சும்மா இருக்காதே மனமே!
''என்னை எங்கே கூட்டிட்டுப் போறே?'' சிகாமணியிடம் நாலைந்து முறை கேட்டும், அவன் பதில் சொல்லவில்லை. 'ஹெல்மெட்' போட்டிருந்ததால், காது கேட்கவில்லையோ என நினைத்து, மீண்டும் சத்தமாக கேட்டேன்.''நீயே வந்து பாரேன், முத்து,'' என்று சொல்லி, செண்பகராமன்புதுார் தாண்டி, இடது பக்கமாக இருந்த மண் பாதையில் வண்டியைச் செலுத்தினான். வீடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. ஆங்காங்கே சில தென்னந்தோப்புகள் நிழல் பரப்பியிருந்தன. நிறைய காலி மனைகள், வானம் பார்த்த பூமி.'ஏதாவது ரியல் எஸ்டேட் தொழில் பண்றானோ, என்னையும் ஏதாவது இடம் வாங்கச் சொல்லப் போறானோ...' என்ற எண்ணம் ஓடியது. ௩ கி.மீ., சென்றதும், ஒரு சிறிய கட்டடத்தின் முன் வண்டியை நிறுத்தினான்.முகப்பில், 'அறம்' என்ற சிறிய பெயர் பலகை இருந்ததைப் பார்த்தேன். உள்ளே பெரிய ஹால், ஒன்றிரண்டு அறைகள், பார்த்ததுமே புரிந்தது, முதியோர் இல்லம்.கட்டடத்தின் இரு பக்கமும், திறந்தவெளியில் காய்கறி தோட்டம். அதில் சில முதியோர், தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தனர். சிலர், புங்க மர நிழலில் இருந்த சிமென்ட் பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர்.ஆபீஸ் அறைக்கு அழைத்துச் சென்றான், சிகாமணி. எங்களை வரவேற்று, உட்காரச் சொன்னார், முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்தன்.''வணக்கம், ஆனந்தன்... முத்துன்னு ஒருத்தரைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல, அது இவர் தான். வங்கியில காசாளரா வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்,'' என்று, என்னை அறிமுகப்படுத்தினான், சிகாமணி. எதுவும் புரியாமல் இருவரையும் பார்த்தேன்.''வணக்கம், முத்து சார்... சிகாமணி, உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். நான் தான் உங்களை அழைச்சுட்டு வரச்சொன்னேன்.''சார், ரெண்டு வருஷத்துக்கு முன், 'அறம்' என்ற பெயர்ல இந்த முதியோர் இல்லத்தை ஆரம்பிச்சோம். இப்ப, 20 பேர் இருக்காங்க. இது, பணம் வாங்கி முதியவங்களைக் கவனிச்சுக்கிற இல்லம் இல்லை. ஆதரவற்ற முதியோர்களுக்காக நாங்க நடத்துற அறக்கட்டளை...''அங்கங்கே கிடைக்கிற நன்கொடைன்னு எளிமையாத்தான் நடத்திட்டு இருக்கோம். சில நல்ல உள்ளம் படைச்ச டாக்டர்கள், அப்பப்போ இங்கே வந்து, இலவசமா மருத்துவம் பண்ணிட்டு போறாங்க.''இப்ப நாங்க, பண உதவி கேட்கிறதுக்காக உங்களை அழைச்சுட்டு வரச் சொல்லல. நீங்களா விரும்பிப் பணம் கொடுத்தா வேண்டாம்ன்னு சொல்லப் போறதுமில்லை,'' என சொல்லி சிரித்தார், ஆனந்தன். 'பணத்தைத் தவிர்த்து என்ன கேட்கப் போகிறார்?' என்று ஊகித்தபடி, அவரைப் பார்த்தேன்.''நீங்க இலக்கியத்துல ஆர்வம் உள்ளவர்னு சிகாமணி சொன்னார். மேடையில கூட பேசுவீங்களாமே. எங்க இல்லத்துல இருக்கிற நிறைய முதியோருக்கு, இலக்கியத்துல ஆர்வம் உண்டு.''நீங்க படிச்ச நல்ல விஷயங்களை, இங்கே இருக்கிற முதியோர்கள்கிட்டே பகிர்ந்துக்க முடியுமா... கதை, நாவல் எதுவா இருந்தாலும் சொல்லலாம். ஓய்வுப்பெற்ற உங்களுக்கு நேரம் இருந்தா இதை ஒரு சேவையா நினைச்சு செய்ய முடியுமா?''இப்படியொரு உதவியைக் கேட்பார் என்று, சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.''இலக்கியம், ஆன்மிகம், தத்துவம் எதுனாலும் சொல்லலாம் சார். ஆனா, சேவையாத்தான் செய்யணும். வர்ற பண உதவி எல்லாம் இல்லத்தை நடத்துறதுக்கே சரியாப் போயிடுது. இல்லத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக்கம் செய்யுற யோசனையும் இருக்கு.''அதாவது, வசதியான முதியோர்களை பணம் வாங்கிட்டு கவனிச்சுக்கிற மாதிரியான சேவை. அப்போ நிச்சயமா ஏதாவது உங்களுக்கு சன்மானம் தருவோம்,'' என்றார், ஆனந்தன்.''பணம் எல்லாம் பெரிய விஷயம் இல்லை, சார். எனக்கு ஓய்வூதியம் வருது. ஆனா, அடிக்கடி இங்கே வந்து இலக்கியம் பேச முடியுமான்னுதான் தெரியல,'' என்று தயங்கினார், முத்து.''என்ன முத்து, வீட்ல சும்மாதானே இருக்கிறே. வாரத்துக்கு ரெண்டு மூணு நாள், நானே உன்னை இங்கே கூட்டிட்டு வர்றேன். நீ படிச்ச, கேட்ட நல்ல விஷயத்தை வந்து சொல்லு. இங்கே இருக்கிறவங்களுக்கு அது ஒரு பயனுள்ள பொழுது போக்கா இருக்கும்ல. எவ்வளவு நேரம் தான், 'டிவி'யையே பார்த்துட்டு இருப்பாங்க,'' என்றான், சிகாமணி.அதற்குப் பின், சிகாமணியும், ஆனந்தனும் என்னை யோசிக்க விடவில்லை. அரைமனதாய் நானும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. இரண்டு நாட்கள் கழித்து வருவதாய்ச் சொல்லி, சிகாமணியுடன் கிளம்பினேன்.வங்கியில் பணியாற்றும் போது, வங்கி சார்ந்த இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். படித்தது, பி.எஸ்சி., வேதியியல் என்றாலும், தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது, எனக்கு. வீட்டில் சிறிய நுாலகம் கூட வைத்திருக்கிறேன்.உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த சில ஆண்டுகளாக புத்தகங்களே வாசிப்பதில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு, அறம் முதியோர் இல்லத்திற்காக, மீண்டும் என் அறையிலிருந்த சிறிய நுாலகத்தைத் திறந்து, புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். முதலில் முதியோர்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரி புத்தகங்களைப் பட்டியலிட்டேன்.புத்தகங்களை அப்படியே அவர்களின் முன்னே சென்று வாசித்துக் காட்டுவதில் என்ன இருக்கிறது, அதற்கு ஒரு இலக்கிய ஆர்வலன் தேவையில்லையே. எனவே, சில புத்தகங்களை வாசித்து, குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டேன். என் பாணியில் அவர்களுக்குச் சொல்ல தீர்மானித்தேன். மூன்று நாட்களுக்கு பின், அறம் முதியோர் இல்லத்திற்கு அழைத்துப் போனான், சிகாமணி. அன்று, முதியோர்கள் முன், ஒரு பிரபல எழுத்தாளரின் சிறுகதையை விவரித்துச் சொன்னேன். இடையிடையே என் கற்பனையையும் சேர்த்துக் கொண்டதில் எல்லாருமே என் பேச்சை ஆர்வமாகக் கேட்டு, பாராட்டினர். எனக்கு உற்சாகமாக இருந்தது.அவர்களுள் சிலர் தாம் எழுதிய கதை, கவிதைகளை கூறினர். இந்த உலகில் ஒவ்வொரு வருக்குள்ளும் சில கதைகள் இருக்கத்தானே செய்கின்றன. இரண்டு மணி நேரம் செலவழிக்கலாம் என்று போனேன். ஆனால், நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை.அதன் பின், வாரத்திற்கு மூன்று நாட்கள், முதியோர் இல்லத்திற்குப் போய் இலக்கியம் பற்றி பேசத் துவங்கினேன். ஆர்வ மிகுதியால் சில நாட்கள் என் மனைவி வனஜாவும் வந்து, நான் பேசுவதைக் கேட்டாள். சில பலகாரங்களைச் செய்து எடுத்து வந்து, இல்லத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்தாள்.இல்லத்தில் பேசுவதற்காக நிறைய படிக்கத் துவங்கி, குறிப்புகள் எழுதி வைத்தேன். நான் முதியோர் இல்லத்தில் பேசுவதை அறிந்த வேறு சில அமைப்புகளிலிருந்தும் பேசச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. என்னைப் பற்றி அறிந்த சில பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியைகளும் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில், வாரம் ஒருமுறை வந்து, குழந்தைகளுக்கு ஏற்றாற் போல கதைகள் சொல்லலாமே என்றனர். நான் ஆனந்தத்தின் உச்சத்திற்கு சென்றேன்.ஒரு மகள், மகனை பெற்றிருந்தும், பிள்ளைக ளோடும், பேரன், பேத்திகளோடும் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்காத எனக்கு, இதைவிட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?மகள் சுஜாதா, கனடாவில் இருக்கிறாள். அவளுக்கு, இரு ஆண் குழந்தைகள். மகன் வினோத், லண்டனில் இருக்கிறான். அவனுக்கு, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து போகும் மகனும், மகளுமாய் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில், கதை சொல்லும் சாக்கில் அடிக்கடி பள்ளிக் குழந்தைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால், மனதில் உற்சாகம் புகுந்து கொண்டது.பள்ளிக்கூட குழந்தைகளின் வயதுக்கேற்ப எளிய கதைகள், சுயமுன்னேற்றக் கதைகள், இயற்கை பற்றிய செய்திகள் என்று படித்து, குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டேன்.வழக்கமான வகுப்பறையில், கதைகளைச் சொல்லாமல், அவர்களை மரத்தடிக்கு அழைத்து வந்து, இயற்கைச் சூழலில் சொன்னேன். நான் சொன்ன கதைகளை குழந்தைகளின் மொழிகளிலேயே திருப்பிச் சொல்லச் சொன்னேன். பல குழந்தைகள் கதைகளைச் சொல்லக் கேட்கும்போது, மனதிற்கு மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது. நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது, எப்படி என்னைச் சுதந்திரமாக இயங்க அனுமதித்தாளோ, அப்படியே இப்போதும் நடந்து கொண்டாள், வனஜா. ஆனாலும், அவளை பல இடங்களுக்கு அழைத்துப் போனேன். உண்மையைச் சொன்னால், நான் ஓய்வாக இருக்கும் நேரம், மிக குறைந்து போனது.மாதத்திற்கு, 25 நாட்களாவது முதியோர் இல்லத்திற்கும், இலக்கிய அமைப்பு களுக்கும் பள்ளிக் கூடங்களுக்குமாய் சென்று பேசி வந்தேன். இந்த ஆறு மாதங்களில் நன்கு உறங்கினேன். ஆனால், மனம் களைக்கவில்லை, உற்சாகமே நிரம்பி வழிந்தது.அன்று இரவு, 7:00 மணி. வனஜா தந்த சூடான தேநீரைப் பருகியபடி, சில தன்னம்பிக்கைக் கதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். மறுநாள் ஒரு ஆரம்பப் பள்ளி ஆண்டு விழாவில் பேசுவதாகச் சொல்லியிருந்தேன்.சிகாமணி அழைக்கவே, எழுதிக் கொண்டிருந்த நான் எழுந்து போவதற்குள், வனஜாவே, அவரை வரவேற்று, காபி கொண்டு வருவதாக கூறி சென்றாள்.''என்ன முத்து, நாளைக்கு முதியோர் இல்லம் போகலாமா?'' என்றார், சிகாமணி.''நாளைக்கு ஒரு பள்ளி ஆண்டு விழாவுல பேசப் போறேன். மறுநாள் போகலாம்,'' என்றேன்.''என்னம்மா வனஜா, முத்து, இப்ப ரொம்ப, 'பிசி' ஆயிட்டான் போல...'' என்று கிண்டலடித்து, காபியை வாங்கிக் கொண்டான்.''ஆமாண்ணா, எல்லாம் நீங்க பண்ணின ஏற்பாடு தான்.''''முத்து, உன்கிட்டே சொல்ல மறந்துட்டேன். காலைல பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, நம்ம சந்திரன், மணி சகாக்களைப் பார்த்தேன். உன்னை கேட்டானுங்க. அஞ்சாறு மாசமா அவனுங்களைக் கண்டுக்கிறதே இல்லையாமே.''ஆமா, உனக்குத்தான் முதியோர் இல்லம், பள்ளிக்கூடம், இலக்கிய அமைப்புன்னு நிறைய வேலை வந்துடுச்சுல்ல,'' என்று, வனஜாவைப் பார்த்து கண் சிமிட்டிய சிகாமணியை சட்டென்று கவனித்தேன்.வனஜா எதுவும் அறியாததுபோல முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள். ஆனால், முகத்தில் மட்டும் மர்மமான புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. எனக்குள் ஏதோ பொறி தட்டியது.''வனஜாவும், நீயும் சேர்ந்து தான் இந்த வேலையெல்லாம் நடத்தியிருக்கீங்க போல?'' என்றேன்.''என்ன சொல்றே முத்து... எந்த வேலை, நீ என்ன சொல்லுறே?'' என நடித்தான், சிகாமணி.''ம்ம்... அன்னிக்கு ஏதோ தற்செயலா அந்த, அறம் முதியோர் இல்லத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போனேன்னு நினைச்சேன். அப்புறம், இலக்கிய விழா, பள்ளிக்கூடத்துல சிறப்பு வகுப்புன்னு, வேலை வந்தது எல்லாம் யதார்த்தமா நடந்ததுன்னு நினைச்சேன். ஆனா, இப்ப தான் எல்லாம் புரியுது.''''ஆமா, முத்து... நானும், வனஜாவும் திட்டம் போட்டு செய்தது தான். வனஜா தான் உன்னைப் பற்றி சொன்னா. அதான், இனி உன்னை இப்படி விடக் கூடாதுன்னு முடிவெடுத்தோம்.''''ஓ, அப்ப அந்த சந்திரன், மணி சகாக்களோட நான் சேரக் கூடாதுன்னு செஞ்சது தானே?''''ஆமாடா, 40 வருஷமா, உன்னை எனக்குத் தெரியும். ஒரு வெற்றிலை, பாக்கு போடுகிற பழக்கம் கூட கிடையாது. வசதியில்லாத குடும்பத்தில் பிறந்த நீ, தானாகவே படிச்சு வங்கி தேர்வு எழுதி, நல்ல வேலையில உட்கார்ந்தவன். உன் சம்பாத்தியத்துல, இரு தங்கச்சிகளுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சே. ''அப்புறம் வனஜாவைக் கைப்பிடிச்சு, பிள்ளைகளைப் பெத்து, பையனையும், பெண்ணையும் நல்லா படிக்க வெச்சே. நல்ல வேலையில் அமர்த்தி, ஜாம்ஜாம்ன்னு கல்யாணம் நடத்தி வெச்ச வரைக்கும் கூடவே இருந்து பார்த்துட்டுத்தானே வர்றேன்.''ஆனா, 62 வயசு வரைக்கும் நல்ல மனுஷனா இருந்த நீ, 'ரிடையர்' ஆன பிறகு இப்படியொரு கெட்டப் பழக்கத்திற்கு ஆளானதை நினைச்சா, எந்தப் பொண்டாட்டிக்குத் தான் மனசு வருத்தப் படாது. எல்லாம் அந்தப் பொறுப்பில்லாத பசங்களோட சகவாசம்தானே. ''வேற வேலை இல்லைன்னா மனசு கெட்ட வழியிலதானே போகும். ராத்திரியானா, நிறைய நாள் நீ குடிச்சுட்டு வர்றதா, வனஜா என்கிட்ட சொன்னா. உன்னை எப்படி திருத்துறதுன்னு யோசிச்சுத்தான், இந்த வேலையில் இழுத்து விட்டேன்.''இப்ப ஆறு மாசமா நீ, குடிக்கிறத நிறுத்திட்டதா வனஜா சொன்னாள். கேட்குறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு,'' என, சிகாமணி சொன்னதைக் கேட்டு, எனக்கே கொஞ்சம் வெட்கமாகவும், அவமானமாகவும் இருந்தது.உண்மை தான். 'ரிடையர்' ஆன பின், வேறு வேலை எதுவும் இல்லாமல் கெட்ட சகவாசத்தால் குடிக்கத் துவங்கினேன்.''முத்து, சும்மா இருக்கிற மனம், சாத்தான் புகுந்த வீடுன்னு சொல்லியிருக்காங்க. கெட்ட வழியில போறதைத் தடுக்கணும்னா, நல்ல வழியில மனசைச் செலுத்தணும். அதான் உன்னை, நல்ல வழியில எப்பவும், 'பிசி'யா இருக்கிற மாதிரி திருப்பி விட்டேன். திரும்பவும் கெட்ட சகவாசத்தைத் தேடி போக மாட்டேல்ல?'' என -கேட்டு, என் கண்களைக் கூர்ந்து பார்த்தான், சிகாமணி.''இனியும் ஏன்டா அந்த வேண்டாத வழிக்குப் போகப் போறேன். இப்போ நீ ஏற்பாடு பண்ணின இந்த பணியில் திருப்தி கிடைச்சுட்டது. இதுல முழு கவனம் செலுத்தி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதா வாழலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்,'' என்றேன், மனப்பூர்வமாக.புனைபெயர்: கீர்த்தி வயது: 50. படிப்பு: பி.எஸ்சி., வேதியியல்; எம்.ஏ., இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.பணி: கணினி வரைகலை. சொந்த ஊர்: நாகர்கோவில்.வெளியான படைப்புகள்:- பல்வேறு முன்னணி இதழ்களில் கதை, கவிதைகள் வெளியாகியுள்ளன. வாரமலர் இதழில் பரிசு பெறும் முதல் கதை இது.லட்சியம்: மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் படைப்புகளைத் தொடர்ந்து எழுத விருப்பம் கதைக்கரு பிறந்த விதம்: வேறு பணி ஏதுமின்றி பொழுதுபோக்கிற்காக துவங்கும் வேண்டாத பழக்கங்கள், நாளடைவில் அவர்களை அடிமைப்படுத்தி விடுகின்றன. எப்போதும், நல்ல பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர்கள், தீய வழியில் செல்வதில்லை. பலரிடம் இதைப் பார்த்த அனுபவத்திலேயே இக்கதை பிறந்தது.