றத்தாழ்வுகளால், பெற்ற அனுபவங்களால் மற்றும் வாழ்வில் பார்க்கும் காட்சிகளால், மிக வித்தியாசமான மனநிலைகளில் அமர்ந்து விடுகின்றனர்.கடைசி வரைக்கும், தாங்கள் நம்புவதையே சரி என, வாதிடுகின்றனர். இதன்படியே, வாழ்க்கை பார்வைகளை அமைத்துக் கொள்கின்றனர்.எனவே, சிறு ஒற்றுமைகளுக்காக, தாங்கள் பிறரோடு ஒப்பிடப்படும்போது, அது சற்றும் சரியில்லை என்று மறுத்து ஒதுக்குகின்றனர்; எனவே, ஒப்பிட்டு திருத்த முயல்வதை விட்டுவிட்டு, அவரை தனித்துவம் வாய்ந்த தனி மனிதராக ஏற்று, 'உங்களிடத்தில் இன்னின்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறேன்...' என்று கூறினால், நாம் கூறுவதில் நியாயம் தேடுகின்றனர்.ஒப்பீட்டு பேசும் போது, முரண்படுவது போலவே, நம் கோரிக்கைகளிலும் முரண்பட்டு, அடியோடு எல்லாவற்றையும் நிராகரிக்கும் ஆபத்து நிகழ்வதால், ஒப்பிடுவதை, இனியேனும் கைவிட முயற்சிப்போமே!லேனா தமிழ்வாணன்