அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் (8) - பத்திரிகையாளர்களை அசத்திய ஜெயலலிதா
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஜெயலலிதாவிடம், என்னை அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருணத்தில், ஜெயலலிதா பிரதிபலித்த விதம், எனக்குள் ஒருவித சுவாரசியத்தை உருவாக்கியது ஏன் எனச் சொல்லி விடுகிறேன்.'உங்களை இப்போது தான் பார்க்கிறேன். உங்கள் தந்தையார் தமிழ்வாணனை எனக்குத் தெரியும். நான் பெரும்பாலும் ஆங்கிலம் படித்தே வளர்ந்தவள். ஆனாலும், உங்கள் தந்தை மிகப் பிரபலமானவர்...' என்றார், ஜெயலலிதா.பத்திரிகையாளர் பலருடனும் வணக்கமும், சிறு புன்னகையும் உதிர்த்துக் கடந்து வந்த ஜெயலலிதா, என்னிடம் மட்டும் கூடுதலாக இப்படி பேசியது தான், எனக்குள் சுவாரசியம் புகக் காரணம்.அவர், என்னிடம் காட்டிய சகஜமும், சிநேகபாவமும் முதலாவது சுவாரசியம்.தந்தையாரைத் தெரியும் என்கிறாரே... எப்படி? எம்.ஜி.ஆருக்கு, மக்கள் திலகம் பட்டம் அளித்ததும், இதன் வழியே அவர்கள் இருவரும் நெருக்கமானதும், இவருக்குத் தெரிந்திருக்குமோ? இது என் சுவாரசியத்தின் மேல் அடுக்கு.'மகிழ்ச்சி மேடம். இப்படி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தது, மிக நல்ல விஷயம்மா. நாங்க எல்லாரும் இந்த ஏற்பாட்டை மிக விரும்பினோம்...' என்றேன்.'அப்படியா?' என, அவர் உதிர்த்த ஒரு சொல்லில், நான் புரிந்து கொண்ட அர்த்தம் என்ன தெரியுமா?இந்தச் சந்திப்பு யோசனை, ஜெயலலிதாவினுடையது தான் என்பதே.ஆளுமைகளின் ஒவ்வொரு சொல்லின் உள்ளும் இருக்கிற, அடைப்புக்குறி அர்த்தங்களைப் பத்திரிகையாளர்களால் மட்டுமே உணர முடியும்.என் ஊகத்தை உறுதி செய்யும் விதமாக, ஜெயலலிதாவும், அதிகாரி சுவாமிநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சிவஞானம் தெரு, சர்ச் பார்க், பிளைமவுத் கார் ஓட்டுனர் சாமி என, எல்லாவற்றையும் ஆரம்பிக்கலாமா எனப் பார்த்தேன்.இனம் புரியாத தயக்கம், தலை துாக்கியது. இத்தனைக்கும் அப்படி ஒன்றும் நேர நெருக்கடியோ, அவசரமோ, தள்ளுமுள்ளோ இல்லை. என்னால் மேலும் பேசி இருக்க முடியும். மற்ற எவருடனும் நீட்டித்த உரையாடல் இல்லை என்பதைக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு, தயக்கம் ஏற்பட்டதில் வியப்பு இல்லை.ஜெயலலிதாவுக்கும், பத்திரிகையாளர்களுக்குமான உறவில், விரிசல் கண்டிருந்த நேரம் அது.பத்திரிகையாளர்களைக் கண்டிக்கும் விதமாக ஏதோ ஒன்றை ஜெயலலிதா குறிப்பிட்டார் என்று கூட எனக்கு நினைவு.இந்தப் பின்னணியை நான் ஆதாரம் இல்லாமல் பேசுவது தவறு. 'உங்களை நம்பி நான் இல்லை; மக்களை நம்பியே நான்...' என்ற தொனி மட்டும், அவரிடமிருந்து வெளிப்பட்டு விட்டதாக ஊகிக்கிறேன்.ஆனால், ஜெயலலிதாவை பத்திரிகையாளர்கள் அணுக முடியாத காலகட்டத்தில், அவரை அணுகியே ஆக வேண்டும் என்ற தேவை, எனக்கு ஏற்பட்டது.அதென்னவோ தெரியவில்லை, தமிழக முதல்வர்களுடனான சந்திப்புகள் அனைத்துமே, என் இல்லத் திருமண அழைப்பிதழ்கள் சார்ந்தவையாகவே அமைந்து விட்டன.ஜெயலலிதாவை நேரில் பார்த்து, என் இளவல், ரவி தமிழ்வாணனின் மகன் டாக்டர் ரமேஷ் ராமநாதனின் திருமண வரவேற்பிற்கு அழைக்க விரும்பினேன்.ஜெயலலிதாவின் தனிச்செயலர், பூங்குன்றனை அணுகுவதென முடிவு செய்தேன். பூங்குன்றனை அணுகியபோது, தயக்கமின்றிக் கேட்டுக் கொண்டார். 'மேடத்துடன் பேசுகிறேன்...' என்றார். லேசர் புள்ளி அளவில் ஓர் ஒளிக்கீற்று பிறந்ததாக தென்பட்டது எனக்கு.அடுத்த இரு தினங்களில்,போயஸ் தோட்டத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.'மேடம், உங்களுக்கு நாளை மறுநாள் காலை, 9:00 மணிக்கு, 'அப்பாயின்மென்ட்' தந்திருக்கிறார். உங்களுக்கு இந்த நாள், நேரம் சவுகரியப்படுமா என்றும் கேட்டுக் கொள்ள கூறினார்...' என்றனர்.பெரிய மனிதர்கள் தரும், 'அப்பாயின்மென்ட்'கள் பலவும், சற்றே ஆதிக்கமாக இருக்கும். இது அப்படி இல்லை. பரவாயில்லையே, நம் சவுகரியத்தையும் கவனத்தில் கொள்கின்றனரே எனத் தோன்றியது.ஜெயலலிதா, எனக்கு கொடுத்திருந்த நேரத்தில், மணமகனின் தந்தை ரவி தமிழ்வாணன், வெளிநாட்டில் இருந்தார்.'ஏதடா இது புதுவித இடைஞ்சல்! நமக்கு சவுகர்யப்படுமா என்றுவேறு, கார்டனிலிருந்து கேட்கின்றனர். மாற்றுத் தேதி கேட்போமா...' என்றெல்லாம் சிந்தனைகள் கிளை விரிக்க, ரவியுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.'என்ன ரவி! நீ வந்த பிறகு, 'அப்பாயின்மென்ட்' தேவை எனக் கேட்கவா?''வேண்டாம். தவறாகி விடும். விட்டுப் போய் விடும். நீ மட்டும் பார்த்துவிடு...' என, ரவி சொல்ல, என் தங்கை சகுந்தலா முருகப்பன், தங்கை மகன் மணிகண்டன், மணமகன் டாக்டர் ரமேஷ் ராமநாதன் ஆகிய நால்வருமாகச் சந்திப்பது என, முடிவாயிற்று.'கார் எண் என்ன, யார், யார் வருகிறீர்கள்?' போன்ற விபரங்களை தெளிவாகக் கேட்டுக் கொண்டார், பூங்குன்றன்.காலை, 9:00 மணிக்கு போயஸ் தோட்டத்தில் சந்திப்பு.என்னை, 'மிஸ்டர் பங்க்சுவல்' என்பர். அதெல்லாம் இல்லை. நான், 'ப்ரி பங்க்சுவல்!' ஆம். 8:45 மணிக்கே, அங்கு ஆஜர் ஆகிவிட்டோம்.எங்களுக்கு முன், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சரவணன் ஆகியோர் ஆஜர்.ஷோபா சந்திரசேகரும், என் அக்கா லட்சுமியும், தி.நகர், சாரதா வித்யாலயாவில் படித்த பள்ளித் தோழிகள். இந்த வகையில், எஸ்.ஏ.சந்திரசேகரை அவரது திருமணம் முதலே தெரியும். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். நடிகர் விஜய், அ.தி.மு.க.,வில் சேரப் போவதாக வதந்தி உலவிய தருணம் அது. இந்தச் செய்தியையும், ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திக்க வந்திருந்ததையும் நன்றாக முடிச்சுப் போட்டுக் கொண்டேன்.நடிகர் சரவணனுக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என ஊகித்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 'என்ன சார் நீங்க! உங்களைப் போய் அறிமுகப்படுத்திக்கிட்டு...' என்றார்.எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அழைப்பு வர, அவர் சீக்கிரமே திரும்பிவிட்டார்.எங்கள் நால்வருக்கும் என்னென்ன வேண்டும் எனக் கேட்டு, அவற்றை வழங்க ஏற்பாடு செய்தார், பூங்குன்றன்.காலை, 9:00 மணிக்கு முன்னதாகவே அழைப்பு வர, தயாராக நின்றபடி எங்களை வரவேற்ற ஜெயலலிதா, எங்களை அமரச் செய்து, பிறகே அமர்ந்தார்.மூவரையும் அறிமுகப்படுத்தினேன். 'தம்பி மகன் இவர். டாக்டர் ரமேஷ், மலேசியாவில் மருத்துவராக இருக்கிறார். சொந்த ஊரில் திருமணம் முடிந்தது. வரவேற்பிற்கு உங்களை அழைக்க வந்திருக்கிறோம்...' என்றேன்.'சொன்னாங்க. மகிழ்ச்சி...' என்றார்.அழைப்பிதழைக் கொடுத்ததும் பொறுமையாகப் படித்தவர், 'காதல் திருமணமா?' என்றார்.இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. -தொடரும். - லேனா தமிழ்வாணன்