ஆட்குறைப்பு!
இருநூறு பேர் பணியாற்றும் தொழிற்சாலை அது.தனியார் நிறுவனம் தான் என்றாலும், அதை ஒரு பொது நிறுவனமாக, அரசுக்கு நிகரான அந்தஸ்துடையதாக, சட்ட திட்டங்களை வகுத்து, திறம்பட நடத்திக் கொண்டிருந்தார் அதன் மேனேஜிங் டைரக்டரும், நிறுவனருமான தட்சிணாமூர்த்தி.'சிறந்த தனியார் தொழிற்சாலை' என்கிற விருதை, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது, அவருடைய தொழிற்சாலை.தனக்குச் சொந்தமான தொழிற்சாலையாக இருந்தாலும், தான் வைத்ததே சட்டம் என்கிற கொள்கையிலிருந்து சற்றே விலகி, தொழிலாளர்கள் சார்பில், ஒரு பிரதிநிதியையும் நியமித்திருந்தார் தட்சிணாமூர்த்தி.ஒரு யூனியன் லீடராகச் செயல்பட்ட, அந்த பிரதிநிதி மூலம், எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், அது மிக சுலபமாக, எம்.டி.,யை அடைந்து, சடுதியில் அது தீர்க்கப்பட்டு வந்ததில், ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சி.வழக்கம் போல், அன்று காலை, ஒர்க் ஷாப் மேனேஜருடன், அன்றைய ஆர்டர்ஸ் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் தட்சிணாமூர்த்தி.''சார்... எக்சலென்ட் கம்பெனியிலிருந்து, உங்கள பாக்க ஒருத்தர் வந்திருக்கார்,'' என்றாள் ரிசப்ஷனிஸ்ட், இன்டர்காமில்.''வரச் சொல்லுங்க,'' என்று சொல்லி, ''ரொம்ப நாளா... இவங்க என்னை பாக்க முயற்சி செய்துட்டிருங்காங்க,'' என்றார் மேனேஜரிடம்.''எதுக்கு சார்?''''நம்ம நிறுவனத்த, 'ஸ்டெடி' செய்து, அதை இன்னும் அதிக லாபகரமாய் எப்படி நடத்துவதுன்னு யோசனை சொல்றதுதான் இவங்களோட வேலை.''''அப்படின்னா... நமக்கு இன்னும் நல்லதாச்சே சார்.''''அதனால் தான், வரச் சொன்னேன். நீங்க போய், மத்த வேலைகள கவனிங்க; உங்கள மறுபடியும் கூப்பிடறேன்,'' என்றார் தட்சிணாமூர்த்தி.''ஓ.கே.,சார்,'' என்று, அவர் வெளியேறவும், எக்சலென்ட் கம்பெனி பிரதிநிதி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.''குட் மார்னிங் சார்.''''வெரி குட் மார்னிங்; ப்ளீஸ் பீ ஸீட்டட்,'' என்று, எதிர் இருக்கையைக் காட்டினார்.'' நன்றி சார்.''''சொல்லுங்க...''''சார்... ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரீஸ், மீடியம் ஸ்கேல் இன்டஸ்ட்ரீஸ்களை ஆழமா அலசி, ஆராய்ந்து அதில் இருக்கிற மைனஸ் பாயின்ட்கள களைந்து, புதிய முறைகளையும், உத்திகளையும், நாங்க அறிமுகப்படுத்திட்டு வர்றோம். எங்க ஆலோசனைய ஏற்று நடத்திய எல்லா நிறுவனங்களும், இப்போது எக்கச்சக்கமாய் லாபத்த ஈட்டிக் கொண்டிருக்கின்றன.''''வாவ்... வெரி இன்ட்ரஸ்டிங்; மேலே சொல்லுங்க.''தட்சிணாமூர்த்தி ஆர்வமானதைப் பார்த்து, அந்த பிரதிநிதி, மேலும் பல ஆசை வார்த்தைகள் அடங்கிய வலையை வீசினார்.''எப்படி நீங்க... என் ஒர்க் ஷாப்பை ஸ்டெடி செய்வீங்க,'' என்று கேட்டார் தட்சிணாமூர்த்தி.''வெரி சிம்பிள் சார். ஒரு மாசம், உங்களோட ஒர்க் ஷாப்பில், தொழிலாளர்களோடு தொழிலாளியாய், நான் வேலைக்கு வருவேன். ஒவ்வொரு செக் ஷனா போயி, அங்கே தற்போதைய நிலவரம் என்ன, அதில் மாற்றம் ஏதும் தேவையான்னு அலசுவேன். எந்த விஷயத்த நடைமுறைப்படுத்தினா, லாபகரமாய் இருக்குங்கிறத, என் கம்பெனி எக்ஸ்பர்ட்களோடு கலந்தாலோசிப்பேன். அதன் பின், அவர்களின் அறிவுரைப்படி, பைனல் ரிப்போர்ட் சப்மிட் செய்வேன்.''''அப்ப நீங்க கொடுக்கற அட்வைஸ்படி நடந்தா... லாபம் பாக்கலாம். இல்லையா?'''கண்டிப்பா. இந்த வேலைக்கு நாங்க வாங்கற பீஸ் வெறும், ஒரு லட்ச ரூபாதான். ஆனா, அதனால உங்களுக்குக் கிடைக்கப் போறதோ பல லட்சங்கள்.''''வெல் ஜென்டில்மேன்; உங்க டெர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ் அடங்கிய அக்ரிமென்ட்டை அனுப்புங்க. அதை, அப்ரூவ் செய்றேன். கூடிய சீக்கிரம் நீங்க, உங்க வேலைய ஆரம்பிக்கலாம்.''''நன்றி சார்.''எழுந்து கை குலுக்கி, மகிழ்ச்சியுடன் வெளியேறினார், அந்த பிரதிநிதி.மறு வாரமே, எக்சலென்ட் நிறுவனம், தொழிற்சாலையை அலச ஆரம்பித்து விட்டது.அவர்கள் அனுப்பி வைத்த பிரதிநிதி, தொழிற்சாலையின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு ஒன்று விடாமல், எல்லா பிரிவுகளிலும் நுழைந்து, உன்னிப்பாகவும், நுணுக்கமாகவும் ஆராயத் துவங்கினார்.அவரைப் பார்த்து, தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.'என்ன நடக்கிறது...' என்ற அச்சத்தில் இருந்தவர்களை, யூனியன் லீடர் தீனதயாளன் தான் ஆசுவாசப்படுத்தினார்.''நாம செய்யற வேலையில, எந்த மாதிரியான மாற்றத்த கொண்டு வந்தா, இன்னும் சிறப்பாக செய்யலாம்ன்னு கண்டுபிடிக்கத்தான், இந்த ஆராய்ச்சி. அதனால, யாரும் பயப்பட வேண்டாம்,'' என்றார்.'அப்பாடா...' என, நிம்மதிப் பெருமூச்செறிந்தனர் தொழிலாளர்கள்.ஆனால், அவர்களுடைய நிம்மதி, ஒரே மாதத்தில் சீர் குலைந்தது.எக்சலென்ட் நிறுவனம், தன் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது...'மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்த்ததில், பின் வரும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வேலை விஷயத்தில், எந்த ஒரு மாற்றமும் தேவை இல்லை. தற்போதைய, முறையைப் பின்பற்றினாலே போதும். ஆனால், நிறைய பிரிவுகளில், ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை, இரண்டு பேர் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் யார் யார் அவசியமில்லை என்பதை, நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்ததில், பின் வரும் பிரிவுகளில், 50 தொழிலாளர்களை நீக்கலாம் என, ஆலோசனை வழங்குகிறோம். அதாவது, 200 பேர் பார்க்கிற வேலையை, இனி, 150 பேர் மட்டுமே பார்ப்பர்.'அதனால், வேலை விஷயத்திலோ அல்லது வேகத்திலோ எந்தக் குறையும் வராது. அவ்வாறு, 50 பேர் குறைக்கப்பட்டால், அவர்களின் மாதச் சம்பளம் ஆவரேஜாக, ஒரு ஆளுக்கு 5,000 என்று எடுத்துக் கொண்டாலும், ஒரு மாதத்திற்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு மிச்சமாகும். அதாவது, ஒரு வருடத்துக்கு, 30 லட்சம் லாபம். எந்தெந்த பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை நீக்கலாம் என்கிற விவரப்பட்டியல், இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது...'அந்த அறிக்கையைப் படித்ததும், மகிழ்ந்து போனார் தட்சிணாமூர்த்தி.'அடடா... இந்த விஷயம் இத்தனை நாளா தெரியாமப் போச்சே...' என, வருத்தப்பட்டவர், 'பரவாயில்லை, இப்பவாவது தெரிஞ்சதே...' என, நினைத்து சந்தோஷமடைந்தார்.''சார்... நீங்க என்ன சொல்றீங்க... திடீர்ன்னு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டா எப்படி சார்? ஒரேடியா, 50 பேரை நீக்கறது, என்ன சாதாரண விஷயமா?'' என, பதறினார் யூனியன் லீடர் தீனதயாளன்.''மிஸ்டர் தீனதயாளன்... கம்பெனியோட லாபம்தான் முக்கியம். அதுக்காக, எந்த மாற்றத்தையும் செய்ய நான் தயார். இந்த லிஸ்டில், டிப்பார்ட்மென்ட் வாரியாக மொத்தம், 50 பேரை நீக்க ஆலோனை வழங்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு தொழிலாளியை பத்தியும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறது நீங்க ஒருத்தர் தான். அதனால... யாரையெல்லாம் பணி நீக்கம் செய்யலாம்ன்னு தீர்மானிக்கும் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைக்கிறேன்,'' என்றார் தட்சிணாமூர்த்தி.தர்மசங்கடமாக இருந்தது தீனதயாளனுக்கு.''சார்... நம்ம தொழிற்சாலையில, வேலை செய்யறவங்க எல்லாருமே ஏழைங்க. அவங்கள நம்பி, குடும்பம் இருக்கு; அவங்க குழந்தைகளோட படிப்பும் பாதிக்கும். தயவு செஞ்சு, உங்க முடிவ மாத்திக்குங்க சார்.''கெஞ்சும் குரலில், தன் நியாயமான கோரிக்கையை எடுத்து வைத்தார் தீனதயாளன்.ஆனால், தட்சிணாமூர்த்தி மசியவில்லை.''இதோ பாருங்க தீனதயாளன்... நான் எடுத்திருக்ற இந்த முடிவுல, எந்த மாற்றமும் இல்ல. உங்களுக்கு, ஒரு வாரம் டயம் தர்றேன்; அதுக்குள்ள, 50 பேரோட லிஸ்டை தயார் செய்து, என் மேஜையில கொண்டு வந்து வச்சுடணும்.''கறாராகச் சொல்லிவிட்டார்.தொழிலாளர்கள் சார்பில், தீனதயாளன் எவ்வளவோ போராடிப் பார்த்தும், பயனில்லாமல் போயிற்று.ஆள் குறைப்பு நடக்கப் போகிறது என்கிற சேதி, காட்டுத் தீ போல் பரவியது.தொழிற்சாலை முழுக்க, அந்த திடீர் பதற்றம் தொற்றிக் கொண்டது.தொழிலாளர்கள் அனைவரும், தீனதயாளனை பிடித்து உலுக்கினர்.''நான் என்னப்பா செய்யறது? இது தனியார் நிறுவனம்; முதலாளி, என்ன முடிவு எடுக்கிறாரோ, அதைப் பின்பற்றித்தானே ஆகணும்,'' என்று நழுவிக் கொண்டார்.விவரம் அறிந்த தொழிலாளர்களின் குடும்பங்களும் ஆடிப்போயின.'யார் அந்த, 50 பேர்...' என்கிற பீதியிலே, ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருந்தது.நகரத்தை விட்டு, ஒதுக்குப்புறத்தில், அமைதியான சூழலில் அமைந்திருந்தது தட்சிணாமூர்த்தியின் பங்களா. பங்களாவைச் சுற்றிதான், அமைதியே தவிர, உள்ளே எப்போதும் ஒரே இரைச்சல் தான். மாளிகை போன்ற அந்த பங்களாவில், தட்சிணாமூர்த்தியின் நெருங்கிய உறவினர் பலர், கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். அதனால், கலகலப்புக்கு எப்போதும் பஞ்சமில்லை.காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு, பங்களாவுக்குள் நுழைந்தார் தட்சிணாமூர்த்தி. பங்களா மயான அமைதியில் மூழ்கிக்கிடந்தது.'தாத்தா...' என்று, கூவியவாறு ஓடி வந்து, கட்டிக் கொள்ளும் பேரனைக் காணோம்.'எங்கு போனார்கள் எல்லாரும்...' என்று நினைத்துக் கொண்டே, படி ஏறி, மேல் தளத்திற்கு வந்தார்.''அம்புஜம்...''''என்னங்க,'' என்றவாறு வந்த மனைவியிடம், ''எங்கே ஒருத்தரையும் காணோம்,'' என்று கேட்டுக் கொண்டே சோபாவில் சாய்ந்தார்.''உங்க தம்பி மனைவி, குழந்தைகளைக் அழைச்சிக்கிட்டு, அவங்க கிராமத்துக்குப் போயிருக்கா. உங்க அக்காவும், தங்கச்சியும் சொந்தக்கார பொண்ணு கல்யாணத்துக்கு, குடும்பத்தோடு வெளியூர் போயிட்டாங்க. உங்க மாமா பையனும், அவன் சம்சாரமும் ஏதோ செமினாருன்னு, அதுல கலந்துக்க, பெங்களூரு போயிட்டாங்க. திரும்பி வர, ஒரு வாரமாகுமாம்,'' என, ஒப்பித்தாள் அம்புஜம்.''இதுவரை, யாரும் இப்படி ஒட்டுமொத்தமாக கிளம்பினதில்லையே... அது எப்படி எல்லாரும், ஒரே நேரத்தில் கிளம்பிட்டாங்க,'' என, ஆச்சரியமாக கேட்டார் தட்சிணாமூர்த்தி.''எல்லாம் ஒரு சேர அமைஞ்சுருச்சு; போயிருக்காங்க. அதுக்கென்ன செய்யறது!'' ''சரி, வேலைக்காரங்க எங்கே போய்த் தொலைஞ்சாணுங்க... அவனுங்களக் கூட காணோமே!''''இப்பத்தான் வீட்ல யாரும் இல்லையே, எதுக்கு வீணா இத்தனை வேலைக்காரங்கன்னு, இருந்த அஞ்சு வேலைக்காரங்கள்ல, நாலு பேர வேலைய விட்டு நிறுத்திட்டான் உங்க பையன் ஷ்யாம். இப்ப ஒரே வேலைக்காரன் தான் இருக்கான்.''திடுக்கிட்ட தட்சிணாமூர்த்தி, ''சரி சரி... ஒரு வேலைக்காரன் இருக்கான்ல... அவன் கிட்ட காபி போடச்சொல்லு; ஒரே தலைவலியா இருக்கு.''''இருக்கறது ஒருத்தன்; அவன் எவ்வளவுதான் செய்வான்? காய்கறி வாங்க கடைக்குப் போயிருக்கான்; வர அரை மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் நீங்க காத்திருக்கத்தான் செய்யணும். நான் காபி போடலாம்ன்னா கை வலிக்குது, அயோடெக்ஸ் தடவியிருக்கேன்.''சொல்லிவிட்டு நகர்ந்தாள் அம்புஜம். துவண்டு போனார் தட்சிணாமூர்த்தி.அன்றிரவு, அவருக்குத் தூக்கமே வரவில்லை.'தாத்தா தாத்தா... ஒரு கதை சொல்லுங்க...' என்று, தன் மேல் வந்து விழும் பேரப்பிள்ளை இல்லாமல், மனம் வெறுமையாக இருந்தது.ராத்திரி முழுக்க, அவருக்குள் ஏதேதோ சிந்தனை.'சீராக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், தேவையின்றி ஏற்படும் ஒரு சிறு மாற்றம் கூட சமயத்தில், எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது...' என்று நினைத்தவருக்கு, வாழ்க்கையில் பணத்தையும் தாண்டி, எத்தனையோ விஷயங்கள், இருக்கின்றன. அவற்றை பாதிக்கவிடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம் என்பதும் புரிந்தது.மறு நாள் காலை.முதல் வேலையாக தீனதயாளனை அழைத்து, 'ஆள் குறைப்பு அவசியமில்லை' என, அறிவித்தார் தட்சிணாமூர்த்தி.அந்த சந்தோஷச் செய்தியை, தொழிற்சாலை முழுக்கப் பரப்பினார் தீனதயாளன். ஆனந்த கூத்தாடினர் தொழிலாளர்கள்.மாலையில் பணி முடிந்ததும், மாலையோடு ஒட்டுமொத்தப் பணியாளர்களும், ரகசியமாக, தட்சிணாமூர்த்தியின், மகன் ஷ்யாமை சந்தித்து நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.''என் அப்பா, ஒரு பிடிவாதக்காரர்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அனாவசிய ஆள் குறைப்பால், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை, வீட்டில ஆள் குறைப்புச் செய்து, அவருக்குப் புரியவச்சேன். சிலருக்குச் சொன்னால் புரியாது; உணர வைச்சாத்தான் புரியும். அதைத்தான் நான் செய்தேன். வேற ஒண்ணும் பெரிசா செஞ்சுடல,'' என்றான் அடக்கத்துடன் ஷ்யாம். மலர்மதி